சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இதை விசாரித்து, தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சராமரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில், விசாரணை குறித்த அறிக்கை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடந்த வாதம்: தமிழக உள்துறை செயலர் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) காவல் துறை வெளியிடவில்லை. பதிவேற்றம் செய்தபோது, தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கசிந்துவிட்டது. எனினும், உடனே முடக்கப்பட்டுவிட்டது. அதற்குள், 14 பேர் பதிவிறக்கம் செய்து பகிர்ந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆணிவேர் வரை விசாரணை நடத்தப்படும். அதேபோல, இதுவரை நடந்த விசாரணையில், ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று காவல் ஆணையர் தெரிவித்தாரே தவிர, ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று முடிவுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. அதிகாரிகள் பணி விதிகளின்படி, காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க எந்த தடையும் இல்லை.
* அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன்: துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பிலான வளாகத்துக்கு அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் முழுவதும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிப்பை மேற்கொள்ளலாம். இவ்வாறு வாதம் நடந்தது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள நபர் ஏற்கெனவே துணை முதல்வர், அமைச்சருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி, அவர் திமுக நிர்வாகி என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ‘‘இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு அரசியல் சாயம் பூச முடியாது’’ என்று கூறிய நீதிபதிகள், அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது: இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை இந்த சமுதாயம் தார்மீக ரீதியாக தண்டிக்கிறது. தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சுதந்திரம், உரிமையை தியாகம் செய்யுமாறு யாரும் அவர்களுக்கு கட்டளையிட முடியாது. வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க வேண்டிய சமுதாயம், அவர்கள் மீது குற்றம் சுமத்த கூடாது. இச்சம்பவத்துக்காக சமூகம் தலைகுனிய வேண்டும்.
ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் ஆசைகள், விருப்பங்கள் இருக்கும். இரவில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்று பெண்கள் விரும்ப கூடாதா. ஆண் நண்பர்களுடன் அவர்கள் பேச கூடாதா. தங்கள் விருப்பம்போல உடை அணிய கூடாதா. இது தனிப்பட்ட ஒருவரது வாழ்க்கை. ஒரு பெண்ணின் விருப்பமின்றி யாரும் அவரை தீண்ட முடியாது. அவருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் போதிய பாதுகாப்பு அளிக்காமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பெண்களை மதிக்குமாறு அனைத்து ஆண்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்ணின் இடத்தில் சமூகம் தன்னை பொருத்திப் பார்க்க இதுதான் சரியான நேரம்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் முறையான வார்த்தைகள் கையாளப்படவில்லை. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்க தவறிவிட்டது. பெண்ணை பற்றிய விவரங்களுடன் எஃப்ஐஆர் வெளியானது, அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டனத்துக்குரியது.
இந்த விவகாரத்தில் காவல் துறை தரப்பிலும், பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பிலும் ஏராளமான குறைபாடுகள் இருப்பதால், வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. இதை அரசு தரப்பும் வரவேற்று, பரிந்துரை அளித்துள்ளது. அதன்படி, காவல் துணை ஆணையர்கள் சினேக பிரியா (சென்னை அண்ணா நகர்), ஐமான் ஜமால் (ஆவடி), பிருந்தா (சேலம்) ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள்.
காவல் துறையின் தவறால் எஃப்ஐஆர் வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இந்த தொகையை வசூலித்துக் கொள்ளலாம்.
கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பை முடிக்க பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை. எனவே, பாதுகாப்பை மேம்படுத்த பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை காவல் ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு டிஜிபி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் எஃப்ஐஆர்-ஐ பாதுகாப்பாக வைக்க அரசு உள்ளிட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளத்தில் வெளியான எஃப்ஐஆர்-ஐ நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
சிறப்பு குழு அமைப்பு: இதைத் தொடர்ந்து, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் உயர் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
‘முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐசி) சிசிடிஎன்எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம். தமிழக காவல் துறை காரணம் அல்ல’ என்றும் வழக்கு விசாரணையின்போது விளக்கப்பட்டுள்ளது. அகில இந்திய பணிகள் நடத்தை விதிகளின் அடிப்படையில், சென்னை காவல் ஆணையர் பேட்டி அளித்ததில் எந்த தவறும் இல்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.