சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இயங்கி வருபவராக அறியப்படுகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம், ‘பத்து நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென’ செங்கோட்டையன் கெடு விதித்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, கெடு விதித்த மறுநாளே கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நேற்று (அக்டோபர் 30), அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில் இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
பட மூலாதாரம், ADMK
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
“அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக” எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, ‘துரோகிகளால் தோற்றோம்’ – ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் குறித்து இபிஎஸ்
மதுரையிலிருந்து ஒரே காரில் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பயணம் செய்து பசும்பொன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைக் குறிப்பிட்டு, “டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுவதாக” எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன் விதித்த கெடு
பத்து நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென கே.ஏ. செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் கெடு விதித்திருக்கிறார்.
”கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தல்களில் கட்சியால் வெற்றிபெற முடியும். பத்து நாட்களுக்குள் இதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால் எடப்பாடி கே. பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன். இதே மனநிலையில் உள்ளவர்களுடன் சேர்ந்து, பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான முயற்சிகளைச் செய்வேன்” என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
அவரது இந்தக் கருத்தை வரவேற்பதாக அ.தி.மு.கவின் முன்னாள் நிர்வாகிகளான வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அப்போது தெரிவித்திருந்தனர்.
“கழகம் (அதிமுக) ஒன்றுபட வேண்டுமென்ற செங்கோட்டையனின் கருத்துதான் ஒவ்வொரு தொண்டனின் கருத்தும். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்” என வி.கே. சசிகலா விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.
“‘ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்’ என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம்” என ஓ. பன்னீர்செல்வமும் தெரிவித்தார்.
கெடு விதித்த மறுநாளே கே.ஏ. செங்கோட்டையன் கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவர் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் அதிமுகவைச் சேர்ந்த யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.