• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

“அதிமுகவை மிரட்டிப் பணிய வைக்கும் செயலில் பாஜக ஈடுபடாது!” – முன்னாள் அமைச்சர் செம்மலை நேர்காணல் | Semmalai interview on admk bjp on tamil nadu elections 2026 and other political issues

Byadmin

Mar 9, 2025


தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருந்தாலும் இப்போதே தமிழக அரசியல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. புதிய கூட்டணிகள் உருவாகும் சாத்தியங்கள் தெரிகின்றன. பழைய கூட்டணியை புதுப்பிக்கும் நகர்வுகளும் நடக்கின்றன. வரவிருக்கும் மாநிலங்களவைக்கான தேர்தலை முன்னிறுத்தி யும் கூட்டணி அச்சாரங்கள் போடப்படுகின்றன.

“பாஜக-வுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்த அதிமுக-வும் தங்களுக்கு திமுக தான் ஒரே எதிரி என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செ.செம்மலையிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். இனி அவரது பேட்டி…

மும்மொழிக் கொள்கை விவகாரத்தை வைத்து தமிழக அரசுக்கு கல்விக்கான நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து..?

மொழிக்கொள்கை என்பது வேறு, கல்விக்கொள்கை என்பது வேறு. மொழிக்கொள்கை என்பது அரசின் நிர்வாகத்தோடு தொடர்புடையது. மொழிக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை மறுப்பதும், விடுவிக்காமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது. புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்கமாட்டோம் என்கிற, இருமொழிக் கொள்கையை கடைபிடித்து வரும் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து, ஒட்டுமொத்த நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல.

அதிமுக ஆட்சியில் 2001- 2006 கால கட்டத்தில் நவோதயா பள்ளிகளை தமிழகம் ஏற்க மறுத்தபோது, அப்போது இருந்த மத்திய அரசு, தமிழகத்துக்கான நிதியை நிறுத்தவில்லை. இப்போது மட்டும் ஏன் இந்த பிடிவாதம்? இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது.

தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் திமுக-விடம் இருக்கும் பதற்றம் அதிமுக-விடம் இல்லையே?

இவ்விவகாரத்தின் அவசியம் கருதி தான், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்போம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார். இந்த விவகாரம் இப்போது தொடக்க நிலையில் தான் இருக்கிறது. இதில் இப்போது பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. திமுக வேண்டுமானால் பதற்றம் அடையலாம். தமிழக எம்பி-க்கள் எண்ணிக்கை குறையக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மறுசீரமைப்பு என்ற பெயரில் பாரபட்சம் கூடாது. எனவே, மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு கூடுதல் இடங்களும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு குறைவான இடங்களும் கிடைக்கும் வகையில் உள்ள விதிகள் மாற்றப்பட வேண்டும்.

அமெரிக்க செனட் சபையில் விகிதாச்சார அடிப்படையில் சமமான இடங்களை ஒதுக்குவதை போல இந்தியாவிலும் இருக்க வேண்டும் என்பது தான் அதிமுக-வின் நிலைப்பாடு. புரோ ரேட்டா அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். அது விகிதாச்சார அடிப்படையிலா அல்லது மக்கள் தொகை அடிப்படையிலா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். அனைவரும் கூடிப் பேசி ஒருமித்த கருத்துடன் இதை செயல்படுத்த வேண்டும்.

அடுத்த 60 வாரங்களுக்கு விஜய் தான் தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்கிறாரே ஆதவ் அர்ஜுனா?

அஸ்திவாரம் இல்லாமல் ஆதவ் அர்ஜுனா கட்டிடத்தை எழுப்பப் பார்க்கிறார். சட்டப்படி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ள அதிமுக. நாளை ஆளுங்கட்சி. முல்லைக்கொடி கொழுகொம்பு இல்லாமல் படர்ந்தால், தரையில் மிதிப்பட்டு அழியும். தவெக தலைவர் தான் 60 வாரங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் என்றால், அவருக்கு எது அஸ்திவாரம், ஏது அங்கீகாரம், அவருக்கு யார் கொடுப்பது அங்கீகாரம்? இது அர்த்தமற்ற பேச்சு.

அதிமுக சட்டமன்றக் கொறடா எஸ்.பி.வேலுமணி மகன் திருமணத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாஞ்சையுடன் பங்கெடுத்திருக்கிறார்களே..?

இதில் என்ன தவறு. அழைக்கப்பட்ட அனைத்து கட்சியினரும் மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்துவது தான் தமிழர் பண்பாடு, நாகரிகம். இதை ஏன் அரசியலாக பார்க்க வேண்டும். வேலுமணி மீது வைத்துள்ள மரியாதைக்கு அனைவரும் வந்து கலந்து கொண்ட, குதூகல குடும்ப நிகழ்ச்சி இது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை என்று சொல்லப் போகிறீர்களா.?

அரசியல் களத்தின் எதார்த்தமே அது தான். தேர்தல் நேரத்தில் அரசியல் எதிரி நண்பனாவதும், நண்பன் எதிரி ஆவதும், சந்தர்ப்பம், சூழல் தேவை ஆகியவற்றை பொருத்து அமையும். இந்த நிலைப்பாட்டில் யாருக்கும் விதிவிலக்கு இருக்காது. அது தான் கடந்த கால வரலாறு.

வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்களால் பாஜக கூட்டணிக்கு நிர்பந்திக்கப்படுகிறார் இபிஎஸ் என்கிறார்களே..?

இவ்விரு மூத்த, நம்பிக்கைக்குரிய தலைவர்களும் பொதுவாக நிர்பந்தம் செய்யக்கூடியவர்கள் இல்லை. பழனிசாமிக்கு உற்ற துணையாக பணியாற்றி வருபவர்கள். பழனிசாமி எப்போதும் நிர்பந்தத்துக்கு ஆளாகக் கூடியவர் இல்லை. அவரை யாராலும் நிர்பந்திக்க முடியாது. அவர் தீர்க்கமாக யோசித்து ஒரு முடிவை எடுப்பவர். அவரது முடிவை ஏற்று செயல்படக்கூடிய போர்ப்படை வீரர்கள் நாங்கள். இருவரும் நிர்பந்தித்தனர் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதை.

திமுக-வை தவிர யாரும் எங்களுக்கு எதிரியில்லை என்கிறாரே இபிஎஸ். இதற்கு என்ன அர்த்தம்?

அதிமுக-வை எம்ஜிஆர் தொடங்கியதே திமுக-வை வீழ்த்தத்தானே. எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட திமுக தான் எங்களுக்கு பிரதான அரசியல் எதிரி. அதைத் தான் பழனிசாமி அப்படிக் கூறியுள்ளார். இதில் தவறு ஏதுமில்லை. திமுக-வை 7 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோற்கடித்துள்ளது. 2026 தேர்தலில் 8-வது முறையாக, பழனிசாமி தலைமையிலான அதிமுக நிச்சயம் தோற்கடிக்கும்.

பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் வருவதற்கான முகாந்திரம் தான் இது என்கிறார்களே?

திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளில் பல அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. எந்தெந்த கட்சிகள் என்று இப்போது கூற இயலாது.

திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணிக்கு தயாராகிறதா அதிமுக?

திமுக அரசை வீழ்த்த, எது சரியாக இருக்குமோ, அதை உறுதியாக செய்து முடிப்பவர் பழனிசாமி. இது பலமான கூட்டணியாகவும் அமையும்.

கூட்டணிக்காக தவெக-வும் அதிமுக-வும் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையா?

இது ஊகத்தின் அடிப்படையில் கூறப்படும் செய்தி. கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் வெளிப்படையாகத்தான் நடக்கும். பொதுச்செயலாளர் பழனிசாமி உரிய நேரத்தில் கூட்டணி குறித்த தகவலை வெளியிடுவார்.

விஜய்யுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருந்த வேளையில் தேர்தல் ஆணைய வழக்கை வைத்து அதிமுக-வை பாஜக மிரட்டிவிட்டது என்கிறார்களே?

அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எடுத்த முடிவைத்தான், நிச்சயம் உறுதி செய்யும். அதற்கான ஆதாரங்கள், சட்ட ஷரத்துகள், தேர்தல் ஆணைய முந்தைய வழிகாட்டுதல்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளன. எத்தனை வழக்குகள் நடந்தாலும் அதிமுக-வை மிரட்டவும் முடியாது, மிரட்டி பணிய வைக்கவும் முடியாது. அப்படிப்பட்ட செயலில் பாஜக-வும் ஈடுபடாது. அது அவர்களின் வேலையும் இல்லை.

ஆட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிகள் எல்லாம் தனித்தனியாக நின்றால் வாக்குகள் சிதறி மீண்டும் அது திமுக-வுக்கு சாதகமாக அமைந்துவிடாதா?

தேர்தலில் திமுக-வுக்கு எதிரான வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காக தான் பலமான கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம், கட்டாயம் அதிமுக-வுக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் யாரைச் சேர்ப்பது, யாரை தவிர்ப்பது என்பது குறித்து தேர்தல் நேரத்தில் பழனிசாமி முடிவெடுப்பார். அவர் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஓர் அரசியல் வித்தகர். அதனால் ஆளும் திமுக அரசை வீழ்த்த தீர்க்கமான வியூகத்தை பழனிசாமி வகுப்பார்.

தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் தர சம்மதிக்காததால் அதிமுக கூட்டணியை விட்டு விலகிவிடும் போல் தெரிகிறதே?

தேமுதிக-வும் ஆளும் திமுக-வுக்கு எதிரான மனநிலையில் உள்ள ஒரு அரசியல் இயக்கம். அதிமுக – தேமுதிக கூட்டணி என்பது திமுக கூட்டணியில் உள்ள பொருந்தாத கட்சிகள் போல் இல்லை. யாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும், அதில் தவறில்லை. அதற்காக தேமுதிக மீது ஒரு சந்தேக சாயத்தை பூசக் கூடாது. தேமுதிக, அதிமுக-வுக்கு மிகவும் பொருத்தமான கட்சியாக, நட்போடு தான் பயணிக்கிறது.

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கேட்டு ஜி.கே.மணி மூலமாக அதிமுக-வுக்கு தூது வந்ததாக சொல்வது உண்மையா?

நிச்சயமாக இல்லை. அன்றைய தினம் ஜி.கே.மணி தூதுவராக பழனிசாமியை சந்திக்கவில்லை. தனது பேரன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கவே வந்தார். அவர் வந்த நோக்கத்துக்கு வேறு காரணம் கற்பிக்கக்கூடாது.



By admin