இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரும் பணக்காரர் கௌதம் அதானி. துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை கௌதம் அதானி குழும தொழில்கள் பரவியுள்ளன.
அமெரிக்காவில் தற்போது அதானி கடும் பிரச்னையில் சிக்கியுள்ளார். தன் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் அதனை மறைத்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி குழுமம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை மதியம் வெளியிட்டது, அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அக்குழுமம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முதல் இந்திய தொழிலதிபராக அதானி உள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்குப் பின் அதானியின் உலகளாவிய லட்சியங்களுக்கு பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து கூறிய கௌதம் அதானி, அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறையில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் அதானியின் முதலீட்டு உறுதிப்பாடும் தெளிவற்ற நிலையில் உள்ளது.
குற்றச்சாட்டுகளை மறுத்து, அதானி குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நாங்கள் அவற்றை மறுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
“நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றும், சட்டங்களை மதிக்கும் நிறுவனம் என்பதை எங்கள் கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெரும் பின்னடைவா?
அமெரிக்காவில் அந்நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன.
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மீது மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகு, குழும நிறுவனங்களின் மதிப்பீடுகள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம் என சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பெர்க் அறிக்கை கடந்தாண்டு அதானி குழுமத்திற்கு எதிராக பல்வேறு முறைகேடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலர்களுக்கு மேல் சரிந்தது.
அதானி மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதானிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான உறவு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், அதானியும், பாஜகவும் ஒருவருக்கொருவர் பலனடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்கனவே சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கில் அமெரிக்கக் குடிமகன் குர்பத்வந்த் சிங் பன்னூன்-ஐ கொல்ல இந்திய அரசு அதிகாரி ஒருவர் சதி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்த விவகாரங்களில் டிரம்ப் அரசின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்புக்கும் மோதிக்கும் நல்ல உறவு இருக்கிறது, இருவரும் ஒருவரையொருவர் நண்பர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். ஆனால், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விதிப்பது டிரம்பிற்கு பிடிக்கவில்லை.
என்ன நடந்தது?
கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் உடன், ஆறு பேர் சூரிய சக்தி விநியோக ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (SECI) நிறுவனத்திடமிருந்து எட்டு ஜிகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இதேபோல், அஸூர் பவர் நிறுவனமும் நான்கு ஜிகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவதற்கான டெண்டரைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீட்டாளராக இருந்த ஒரு கனடிய பொது ஓய்வூதிய நிதி மேலாளரும் இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளார்.
ப்ளூம்பெர்க் செய்தியின்படி, சூரிய சக்தி மின்சாரத்தை அதானி மற்றும் அஸூர் பவர் நிறுவனங்கள் கொடுத்த விலையில் வாங்குவதற்கு எந்த நிறுவனத்தையும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் (SECI) கண்டுபிடிக்க முடியவில்லை.
அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், அதானி மற்றும் பலர் இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து, மின் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் வழங்கிய பின்னர், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் SECI உடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆந்திரப் பிரதேச அதிகாரி ஒருவருக்கு 228 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ஈடாக ஆந்திரப் பிரதேசம் SECI-யிலிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சாகர் அதானி குறித்து அமெரிக்க ஆவணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வினீத் ஜெயின் தனது போனில், இந்த லஞ்ச விவகாரத்தில் அஸூர் பவர் பங்கு பற்றிய ஆவணத்தின் புகைப்படத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில், சாகர் அதானி தனது மொபைல் போனை பயன்படுத்தி லஞ்ச விவரங்களை அறிந்ததாக கூறப்படுகிறது. இந்த லஞ்சத்தின் அளவு எட்டு கோடி டாலர்கள்.
லஞ்சத் தொகையை வழங்குவதற்காக அஸூர் பவர் நிறுவன அதிகாரிகளுடன் கௌதம் அதானி ஆலோசனை நடத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பல நாடுகளில் சர்ச்சை
அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ், அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றிப் கௌதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் பொய் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் அதானி சர்ச்சைக்குரியவராக உள்ளார். 2017-ஆம் ஆண்டில், அதானி எண்டர்பிரைசஸ் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகள் எழுந்தன.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்திற்கான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசஸ் பெற இருந்தது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் இதுதான்.
ஆனால், அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்தது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கினர். குயின்ஸ்லாந்தில் ‘ஸ்டாப் அதானி’ (Stop Adani) இயக்கம் 45 நாட்கள் நீடித்தது. ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் சுற்றுச்சூழல் தொடர்பான விதிகளை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது
இலங்கையில் ஜூன் 2022 இல், இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) தலைவர் பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவின் முன் விளக்கம் ஒன்றை அளித்தார்.
அதில், பிரதமர் நரேந்திர மோதி இலங்கையில் மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ‘அழுத்தம்’ கொடுத்ததாக கூறினார்.
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான ஒப்பந்தம், இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோதி சார்பில் அப்போதைய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை, கென்யா முதல் மியான்மர் வரையிலான சர்ச்சைகள்
இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே அதானி குழுமத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.
“மோதியின் அழுத்தத்தில் தான் இருப்பதாக ராஜபக்ஷ என்னிடம் கூறினார்” என்று பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழு முன் கூறியிருந்தார்.
எனினும், ஒரு நாள் கழித்து, கோட்டாபய ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்திருந்தார்.
இதுகுறித்து, அதானி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் முதலீடு செய்வது அண்டை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பதாகும். பொறுப்புமிக்க நிறுவனமாக, இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவின் முக்கியமான பகுதியாக தாங்கள் பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் வங்கதேச உயர் நீதிமன்றம் அதானி குழுமத்தின் அனைத்து மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது என இந்தியாவின் ஆங்கில வணிக நாளிதழான பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது
கடந்த 2021-ஆம் ஆண்டில், அதானி போர்ட்ஸ் மியான்மரின் யங்கூனில் ஒரு கொள்கலன் முனையத்தை உருவாக்கத் திட்டமிட்டது. மியான்மர் ராணுவத்திடம் இருந்து நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதால் அதானியின் இந்த திட்டமும் விமர்சனத்திற்கு உள்ளானது. மியான்மர் ராணுவம் மனித உரிமைகளை மீறுவதாகவும், அதனுடன் அதானி ஒப்பந்தங்கள் செய்து வருவதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
செப்டம்பர் 2024 இல், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கென்யா விமான நிலைய ஆணையத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நைரோபி விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்கும் பொறுப்பை அதானி குழுமம் பெற இருந்தது.
விமான நிலைய தொழிலாளர்கள், அதானிக்கு அப்பொறுப்பு கிடைத்த பிறகு வேலை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர்.
ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா
அதானி குழுமத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக கென்யா அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
மின் பரிமாற்றம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும்.
“வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகிய கொள்கைகளுடன் எங்களின் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு எங்கள் அரசாங்கம் ஒப்புதல் அளிக்காது,” என கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“எங்கள் நாட்டின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களுக்கு எதிரான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” எனவும் அவர் தெரிவித்தார்
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு