அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அடையாறு பகுதியில் சாலையோர உணவகத்தை நடத்தி வரும் ஞானசேகரன் என்ற நபரைக் கைது செய்தனர்.
கசிந்த எஃப்.ஐ.ஆர்
காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த சில விவரங்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின.
புகார் அளித்த மாணவியின் பெயர், பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்டவை எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றிருந்த நிலையில், சமூக ஊடகங்களிலும் , வாட்ஸாப்பிலும் இந்த எஃப்.ஐ.ஆர் பகிரப்பட்டது.
இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இக்குழுவிடம் வழக்கின் ஆவணங்களை கோட்டூர்புரம் மகளிர் போலீசார் ஒப்படைத்தனர்.
எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
தற்போது இந்த இரண்டு வழக்குகளையும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
செல்போன்கள் பறிமுதல்
எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் நான்கு செய்தியாளர்களுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் சாட்சி (Witness) என்ற அடிப்படையில் செய்தியாளர்கள் ஆஜராகியுள்ளனர்.
அப்போது, அவர்களில் மூன்று பேரின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
“செல்போனை பறிமுதல் செய்ததற்கான சீசர் மகஜர் ரசீது (seizure mahazar) உள்பட எந்த ஆவணத்தையும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தரவில்லை. பின்னர் நாங்கள் அதுகுறித்து கேட்டபிறகுதான் தந்தார்கள்” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் அசீஃப் பிபிசி தமிழிடம் கூறினார்.
“எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் சாட்சியாக விசாரிப்பதற்காக சம்மனை அனுப்பினர். ஆனால் அதை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினர். சென்னை பத்திரிகையாளர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்ததும் தபால் மூலமாக அனுப்பினர்” எனக் கூறுகிறார் அசீஃப்.
தொடர்ந்து பேசிய அவர், “முதல் தகவல் அறிக்கையைப் பதிவேற்றம் செய்யும் சிசிடிஎன்எஸ் (CCTNS) தளத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்புடைய எஃப்.ஐ.ஆர் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் அதைச் சிலர் பார்த்துள்ளனர். அதில் பத்திரிகையாளர்களும் உள்ளனர். ‘இது தேசிய தகவல் மையத்தின் தவறு’ என்று காவல்துறை விளக்கம் கொடுத்தது. ஆனால் செய்தியாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழு செயல்படுகிறது,” என்றார்.
விசாரணையில் என்ன நடந்தது?
கடந்த 28-ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன் ஆஜரான செய்தியாளர்களிடம் வழக்குக்குத் தொடர்பில்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறும் அசீஃப், “சொத்து மதிப்பு எவ்வளவு, இந்த எஃப்.ஐ.ஆரை எங்காவது விற்பனை செய்தீர்களா, எஃப்.ஐ.ஆரை பதிவேற்றும் சிசிடிஎன்எஸ் தளத்தில் நுழைந்தது ஏன் என்றெல்லாம் கேட்டுள்ளனர்” எனக் கூறுகிறார்.
குற்றம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்கள், சிசிடிஎன்எஸ் தளத்தில் முதல் தகவல் அறிக்கைககளைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாக உள்ளதாகவும் ஆனால் அதைக்கூட சிறப்பு புலனாய்வுக் குழு கேள்விக்கு உள்ளாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் தொலைக்காட்சி சேனல்களில் வெளியானது ஏன் என்று கேட்டபோது, “எஃப்.ஐ.ஆரில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் எதையும் காட்டாமல், குற்றம் குறித்த விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் பகுதியை மட்டுமே காட்டப்பட்டது.” என்று அசீஃப் பதிலளித்தார்.
எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக கடந்த செவ்வாய்க் கிழமையன்று (ஜனவரி 29) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் முறையிட்டார்.
“ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுத் துன்புறுத்துவதால் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டார். வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், “பொதுத்தளத்துக்கு எஃப்.ஐ.ஆர் வந்துவிட்டால் அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். காவல்துறை எல்லை மீறிச் செயல்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்” எனக் கூறினர்.
டிஜிபி சொன்னது என்ன?
இதன்பிறகு தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவாலை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் குழு நேரில் சந்தித்துப் பேசியது. அப்போது அவர், நீதிமன்றமே அமைத்த குழு என்பதால் தன்னால் தலையிட முடியாது எனவும் பொருளைக் கைப்பற்றினால் உரிய ரசீதைக் கொடுக்குமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் நேரில் வலியுறுத்துமாறும் கூறியுள்ளார்.
“டிஜிபி கூறியதைத் தொடர்ந்து, ஜனவரி 31ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவில் உள்ள பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐமான் ஜமால், சினேக பிரியா, பிருந்தா ஆகியோரை எழும்பூரில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் சந்தித்தோம். செல்போன்களை பறிமுதல் செய்துவிட்டு அதற்கான ரசீதைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணத்தைக் கேட்டோம். அதற்கு ஒரு சட்டப் பிரிவைக் கூறினர். மீண்டும் கேட்டபோது, மூன்று பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனுக்கு ஆதாரமாக ஆவணத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தனர்” எனக் கூறுகிறார் அசீஃப்.
கடந்த 31ஆம் தேதியன்றும் வேறு ஆறு செய்தியாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறிய அவர், “அவர்களில் நான்கு பேரிடம் செல்போனை கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்துவிட்டதால் திங்கள்கிழமையன்று ஆஜராகுமாறு கூறியுள்ளனர்” என்றார்.
இதுதொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற முடியவில்லை.
“சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. வழக்குக்கு தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்பதில் தவறு எதுவும் இல்லை. அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவை இருக்கலாம்” என்றார் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி
இந்தக் குழுவின் விசாரணை தொடர்பாக சந்தேகத்தை எழுப்புவது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்கிறார் அவர்.
அதோடு, “சில நேரங்களில் சம்மனுக்கு ஆஜரான நபரிடம் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டு திசை திருப்புவது வழக்கம். இவ்வாறு மடைமாற்றுவதன் மூலம் வழக்குக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியும். இது விசாரணை நடைமுறை. அதைத் தவறு என்று கூற முடியாது” என்றார்.
”பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவு 72ன்படி பாலியல்ரீதியான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை பொதுவெளியில் அடையாளப்படுத்தக் கூடாது. அதையும் மீறி அடையாளப்படுத்தும் நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். இது தண்டனைக்குரிய குற்றம். இது சட்டம் என்பதால் செய்தியாளர்களையும் இது கட்டுப்படுத்தும்” என்கிறார் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி.
”பெயரை வெளியில் கசியவிட்டால் தண்டனை வழங்குவதை புதிய சட்டம் உறுதிப்படுத்துகிறது. பழைய சட்டங்களில் இதுபோன்ற தண்டனை விவரங்கள் குறிப்பிடப்படவில்லை” எனக் கூறுகிறார் அவர்.
‘எட்டு பேர் மீது சந்தேகம்’
“அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆரை சிசிடிஎன்எஸ் தளத்தில் 11 பேர் திறந்து பார்த்துள்ளனர். அதில் மூன்று பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று பார்த்தால் எட்டு பேர் வருகின்றனர்” எனக் கூறுகிறார் பெயர் கூற விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர்.
“யாருடைய செல்போன் மூலம் எஃப்.ஐ.ஆர் பரவியது என்பது தொடர்பாகவே சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு