4
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் வரி விதிப்பு நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து உள்ளதுடன், சில அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக சாடியுள்ளார்.
இந்தியா அதிக வரிகளை விதித்தால், அதற்கு பதிலடியாக அதே அளவுக்கு வரிகளை விதிக்கும் பழிக்கு பழி திட்ட அணுகுமுறையை அமெரிக்காவும் பின்பற்றும் என அவர் கூறியுள்ளார்.
சீனா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக உறவுகள் பற்றிய விரிவான உரையாடலின்போது, டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கின்றன. அவர்கள் அதிக வரிகளை விதிக்க விரும்புகிறார்கள் என்றால் அதனை செய்யட்டும். ஆனால், நாங்களும் அதே அளவுக்கு வரி விதிப்போம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக விவகாரங்களை பற்றியும் இதன்போது ட்ரம்ப் பேசியுள்ளதுடன், அவருடைய அரசில், பொருளாதார கொள்கைகளின் முக்கிய விசயங்களில் ஒன்றாக கூடுதல் வரி விதிப்பது இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்க எல்லை பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத போதை பொருட்கள் கடத்தல், அகதிகள் புலம்பெயர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கனடா மற்றும் மெக்சிகோவின் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 25 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.