இன்றைய தினம் (31/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருப்பதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் உள்ளார். சமீபத்தில் செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகின்றது. இந்தச் சூழலில், பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என கூறிவந்த பழனிசாமி, திடீர் பயணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி அன்று செல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதன் பிறகு கூட்டணி குறித்து பல விவாதங்கள் எழுந்தன”, என்கிறது அந்த செய்தி.
மேலும், “இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால், செங்கோட்டையனை வைத்து கட்சியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது”, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக காவல்துறையுடன் மத்திய உள்துறை அமைச் சகம் ஆலோசனை நடத்தியுள்ளது. அவருக்கு எத்தகைய அச்சுறுத்தல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்துள்ளது. அதனடிப்படையில் 8 முதல் 10 வீரர்களை கொண்டு 24 மணி நேரமும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்கிறது இந்து தமிழ் திசையின் அந்த செய்தி.
பட மூலாதாரம், X/@Udhaystalin
மாஸ்டர்ஸ் கால்பந்து – பிரேசிலிடம் இந்தியா தோல்வி
சென்னையில் நேற்று நடந்த கால்பந்து போட்டியில் இந்திய அணி 1-2 என பிரேசில் அணியிடம் தோல்வியடைந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“எப்போதும் விளையாட்டு என்றாலே சென்னை நகர் எங்கும் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும், இது சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணிக்காக இருக்கும். ஆனால் நேற்று இது வேறு காரணத்திற்காக இருந்தது. இது பிரேசில் அணிக்கு ஆதரவாக மஞ்சள் நிறத்தில் திரண்ட கூட்டமாகும். நேற்று சென்னையில் நடந்த கால்பந்து போட்டியில், கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ தலைமையிலான பிரேசில் லெஜண்ட்ஸ் அணி, விஜயன் வழிநடத்திய ‘இந்தியா ஆல் ஸ்டார்ஸ்’ அணிகள் மோதின”, என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தென் கொரியா மற்றும் ஜப்பானில் 2002 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பையில் பிரேசில் அணியில் இடம் பெற்றிருந்த ரொனால்டினோ, ரிவால்டோ, கில்பர்டோ சில்வா உள்ளிட்ட சில நட்சத்திர வீரர்களை காண ரசிகர்கள் ஆர்வமாக மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தனர்.
இந்தியாவின் கால்பந்து அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான விஜயனுக்கும் ரசிகர்கள் குவிந்தனர். இந்த போட்டியை பிரேசில் கால்பந்து அகாடமியின் ஆதரவுடன் பூட்பால் பிளஸ் சாக்கர் அகாடமி நடத்தியது. நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த போட்டியை காண தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்”, என்கிறது அந்த செய்தி.
“இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பிரேசில் அதிக ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்தது, ஆனால் இந்தியா முதல் பாதியில் சிறப்பாகவே விளையாடியது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்ததால் ஆட்டம் சூடுபிடித்தது. போட்டி முடியும் சமயத்தில் பிரேசிலின் ரிக்கார்டோ ஒலிவேரா ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றுத்தந்தார். தொடர்ந்து போராடிய இந்திய வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது”, என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதிய சலுகை: பெண் பெயரில் சொத்துப் பதிவு செய்தால் 1% கட்டணம் குறைகிறது
பட மூலாதாரம், Getty Images
பத்திரப்பதிவில் பத்திரப்பதிவில் ஒரு சத–வீத கட்டண சலுகை அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த சலுகை நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வரும் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்–திடும் வகை–யில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், ‘தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிர் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவார்கள். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என அரசு உறுதியாக நம்புகிறது’ என கூறப்பட்டுள்ளது”, என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழகத்தில் பதிவு கட்டணமாக 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் அதிகபட்சம் 10 லட்சத்துக்கு வரையிலான சொத்துக்களை வாங்க 20 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் 10 ஆயிரம் செலுத்தினால் போதும், இதன்மூலம் 10 ஆயிரம் ரூபாய் மிச்சமாகலாம். 10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை பதிவு செய்யும் மகளிர் இந்த சலுகையை பெற முடியாது” என்று ஓய்வுபெற்ற பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தினத்தந்தியிடம் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
மது விற்பனை செய்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்க உதவிய காவலர்கள்
“கள்ள சந்தையில் மது விற்பனை செய்த பெண் மாற்றுத் திறனாளிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து மணிமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் உதவி செய்துள்ளனர் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
“காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இரு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளி பெண் ஸ்டெல்லா மேரி ஆவார். இவரது கணவர் சுரேஷ் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். சுரேஷுக்கு ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால், குடும்ப செலவுகளை சமாளிக்க, ஸ்டெல்லா மேரி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கள்ளத்தனமாக சட்டவிரோதமான முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார். அவர் மீது 6 முறை மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்”, என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்நிலையில் ஸ்டெல்லா மேரியை நேரில் சந்தித்த மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன், ‘இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது’ என வலியுறுத்தியதன் பேரில் கடந்த 3 மாதங்களாக அவர் திருந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென ஸ்டெல்லா மேரி மணிமங்கலம் காவல்துறையினரிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க அவரது கணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் முன்பானமாக செலுத்தி புதிய ஆட்டோவை காவல் ஆய்வாளர் அசோகன் வாங்கி கொடுத்துள்ளார்”, என்றும் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில் மாற்றுத் திறனாளி பெண்ணின் மறு வாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்த மணிமங்கலம் காவல்துறையினரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் திசையின் அந்த செய்தி.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
வெளிநாட்டு முதலீடுகள் – இலங்கை ஜனாதிபதி புதிய விளக்கம்
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சாதகமாக அமையும் வெளிநாட்டு முதலீடுகளை மாத்திரமே ஏற்போம் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார் என்று வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
“மாத்தறை – தெய்யந்தர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் ‘இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் மாதம் 5 ஆம் தேதி 120 மெகாவாட் சூரிய மின்நிலையத் திட்டத்தை ஆரம்பிப்போம். இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் அனைத்தையும் மீண்டும் ஆரம்பிப்போம். இடைநிறுத்தப்பட்டுள்ள வீதி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மீண்டும் ஆரம்பிக்க சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் அம்பாந்தோட்டை பகுதியில் சீன முதலீட்டுடன் பாரிய அபிவிருத்தி கருத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். ஆகவே பல்வேறு வழிகளில் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது’ என்று ஜனாதிபதி பேசினார்”, என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மேலும் பேசிய அவர், ‘நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடைய வெளிநாட்டு முதலீடுகளை மாத்திரமே செயற்படுத்துவோம். 2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த வேண்டும். வெளிநாட்டு கையிருப்பை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வோம்.இந்த ஆண்டு 25 இலட்சத்துக்கும் அதிகளவான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். அநுராதபுரம் பகுதியில் உள்ள கலாச்சார அம்சங்களை மேம்படுத்தி அதனுடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதற்கு இந்தியா முழுமையான நிதியுதவி வழங்குவதாக இணக்கம் தெரிவித்துள்ளது. இந்திய அரச தலைவர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகைத் தரவள்ளார். ஜப்பான், வியட்நாம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் எமக்கு அழைப்பு விடுத்துள்ளது. சகல நாடுகளுடன் இணக்கமாகவே செயற்படுவோம்’ என்றார்”, என வீரகேசரியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.