சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த திங்கள் இரவு (டிசம்பர் 23) மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ‘வளாகம் மட்டுமல்லாமல், வகுப்பறையில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி கமிட்டியில் புகார் கொடுத்தாலும்கூட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை’ எனக் கூறுகின்றனர் மாணவிகள்.
பல்கலைக்கழகங்களில் இயங்கும் புகார் கமிட்டிகளின் செயல்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறுகிறார், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.
அண்ணா பல்கலைக்கழகம் மீதான குற்றச்சாட்டு என்ன? மாணவிகளின் புகார்கள் மீது அலட்சியம் காட்டப்பட்டதா?
மாணவர் சங்கத்தினர் போராட்டம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள் இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
மறுநாள் (டிசம்பர் 24) கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அடையாறில் உணவகம் நடத்தி வந்த ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமையன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். ‘மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை’ எனக் கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?
கிண்டியில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி டெக், ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் (SAP) ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வளாகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
“பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் செல்லலாம். இரவு முழுக்க யார் தங்கினாலும் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர்.
பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், “வளாகத்தில் பணம், நகை பறிப்பு சம்பவங்கள் சாதாரணமாக நடக்கும். ஆனால் அதிகாரபூர்வமாக எந்தப் புகாரும் பதிவாகாது.
தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாக மாணவிகள் புகார் கூறினாலும், ‘அந்த இடத்திற்கு நீ எதற்காகச் செல்ல வேண்டும்? அந்தப் பகுதியில் உனக்கு என்ன வேலை?’ என்று பேராசிரியர்கள் எதிர்க் கேள்வி கேட்பார்கள். இதனால் புகார் கொடுக்கவே பலரும் பயந்தனர்” என்கிறார்.
‘போராடியும் நியாயம் கிடைக்கவில்லை’
பல்கலைக் கழகத்தில் மாணவ, மாணவிகள் அளிக்கும் புகார்களை விசாரிப்பதற்கென புகார் மையம் ஒன்று செயல்படுகிறது.
“அங்கு பாலியல் தொல்லை உள்பட அனைத்து புகார்களையும் விசாரிக்க வேண்டும். ஆனால், பெயரளவுக்கே அவை செயல்படுகிறது” என்கிறார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி கிருத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“கடந்த 2019ஆம் ஆண்டில் மனநலரீதியாக எனக்கு பேராசிரியர்கள் சிலர் இடையூறு கொடுப்பதாக புகார் கொடுத்தபோதும், அதை ஏற்று தன்னை விசாரிப்பதற்குக்கூட கமிட்டியினர் அழைக்கவில்லை” என்கிறார் அவர்.
“இறுதி ஆண்டு படிக்கும்போது சக மாணவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அதைப் பற்றி புகார் கூறியும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து போராடியும் நியாயம் கிடைக்காததால், எதிர்காலம் கருதி புகாரைத் தொடரவில்லை” எனவும் கிருத்திகா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தனது பெற்றோரின் ஆதரவு இருந்ததால் தைரியத்துடன் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடிந்ததாகக் கூறும் கிருத்திகா, “மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயல்பாட்டில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.
‘மிரட்டிப் பணம் பறித்தனர்’
அடுத்ததாக பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் ஒருவர், வளாகத்தில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விவரங்களைப் பகிர்ந்தார்.
வளாகத்தில் பல்கலைக்கத்துக்கு தொடர்பில்லாத நபர்கள் சிலர், மறைவாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காதலர்களை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறிப்பதை வேலையாக வைத்திருந்ததாகக் கூறுகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பேராசிரியர்.
மேற்கொண்டு பேசியவர், “இவ்வாறு ஒருவர் மிரட்டிப் பணம் பறிப்பதை அறிந்த மாணவர்கள் சிலர், அந்த நபர்களைக் கையும் களவுமாக பிடித்தனர். இதனால் மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் வெளியில் வரவில்லை” என்கிறார்.
“வளாகத்துக்குள் ஆசிரியர்கள் வரும்போது அடையாள அட்டை கேட்கின்றனர். ஆனால், சாதாரண நபர்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் உள்ளே வந்து செல்கின்றனர். பல்கலைக்கழக கமிட்டிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை” என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.
தற்போதைய நிலை என்ன?
“பல்கலைக்கழக வளாகம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால், வளாகத்துக்குள் வரும் ஒருவரைக்கூட முறையாகக் கண்காணித்தது இல்லை” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ஒருவர்.
தொடர்ந்து பேசிய அவர், “வளாகத்துக்குள் கேன்டீன் ஒன்று செயல்படுகிறது. அங்கு மாணவர்களைத் தவிர வெளியாட்கள் அதிக அளவில் சாப்பிட வருகின்றனர்.
உணவுப் பொருட்களின் விலை மலிவு என்பதால் பலரும் அங்கே வருகின்றனர். மாணவர்கள் தவிர வெளியாட்கள் உள்ளே வருவதைப் பற்றி நிர்வாகம் தரப்பில் கேள்வி கேட்கப்படுவதில்லை,” என்கிறார்.
அருகில் சென்னை பல்கலைக்கழக வளாகம் ஒன்று உள்ளது. அதன் வழியாகவும் பொதுமக்கள் உள்ளே வருவது வழக்கம் என்றும், மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகே வெளியாட்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
பல்கலைக்கழக பதிவாளர் கூறுவது என்ன?
அண்ணா பல்கலைக்கழகம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அவரிடம் இருந்து விளக்கம் பெற முடியவில்லை.
மாணவிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு வாட்ஸ்ஆப்பில் அவருக்குத் தகவல் அனுப்பியும் பதில் வரவில்லை. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனை பலமுறை தொடர்பு கொண்டும் விளக்கம் பெற முடியவில்லை.
அதேநேரம் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விளக்கம் ஒன்றை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
அதில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்போதும் பணியில் உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் விருப்பத்தகாத சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறியுள்ள பதிவாளர், “மாணவர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகத்தின் பதில் என்ன?
மாணவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் சில விளக்கங்களை பிபிசி தமிழுக்கு அளித்தார்.
பல்கலைக்கழகத்தில் எஸ்.சி, எஸ்.டி புகார் கமிட்டி, பாலியல் தொல்லை தடுப்பு கமிட்டி, ஆசிரியர்களுக்கான புகார் கமிட்டி எனப் பல்வேறு குழுக்கள் செயல்படுவதாக அவர் கூறினார்.
அதோடு, “தனக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் முதலில் வகுப்பு ஆலோசகரிடம் (Faculty advisor) பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவிக்க வேண்டும். இந்தப் பொறுப்பில் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அந்த வகுப்பின் தலைவரிடம் (chairman) தெரிவிப்பார். அவர் பணியில் இல்லாவிட்டால் துறைத் தலைவரிடம் புகாரைக் கொண்டு செல்ல வேண்டும். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செமஸ்டருக்கு இரண்டு முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், “பேராசிரியர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டால் பதிவாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
‘கமிட்டிகளை ஆய்வு செய்வோம்’ – அமைச்சர் கோவி.செழியன்
கல்லூரி நிறுவனங்களை ஆய்வு செய்வது போல, வரும் காலங்களில் புகார் கமிட்டிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்யவுள்ளதாக, வெள்ளிக்கிழமை அன்று (டிசம்பர் 27) உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்களின் நலன் காக்கும் வகையில் முதலமைச்சரின் முன்னெடுப்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறியதோடு அவர், மாணவ, மாணவிகள் சந்திக்கக் கூடிய பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
“கல்லூரிகளில் பெண்களுக்கு நேரக்கூடிய பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு கமிட்டி (POSH) அமைக்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால், கமிட்டி தாமாக அவர்களை வரவழைத்து விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.