சென்னை: அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு(ஏஇஎஸ்எல்) வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசின் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் கடந்த 2023 ஆகஸ்ட்டில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டன.
பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஏஇஎஸ்எல், சென்னை உட்பட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை மிகக் குறைந்த ஏலத்தில் எடுத்தது. இந்நிறுவனம் 82 லட்சத்துக்கும் அதிகமான ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஏஇஎஸ்எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை கடந்த மாதம் 27ம் தேதி தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் ரத்து செய்தது. ஏஇஎஸ்எல் மேற்கோள் காட்டிய விலை அதிகமாக இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மறு டெண்டர் விட வாய்ப்பு உள்ளது. மற்ற மூன்று தொகுப்புகளுக்கான டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதானி குழுமம் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்ய தொழிலதிபர் கவுதம் அதானி இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2,100 கோடி) லஞ்சமாகக் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும், தங்கள் நிறுவனத்தின் மீதான இந்த குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்துள்ளது.