உலக பணக்காரர்களில் முக்கியமான நபராக அறியப்படும் இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதானி, இந்தியாவில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் சில ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தங்களுக்கான முதலீட்டை அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் பெற்றபோது லஞ்ச விவகாரத்தை மறைத்ததாக கூறி ‘மோசடி’ குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்ததோடு, அதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் முழுப்பின்னணி என்ன? அமெரிக்க அரசு கூறுவது என்ன? அதானி குழுமத்தின் பதில் என்ன?
இந்த சூழலில் பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் சரிவை சந்திப்பார்களா?
அதானி குழுமத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?
நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, “இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களுக்காக, தோராயமாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை, (கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார்”
”இதனை மறைத்து, அமெரிக்காவில் உள்ள ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை மீறி, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பாண்டுகள் மூலமாகவும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி குழுமம் பெற்றுள்ளது” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி, வினித் எஸ் ஜெய்ன் ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால், சௌரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா உட்பட 7 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அதானி குழுமம் மட்டுமின்றி அஜூர் என்ற நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தகளைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக பொய்களைக் கூறி அதானி குழுமம் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் இருந்தும் முதலீடுகளைப் பெற அதானி குழுமம் முயற்சி செய்துள்ளது,” என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
அரசு அதிகாரிகளை இதில் ஈடுபடுத்தியது எப்படி?
சோலார் எனெர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பித்தக்க எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.
இந்தியாவில் புதுப்பித்தக்க ஆற்றலை அதிகரிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் 2019-2020-க்கு இடைப்பட்ட காலத்தில் அஸூர் பவர் (Azure Power) மற்றும் அதானியின் க்ரீன் எனெர்ஜி நிறுவனத்தின் மானியத்தைப் பெறும் நிறுவனம் ஒன்றுக்கும் சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தை வழங்கியது.
“அதன்படி அஜூர் நிறுவனம் 4 GW மின்சாரத்தையும், அதானி க்ரீன் எனெர்ஜியின் மானியம் பெறும் நிறுவனம் 8 GW மின்சாரத்தையும் SECI-க்கு வழங்க வேண்டும். SECI அந்த மின்சாரத்தை விலைக்கு வாங்கி, விலையை நிர்ணயம் செய்து, இந்த 12 GW மின்சாரத்தை, மாநிலங்களின் மின் விநியோக நிறுவனங்களுக்கு (discoms) வழங்கும்.
ஆனால் இந்த மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்த காரணத்தால், SECI-க்கு மின் விநியோக நிறுவனங்களிடம் மின்சாரத்தை விற்பது கடினமானதாக இருந்தது” என்று அமெரிக்காவில் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும்,” இதனை கருத்தில் கொண்டு அஸூர் மற்றும் அதானி குழுமத்தின் உறுப்பினர்கள் (இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 நபர்கள்) மாநில அரசு அதிகாரிகளிடம், SECI-யிடம் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்றும் அதற்கு ஈடாக லஞ்சம் வழங்கவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சுமத்தப்பட்ட மாநில அரசுகள் SECI-யுடன் மின்சார விற்பனை ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளும். பிறகு அதானி மற்றும் அஸூர் நிறுவனங்கள், SECIயுடன் Power Purchase ஒப்பந்தங்களை உறுதி செய்து கொள்ளும்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் தொடர்ச்சியாக மாநில அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்” என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது
இதன் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருவாயை அதானி குழுமத்தால் ஈட்ட இயலும். இதற்காக அதானி பலமுறை இந்திய அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்துள்ளார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளது அதானி குழுமம்.
ஆந்திர மாநில அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?
“ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான் காலகட்டத்தில் ஒடிசா, ஜம்மு காஷ்மீர், தமிழ் நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசம், SECI-யுடன் எரிசக்தி விற்பனை ஒப்பந்தத்தில் (PSA) கையெழுத்திட்டன.
ஆந்திர மாநிலம் டிசம்பர் 1,2021 அன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்றும், அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆந்திர மாநிலம் 7 GW மின்சாரத்தை பெற கையெழுத்திட்டது. மேலும், இந்த ஒப்பந்தத்தை ஆந்திர ஏற்படுத்த, அம்மாநில அரசுக்கு ரூ.1750 கோடி (200 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாக வழங்கப்பட்டது” என்று அமெரிக்காவின் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது
அப்போது ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்து வந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது அக்கட்சி.
அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரு கிலோவாட்டுக்கு ரூ. 2.49 என்று நிர்ணயிக்கப்பட்ட சலுகைக்கட்டணத்தை SECI வழங்கியது. மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகே, ஆந்திரப் பிரதேசத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதலின் பெயரில் ஆந்திர அரசின் டிஸ்காம்ஸ் SECI-யுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆந்திர அரசின் மின் விநியோக நிறுவனங்களுக்கும் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே நேரடியாக எந்தவிதமான ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிபடும் தமிழ் நாட்டின் பெயர்… மாநில மின்சாரத்துறை அமைச்சர் கூறுவது என்ன?
இந்த ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் குறிப்பிட்ட காலத்தில்தான் தமிழ் நாடு அரசும் SECI-யுடன் ஒப்பந்தம் செய்து மின்சாரத்தை வாங்கி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ” தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கும், அதானி குழுமத்திற்கும் எந்தவிதமான வர்த்தக ஒப்பந்தங்களும் இல்லை,” என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் எரிசக்தி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் வர்த்தகத்தை பாதிக்குமா?
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உள் நாட்டிலும், அந்த குழுமத்தில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ள அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜி.க்யூ.சி. பார்ட்னர்ஸ் எல்.எல்.சி., இந்த குற்றச்சாட்டுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
அதானி குழுமத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக கென்யா அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
மின் பரிமாற்றம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும்
21-ஆம் தேதி அன்று அதானி குழுமத்தின் பங்குகள் 23% ஆக சரிவை சந்தித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹிண்டன்பெர்க் அறிக்கை அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்த போது ஏற்பட்ட பங்கு வர்த்தக சரிவுக்கு பிறகு இந்த நிறுவனம் சந்திக்கும் மிகப்பெரிய சரிவாகும்.
அதானிக்கு இது நாள் வரை கிளம்பிய எதிர்ப்புகள்
2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்க பணிகளுக்கான ஒப்பந்தத்தை அதானி எண்டெர்பிரைஸ் நிறுவனம் பெற இருந்தது.
அதானிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த நிலையில், 45 நாட்கள் அங்கே பொதுமக்கள் “ஸ்டாப் அதானி,” என்ற போராட்டம் நடத்தினர். சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.
இலங்கையின், சிலோன் மின்சார வாரியத்தின் தலைவர் எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோ, 2022-ஆம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி அன்று, நாடாளுமன்ற கமிட்டியின் முன்பு வழங்கிய அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அதானி குழுமத்தின் காற்றாலை மின்சக்தி திட்டத்தை செயல்படுத்த அன்றைய இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்திய அரசியலில் மீண்டும் பேசு பொருளாகும் அதானி விவகாரம்
அதானி குழுமத்தின் பெயர் சமீக காலமாக இந்திய நாடாளுமன்றத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு பெயராக மாறிவிட்டது.
கடந்த ஆண்டு, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வந்தபிறகு அதானி குழும பங்குகள் வரலாறு காணாத அளவு சரியத்துவங்கியது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
தற்போது அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தற்போது இந்திய அரசியலில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி, அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நவம்பர் 21-ஆம் தேதி கூறினார்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அதானியை பாதுகாப்பதாக குறிப்பிட்டார். மேலும், அதானியை இந்தியாவில் கைது செய்யவோ, விசாரிக்கவோ முடியாது. ஏன் என்றால் நரேந்திர மோதி அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார் என்று குற்றம் சுமத்தினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பித் பத்ரா, “இது ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விவகாரம். எனவே அந்த நிறுவனம்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்,” என்று கூறினார்.
மேலும், அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இடம் பெற்றுள்ள நான்கு மாநிலங்களிலும், ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் பாஜக ஆட்சி நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு