ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் அமைதி காத்தேன். பல தியாகங்களை செய்தேன். தன்னை விமர்சித்தவர்களை அரவணைத்துச் சென்று கட்சியை உறுதியாக வழிநடத்தியவர் ஜெயலலிதா.
2017-ல் ஆட்சி அமைந்த பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற, 2023 உள்ளாட்சித் தேர்தலில் கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்தது.
நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோருடன் நானும் இணைந்து கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்தோம். பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், அதனை ஏற்கும் மனநிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் இல்லை.
2010-ல் தேர்தல் களத்தில் கழகம் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், கோவை குலுங்கியது, மதுரை நடுங்கியது, திருச்சி திரும்பியது என்று சொல்லும் அளவுக்கு மாநாட்டிற்கு கூட்டம் வந்தது. இருந்தபோதும் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து ஜெயலலிதா வெற்றிபெற்றார். 2016லும் அப்படித்தான் வெற்றிபெற்றார். வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், எந்தத் தியாகத்தையும் செய்து பணியாற்றுகிறோம் என்று சொல்கிறார்கள்
நாம் எல்லோரும் தவித்துக்கொண்டிருக்கிறோம். யார் இதை எடுத்துச் சொல்வது என்ற நிலையில், நான் இதைப் பேசுகிறேன்.
கழகம் பின்னடைவை சந்தித்த போதெல்லாம் ஜெயலலிதா அனைவரையும் அரவணைத்துச் சென்று கட்சியை வலுவுடன் மீண்டு வரச் செய்துள்ளார். ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை.
மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்றால், அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை கட்சிக்குள் எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைக்க வேண்டும். மறப்போம், மன்னிப்போம் என்ற வகையில் செயல்பட்டு கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வெளியேறி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முயற்சிக்க வேண்டும். எல்லோரும் ஒன்றாக இருந்தால் கட்சி வலுப்பெறும். மாபெரும் வெற்றியைப் பெற முடியும். அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள தயார்”
“யாரை இணைப்பது என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம். நான் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு 10 நாட்கள் என்ற காலக்கெடுவும் உள்ளது. அது நிறைவேற்றப்படவில்லை என்றால், ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து முடிவெடுப்போம்” என்று செங்கோட்டையன் கூறினார்.
செங்கோட்டையன் தனது செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஓரிடத்தில் கூட குறிப்பிடவில்லை. இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், பொதுச்செயலாளர் என்றே அவர் குறிப்பிட்டார்.
அவர் என்ன பேசப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் அந்தப் பகுதியில் கூடியிருந்தனர்.
முன்னதாக, செப்டம்பர் 2-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியினருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டார் கே.ஏ.செங்கோட்டையன். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேச உள்ளதாகக் கூறி, அதிமுக கட்சியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு