சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக எந்த உறவும் இல்லை என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட சூரிய மின் சக்தி ஒப்பந்தத்துக்கும் அதானி குழுமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் பெயர் அடிபடுவது ஏன்?
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்ன?
கௌதம் அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் 8 ஜிகா வாட் சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் (SECI) பெற்றுள்ளது.
சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், மின்வாரியங்கள், மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை அதன் ஊடக தொடர்பாளர் மறுத்துள்ளார். “லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை” எனத் தெரிவித்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் தாங்கள் நிரபராதிகளாகவே கருதப்படுவதாக கூறியுள்ள அதானி குழும ஊடக தொடர்பாளர், வெளிப்படைத்தன்மை, தரமான நிர்வாகம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது ஆகியவற்றில் தாங்கள் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் மட்டுமின்றி, இந்த ஊழலில் அஸூர் பவர் என்ற நிறுவனத்தின் பெயரும் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.
“அதானி நிறுவனத்துக்கு துணை நின்ற அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் கைது செய்து சி.பி.ஐ விசாரணைக்கு இந்த வழக்கை உட்படுத்த வேண்டும்” என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“கூடுதல் கட்டணத்தில் அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ள கே.பாலகிருஷ்ணன், “அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இருப்பதால் முழு விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
என்ன நடந்தது?
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் (SECI) இருந்து சூரிய மின் சக்தி ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது.
இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தைக் கொள்முதல் செய்ய வைப்பதற்காக அதானி பேசியதாகவும் அதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக விவாதித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
யார் அந்த அரசு அதிகாரி?
“ஆந்திராவில் 2200 மெகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் 650 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பெற ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது” என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.
“அதானியிடம் இருந்து தமிழ்நாடு அரசு மின்சாரம் வாங்கியதா… இல்லையா என்பது தற்போதைய பிரச்னை இல்லை” எனக் கூறும் ஜெயராம், “மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷனுக்கு அதானி மின்சாரத்தை விநியோகம் செய்கிறார். அதை வாங்க வைப்பதற்காக மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் அதானியே ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.
“2020-2021 ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. தற்போது தி.மு.க ஆட்சியில் இருக்கிறது. இங்குள்ள எந்த அரசு அலுவலரிடம் பேரம் பேசப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும்” என ஜெயராம் வெங்கடேசன் கூறுகிறார்.
ஒப்பந்தம் போடப்பட்டது எப்போது?
இதே கருத்தை வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில், ‘ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI)) சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் (Power Sale Agreement) மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆந்திர மின்வாரிய அதிகாரிக்கு 1750 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
2021 செப்டம்பர் 16-ஆம் தேதி அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை சோலார் பவர் கார்பரேஷன் மூலமாக பெறுவதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கையெழுத்திட்டுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி சொன்னது என்ன?
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
“அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வணிகரீதியில் எந்த உறவும் இல்லை” என செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில், பல மாநிலங்களைக் குறிப்பிட்டுக் கூறியதில் தமிழ்நாட்டின் பெயரையும் ஒரு வரியில் சேர்த்துவிட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டின் மின் தேவையைக் கணக்கில் கொண்டு மத்திய மின்வாரியத்துடன் 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்கிறார்.
இந்த ஒப்பந்தம் மத்திய அரசு நிறுவனமான சோலார் பவர் கார்பரேஷனுடன் மட்டுமே கையெழுத்தாகியுள்ளதாக, அவர் கூறினார்.
சூரிய மின்சக்தி கொள்முதல் குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, “யாருக்கெல்லாம் சூரிய மின்சக்தி தேவைப்படுகிறதோ, அவர்கள் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் பேசி விலையை இறுதி செய்து ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர்” என்றார்.
அந்த வரிசையில், 1500 மெகாவாட் சூரிய சக்தியைப் பெறுவதற்கு 25 ஆண்டு காலத்துக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
1 யூனிட் மின்சாரம் 2.61 ரூபாய் என்ற மிகக் குறைந்த விலையில் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்துள்ளதாகவும் அதுவே, அ.தி.மு.க ஆட்சியில் 7.01 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சந்தை விலை நிர்ணயம் சரியா?
செந்தில்பாலாஜி கருத்தைச் சுட்டிக் காட்டி பிபிசி தமிழிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், “அ.தி.மு.க ஆட்சியில் சூரிய ஒளி மின்சக்தியை ஒரு யூனிட் 7.01 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டதாக அ.தி.மு.க அரசு கூறியது. இதே விலையை 15 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க அரசு நிர்ணயித்தது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போதைய சந்தை விலை என்பது 2 ரூபாய் என்கின்றனர். சந்தைக்கு ஏற்ப விலையை நிர்ணயித்துள்ளார்களா என்பது ஒப்பந்த விவரங்களை ஆராய்ந்தால் தான் தெரியும்” என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.
தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல் என்பது 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்ததாக கூறுகிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர்.
“தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் இயங்குகிறது. இதற்கு, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதுதான் காரணமா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு