பட மூலாதாரம், TVK
- 
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
 
- 
“ஒரு மாதத்துக்கு முன்பு கூட்டணி தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் தவெக இருந்ததோ அதில் இந்த நிமிடம் வரையில் எந்தவித மாற்றமும் இல்லை” என, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கூறியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
கூட்டணியை அ.தி.மு.க தலைமை எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான வாய்ப்புகளை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அடைத்துவிட்டதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கூட்டணி குறித்த தவெகவின் பேச்சை அ.தி.மு.க எப்படிப் பார்க்கிறது?
பட மூலாதாரம், TVK
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27 ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
“கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் மரணங்களை தவிர்த்திருக்கலாம்” என, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
“விஜயின் பிரசாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பதைக் கணித்து காவல்துறை தரப்பில் உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், ADMK
‘கூட்டணிக்கு பிள்ளையார் சுழி’
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் சிலர் த.வெ.க கொடியை கையில் ஏந்தியபடி நின்றனர்.
இதனைப் பார்த்து உற்சாகம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, “இதோ பாருங்கள்.. கொடி பறக்கிறது” எனக் கூறிவிட்டு, “பிள்ளையார் சுழியை போட்டுவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
அ.தி.மு.க கூட்டத்தில் த.வெ.க கொடி பறந்ததைப் பற்றி ஊடகங்களில் செய்தி வெளிவந்தாலும் அதைப் பற்றி த.வெ.க தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் வெளிவரவில்லை.
ஆனால், அதன்பிறகு அ.தி.மு.க தரப்பில் இருந்து பல்வேறு வகைகளில் த.வெ.கவுக்கு நேரடி அழைப்பு விடுக்கப்பட்டது.
அக்டோபர் 21 அன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “த.வெ.க தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அனுபவம் உள்ள அ.தி.மு.க உடன் இணைந்து பயணிப்பது குறித்து அவர் (விஜய்) ஆராய்ந்து முடிவெடுக்கும் காலம் உருவாகும்” எனப் பேசினார்.
பட மூலாதாரம், Getty Images
சிரஞ்சீவி – பவன் கல்யாண் ஒப்பீடு
“தி.மு.கவை வீழ்த்துவதை லட்சியமாக வைத்துக் கட்சியைத் தொடங்கியுள்ள த.வெ.க தலைமை, இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்” எனக் கூறிய ஆர்.பி.உதயகுமார், ” தி.மு.க ஆட்சியை வீழ்த்தும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. த.வெ.க தொண்டர்களின் விருப்பமாகவும் உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆந்திராவில் தனிக்கட்சியைத் தொடங்கியும் சரியான முடிவெடுக்காத காரணத்தால் தனது கட்சியை சிரஞ்சீவி கலைத்துவிட்டதாகக் கூறிய ஆர்.பி.உதயகுமார், சரியான முடிவை பவன் கல்யாண் எடுத்ததால் இன்று துணை முதலமைச்சராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
“மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கும் தவெக தரப்பில் இருந்து எந்தப் பதிலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.
‘வந்தால் 220… வராவிட்டால் 180’
எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை தொடர்ந்து அக்டோபர் 26 அன்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அ.தி.மு.க கூட்டணிக்கு த.வெ.க வரவேண்டும்” எனப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “அவர் ஒரு நட்சத்திர நடிகர். அவருக்கென செல்வாக்கு உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கவர்ந்திருக்கிறார். ஆனால், அவை ஓட்டாக மாறுவதற்கு பயிற்சியாளர்கள் தேவை” எனக் கூறினார்.
“கூட்டணிக்கு வந்தால் அவருக்கு நல்லது” எனக் கூறிய ராஜேந்திர பாலாஜி, “விஜய் வந்தால் (சட்டமன்றத் தேர்தலில்) 220 சீட்டுகள் கிடைக்கும். வராவிட்டால் 180 இடங்கள் கிடைக்கும். கூட்டணிக்கு வருவது அவரின் எதிர்காலத்துக்கு நல்லது” என்றார்.
“தி.மு.க ஆட்சியை அகற்றுவதற்கு அ.தி.மு.க, பா.ஜ.க, த.வெ.க கூட்டணி அமைய வேண்டும்” எனப் பேசினார் ராஜேந்திர பாலாஜி.
பட மூலாதாரம், TVK
‘நிலைப்பாட்டில் மாற்றமில்லை’ – சி.டி.ஆர்.நிர்மல்குமார்
இந்தநிலையில், கூட்டணி தொடர்பாக த.வெ.க மாநில துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
வியாழக் கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “அ.தி.மு.க உடன் கூட்டணி அமையுமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “ஒரு மாதமாக நாங்கள் அமைதியாக இருந்தாலும் ஊடகங்களில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஊடகங்களின் விவாதத்துக்கு நாங்கள் பதில் அளிக்க முடியாது” எனக் கூறினார்.
“கூட்டணி தொடர்பாக ஒரு மாதத்துக்கு முன்னால் என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதில் இந்த நிமிடம் வரையில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
விஜயின் நிலைப்பாடு என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க – த.வெ.க இடையே மட்டுமே போட்டி உள்ளதாக, ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த த.வெ.க மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
“ஒருபுறம் நேரடி பாசிச பா.ஜ.க கூட்டணி, மறுபுறம் மறைமுக பா.ஜ.க கூட்டணி” என தி.மு.க, அ.தி.மு.கவை அவர் விமர்சித்தார்.
அ.தி.மு.க பாஜகவுடன் நேரடி கூட்டணி வைத்திருப்பதாகவும், தி.மு.க பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் விஜய் விமர்சித்தார்.
தங்கள் கட்சிக்கு திமுக அரசியல் எதிரி எனவும் பாஜக கொள்கை எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார்.
“நேரடி, மறைமுக கூட்டணி வைத்தாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது எனும்போது தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்?”
” எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியின் நிலையை பற்றி அப்பாவி தொண்டர்களே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அ.தி.முக. பா.ஜ.க கூட்டணி பொருந்தா கூட்டணி” என்று விஜய் பேசினார்.
‘எடப்பாடி பழனிசாமியின் பலவீனம்’
“ஒருமாத அரசியல் வனவாசத்துக்குப் பிறகு வெளியில் வந்த த.வெ.க, கூட்டணி தொடர்பாக அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. விஜயை அளவு கடந்து ஆதரித்ததற்கான விலையை அ.தி.மு.க இன்று கொடுத்துள்ளது” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.
“சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறிய கருத்துக்கு த.வெ.க தலைமையில் இருந்து தற்போது வரை மறுப்பு எதுவும் வெளிவரவில்லை. அப்படியானால் அதை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ குரலாகவே பார்க்க முடியும்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டதாக நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி கூறியபோதே விமர்சனங்கள் எழுந்ததாகக் கூறும் ஆர்.மணி, “கூட்டணி தொடர்பாக தன்னுடைய பலவீனத்தை எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் காட்டியதன் விளைவாகவே இதனைப் பார்க்க முடிகிறது” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “விஜயை மையமாக வைத்துப் பேசாமல் த.வெ.க வாக்குகளை மையமாக வைத்து அ.தி.மு.க பேசி வந்தது. அக்கட்சியின் தொண்டர்களையும் த.வெ.க தொண்டர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் கூட்டணி குறித்து பேசினர்” எனக் கூறுகிறார்.
பட மூலாதாரம், ADMK
‘அ.தி.மு.கவின் கனவை கலைத்த த.வெ.க’
“அ.தி.மு.க பக்கம், எந்த சூழலிலும் த.வெ.க கொடி பறக்கவில்லை. புதிய அணி வரப் போகிறது என்றால் மக்கள் உற்சாகமாக இருப்பார்கள் என்ற எடப்பாடி பழனிசாமியின் உத்தி சரியானது தான். அந்தக் கனவை த.வெ.க கலைத்துவிட்டதாக பார்க்க முடிகிறது” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலமைச்சர் வேட்பாளராக விஜயை ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட்டணிக்கு வரலாம் என த.வெ.க கூறிவிட்டது. கூடவே, ஆட்சியில் பங்கு தருவோம் எனவும் தெரிவித்துள்ளது.” என்கிறார்.
“த.வெ.க தலைமையில் தனி அணி அமைந்தால் அ.ம.மு.க உள்பட சில கட்சிகள் சேரலாம். ராகுல் காந்தி மாற்றி முடிவெடுத்தால் மட்டுமே காங்கிரஸ்-த.வெ.க என புதிய கூட்டணி உருவாகும்” எனக் கூறுகிறார் ஷ்யாம்.
“அ.தி.மு.க-பா.ஜ.க-தவெக கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு” எனக் கூறும் ஷ்யாம், “ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் ஆகியோர் முதலமைச்சர் போட்டியில் உள்ளனர். தன் கனவு நிஜமாகும் என விஜய் நினைக்கிறார். ஆனால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும்” என்கிறார்.
‘அ.தி.மு.கவுக்கு இழப்பு ஏற்படும்’
“கூட்டணிக்கு விஜய் வராவிட்டால் அ.தி.மு.கவுக்கு இழப்பு ஏற்படும்” எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, “தற்போதைய நிலையில் தேர்தலில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க என நான்கு முனைப் போட்டிகள் நடக்கும்” என்கிறார்.
“அ.தி.மு.க-பா.ஜ.க-தவெக ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்தால் வெற்றி கிடைக்கலாம். ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என த.வெ.க கூறிவிட்டது. இது அ.தி.மு.கவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆர்.மணி, “அ.தி.மு.கவின் பலம் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசிவிட்டார். மக்களையும் ஊடகங்களையும் சந்திக்காமல் விஜய் அரசியல் செய்கிறார். தனியாக நின்று வெற்றி பெற முடியும் எனவும் அவர் நம்புகிறார்” என்கிறார்.
“2026 சட்டமன்றத் தேர்தல் களம் என்பது தி.மு.க எதிர் அ.தி.மு.க என்பதாகவே அமையும்” எனக் கூறும் ஆர்.மணி, “தி.மு.கவுக்கு எதிரான மனநிலையை அ.தி.மு.கதான் அறுவடை செய்ய முடியும். அ.தி.மு.கவுக்கு எதிரான மனநிலையை தி.மு.கதான் அறுவடை செய்ய முடியும்” என்கிறார்.
“2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நியமிக்கும் அளவுக்கு த.வெ.கவில் அமைப்புரீதியாக பலம் இல்லை” எனக் கூறுகிறார், அரசியர் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
கரூர் சம்பவத்தின் மூலம் அது தெளிவாகிவிட்டதாகக் கூறும் அவர், “எங்களால் தனித்துப் போட்டியிட முடியும் என்பது தவெகவின் நிலைப்பாடாக உள்ளது. இந்த விவகாரத்தில் த.வெ.க என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது பிப்ரவரிக்கு பிறகே தெரியும்” எனவும் குறிப்பிட்டார்.
‘கூட்டணியை தலைவர்கள் முடிவு செய்வார்கள்’ – எடப்பாடி பழனிசாமி
த.வெ.க-வின் விளக்கம் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதியிடம் பிபிசி தமிழ் பேசியது.
“தி.மு.க அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளது. தே.மு.தி.க உடன் கூட்டணி அமைத்து தி.மு.கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதைப்போல 2026 தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதைக் கூறி வருகிறோம்” எனக் கூறுகிறார்.
“கூட்டணிக்காக ஏங்கித் தவிக்கும் நிலையிலும் அ.தி.மு.க இல்லை” எனக் கூறும் காசிநாத பாரதி, “தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ளன. தி.மு.க ஆட்சியை அகற்றுவதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை த.வெ.க முடிவு செய்யட்டும்” என்கிறார்.
“த.வெ.க நிர்வாகிகளின் கருத்தை விஜயின் கருத்தாக பார்க்க முடியாது. கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கு கால அவகாசம் உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
மதுரையில் வியாழக்கிழமையன்று பதில் அளித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி குறித்துக் கட்சித் தலைவர்கள் தான் முடிவெடுப்பார்கள்” எனக் கூறினார்.
2026-ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க ஆட்சியமைக்கும் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி தொடர்பாக த.வெ.க உடன் நாங்கள் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. அவர்களும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்றார்.
நாமக்கல் கூட்டத்தில் த.வெ.க கொடி பறந்தது குறித்துக் கேட்டபோது, “வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பதுபோல என்னை த.வெ.க தொண்டர்கள் வரவேற்றனர்” என அவர் பதில் அளித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
