பட மூலாதாரம், Getty Images
அலுவலகம், வீடு, நண்பர்களின் சந்திப்பு என எங்கு பார்த்தாலும் தற்போது அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு நமது வேலைகளைப் பறித்துவிடுமா? என்பது தான் அது.
இந்தக் கவலை ஆரம்பநிலை ஊழியர்களுக்கு மட்டுமல்ல, உயர் பதவிகளில் இருக்கும் மூத்த அதிகாரிகளையும் வாட்டி வதைக்கிறது.
ஏஐ தொழில்நுட்பத்தால் நமது வேலையை வேகமாகவும், குறைந்த செலவிலும் செய்ய முடியும் என்றால், மனிதர்களுக்கும் அவர்களின் வேலைகளுக்கும் என்ன நடக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி.
தற்போதைக்கு இதற்கான தெளிவான பதில் யாரிடமும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி; ஏஐ என்பது இனி எதிர்காலம் மட்டுமல்ல, அதுவே நிகழ்காலம். மொபைல் போன்கள் முதல் வங்கிச் சேவைகள், ஆன்லைன் ஷாப்பிங், சமூக ஊடகங்கள் மற்றும் சுகாதாரம் வரை அனைத்து இடங்களிலும் ஏஐ ஊடுருவிவிட்டது.
நிபுணர்களின் கருத்துப்படி, ஏஐ வேலைவாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
2026 ஜனவரியில் வெளியான உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) அறிக்கைப்படி, ஏஐ காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
12-ஆம் வகுப்பு முடித்த பிறகு ஒருவர் ஏஐ துறையில் கால்பதிக்க விரும்பினால், சரியான படிப்பைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அது தொடங்குகிறது.
கரியர் கனெக்ட் தொடரின் இந்தக் கட்டுரையில் ஒரு வலுவான எதிர்காலத்தையும் நல்ல ஊதியத்தையும் பெற்றுத் தரக்கூடிய ஐந்து முக்கியமான ஏஐ படிப்புகள் குறித்து இங்கே காண்போம்.
ஏஐ (AI) என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
உங்கள் போன் எப்படி உங்கள் முகத்தை அடையாளம் காண்கிறது? நீங்கள் எந்த மாதிரியான படங்களை விரும்புவீர்கள் என்று யூடியூப், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் எப்படித் தெரிந்து கொள்கின்றன? அல்லது டிரைவர் இல்லாமலேயே ஒரு கார் எப்படி ஓடுகிறது? என்று எப்போதாவது யோசித்ததுண்டா? இவை அனைத்திற்குமான விடை ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence).
ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் ஏஐ துறைத் தலைவரும் பேராசிரியருமான ஆகாஷ் சின்ஹா இதை எளிமையாக விளக்குகிறார்: “ஒரு இயந்திரம் அல்லது கணினி, மனிதர்களைப் போலவே சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனைப் பெறுவதையே செயற்கை நுண்ணறிவு என்று புரிந்துகொள்ளுங்கள்.”
“நீங்கள் யூடியூப் திறக்கும்போது உங்களுக்கு எந்த வீடியோ காட்டப்பட வேண்டும் என்பதை ஒரு நபர் முடிவு செய்வதில்லை. அதன் பின்னால் ஏஐ அல்காரிதம் (Algorithm) செயல்படுகிறது. ஃபேஸ்புக்கில் எந்தப் பதிவு தெரிய வேண்டும், எந்த விளம்பரம் வர வேண்டும் அல்லது வங்கிப் பரிவர்த்தனைகளில் எங்கு மோசடி நடக்கலாம் என்பதையெல்லாம் ஏஐ பகுப்பாய்வு செய்கிறது,” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஐந்து முக்கிய ஏஐ படிப்புகள்
ஏஐ நிபுணரும் டெல்லியில் உள்ள தொழில்நுட்ப கொள்கை நிறுவனமான இசியா மையத்தின் இயக்குநருமான மேக்னா பால் கூறுகையில், “தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு அதனுடன் இணைந்து செயல்படக் கற்றுக்கொள்பவர்களுக்கு ஏஐ ஒரு அச்சுறுத்தல் அல்ல, மாறாக ஒரு வாய்ப்பு” என்கிறார்.
“அனைவரும் சில அடிப்படை நிலை படிப்புகளை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் ‘SWAYAM’ போர்ட்டல் மூலம் பல படிப்புகள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த அடிப்படை பாடத்தை அனைவரும் எடுக்க வேண்டும்.”
“இயந்திர கற்றல் மற்றும் பயன்பாட்டு இயந்திர கற்றல் பற்றிய அடிப்படைக் கருத்துகள் குறித்த ஒரு பாடத்தை நீங்கள் எடுக்கலாம், இது இயந்திரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்கும். வணிகத்திற்குப் பயன்படுத்தப்படும் ஏஐ மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பாடங்களையும் நீங்கள் எடுக்கலாம். இது தரவை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்
“தயாரிப்பு மற்றும் உத்தி மேலாண்மையுடன் தொடர்புடைய ஏஐ ஆக இருக்கலாம், இது தயாரிப்பு, உத்தி மற்றும் மேலாண்மை முடிவுகளை எவ்வாறு எடுப்பது? அவற்றில் ஏஐ எவ்வாறு பயன்படுத்தப்படும்? என்பதை விளக்குகிறது. . இது ஒரு நல்ல பாடமாக இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.
“சைபர் பாதுகாப்புடன் ஏஐ எவ்வாறு இணைக்கப்படலாம் என்பதும் ஒரு சிறப்புப் பாடமாகும், ஆனால் இது குறிப்பாக பொறியாளர்களுக்கானது. சைபர் பாதுகாப்பு மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற படிப்புகள் பொறியியல் துறையில் ஒரு தொழிலைத் தொடர ஏராளமான வாய்ப்புகளை வழங்கும்.”

அவர் பரிந்துரைக்கும் சில முக்கிய படிப்புகள்:
ஏஐ & பிசினஸ் அனலிட்டிக்ஸில் எம்பிஏ/பிஜி பட்டயப் படிப்பு: பிசினஸ், மேனேஜ்மென்ட் மற்றும் காமர்ஸ் பின்னணியில் இருந்து வந்து ஏஐ உத்தி, அனாலிடிக்ஸ் மற்றும் தயாரிப்பு மேலாண்மை படிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்தது. ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM) போன்ற கல்வி நிறுவனங்களில் இதைப் பயிலலாம். இதற்கான கட்டணம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். இதனைப் படித்தால் ஆண்டுக்கு 6 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்புள்ளது.
ஏஐ சான்றிதழ் திட்டங்கள் (ஆன்லைன்): உடாசிட்டி (Udacity) போன்ற தளங்களில் இவை கிடைக்கின்றன. ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் ஏஐ பற்றிய அடிப்படை அறிவைப் பெற இதைச் செய்யலாம். இதற்கான கட்டணம் சுமார் 1.5 லட்சம் ரூபாய். இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்க வாய்ப்புண்டு.
ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங்கில் எம்.சி.ஏ/எம்.டெக்: ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களில் இதைப் பயிலலாம். ஐஐடிகளிலும் ஏஐ பாடங்கள் வழங்கப்படுகின்றன. தொழில்நுட்ப நிபுணராக விரும்பும் இவர்களுக்கான ஆரம்ப ஊதியம் ஆண்டுக்கு 22 லட்சம் ரூபாய் வரை செல்லக்கூடும்.
ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பி.எஸ்சி/பி.டெக்: டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அமிடி பல்கலைக்கழகம், புனித சேவியர் கல்லூரி மற்றும் என்.ஐ.டி போன்ற இடங்களில் இதைப் பயிலலாம். கட்டணம் 1 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை அமையலாம். ஆண்டு ஊதியம் 6 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏஐ பூட்கேம்ப்கள் (Bootcamps): ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே போன்றவற்றில் குறுகிய காலப் படிப்பாக இவை உள்ளன. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் தங்கள் திறனை மேம்படுத்த இது உதவும். இதன் மூலம் 6 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலான சம்பளத்துடன் பணிகளைப் பெறலாம்.
பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் சீனியர் ஏஐ பதவிகளுக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
எந்த வேலைகளுக்கு ஏஐ-யால் ஆபத்து குறைவு?
பட மூலாதாரம், Getty Images
கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) அறிக்கையின்படி, 2030-க்குள் உலகில் 30 கோடி முழுநேர வேலைகள் ஏஐ-யால் மாற்றப்படலாம். ஆனால், மனித அனுபவமும் நிபுணத்துவமும் தேவைப்படும் துறைகளை ஏஐ அத்தனை சீக்கிரம் ஆக்கிரமிக்க முடியாது.
மேக்னா பால் கூறுகையில், “செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலையை ஏஐ-யால் செய்ய முடியாது. மனிதத் தொடர்பு இல்லாமல் மக்கள் இயந்திரத்தின் பதில்களால் திருப்தி அடைய மாட்டார்கள்,” என்கிறார்.
படைப்பாற்றல் மற்றும் விமர்சன ரீதியான சிந்தனை (Critical Thinking) தேவைப்படும் எழுத்தாளர்கள், கிரியேட்டிவ் டைரக்டர்களின் இடத்தையும் ஏஐ-யால் முழுமையாகப் பிடிக்க முடியாது. புதிதாக எதுவும் தேவைப்படாத பணிகள் ஒரே முறையில் செய்யப்படும் பணிகள் ஏஐ-யால் மேற்கொள்ளப்படலாம்.
பேராசிரியர் ஆகாஷ் சின்ஹா குறிப்பிடுகையில், ” பட்டய கணக்காளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஏஐ பொறியாளர்கள் போன்றவர்களின் வேலைகள் பாதுகாப்பானவை. ஆனால், நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டும். உங்கள் வேலைகளை விரைவாக முடித்துக் கொள்ள நீங்கள் ஏஐ கருவிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.”
ஆனால் இந்தப் பணிகள் ஏஐ-யில் இருந்து முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் எனக் கூற முடியாது என்று அவர் தெரிவிக்கிறார்.
“நீங்கள் நிபுணராக உள்ள துறைகளில் உங்களின் வேலை பாதுகாப்பாக இருக்கும். ஏனென்றால் நிபுணர் என்கிற அளவில் மக்கள் ஏஐ-யை நம்புவதற்கு காலம் எடுக்கும். உங்கள் துறைகளில் தொடக்க நிலை அல்லது நடுநிலையில் இருந்தால் உங்கள் பணி ஆபத்தில் உள்ளது. ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் வேலையை இன்னும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்யக் கற்றுக்கொண்டால், உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்,” என்கிறார் அவர்.
தமிழ்நாடு தேர்தல் 2026 – உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு