தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் திமுகவை அதிமுக முந்தியுள்ளது. ஆனாலும், கூட்டணியில் பல முடிவுகளை பாஜகவே எடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முடிவுகளை டெல்லியில் எடுத்துவிட்டு அதிமுக அலுவலகத்தில் வைத்து அறிவிப்பதில் என்ன பெருமை இருக்கிறது என்று திமுக வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்தது.
ஆனால், தொகுதி பங்கீட்டில் இறுதி முடிவை எடுத்தது அதிமுகதான் என்று கூறும் அக்கட்சி நிர்வாகிகள், பாஜகவுக்கு அவர்கள் கேட்ட தொகுதிகளை விட குறைவான இடங்களே கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.
தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, அதிமுகவுக்கு மெஜாரிட்டி இடங்கள் கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கலாம்? அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் என்ன சொல்கிறார்கள்?
அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களைப் பெற்றிருந்த பாஜகவுக்கு தற்போது 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த முறை 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பாமகவுக்கு இப்போது 18 தொகுதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து வெளியேறி டிடிவி தினகரனால் துவக்கப்பட்டு, கடந்த முறை தனித்து களம் கண்ட அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமாகாவுக்கு 5 தொகுதிகளும், ஜான் பாண்டியனுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுபற்றி, தமாகா மாநில துணைத்தலைவர் விடியல் சேகரிடம் கேட்டபோது, ”கட்சியின் நலன் கருதி எங்கள் தலைவர் எடுத்த முடிவு. தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதே எங்களது கோரிக்கையாக இருந்தது. தற்போது பாஜக கேட்டுக்கொண்டபடி, இந்த முடிவை எங்கள் தலைவர் எடுத்திருக்கிறார். தேர்தல் நெருங்கி விட்டதால் விரிவாகப் பேசுவதற்கு நேரமும் சூழ்நிலையும் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணம்.” என்றார்.
புதிய தமிழகம் தங்கள் கூட்டணியில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.
பட மூலாதாரம், EPSTamilNadu/X
திமுக விமர்சனம்
அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பற்றி பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் எடுக்கப்பட்ட முடிவை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து அறிவிப்பதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது.” என்றார். தினகரனும், அன்புமணியும் தொகுதிப் பங்கீட்டுக்காக அதிமுகவில் யாருடன் எங்கே பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
”ஜெயலலிதா இருந்தவரை பாஜக தலைவர்கள் யாரையும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உள்ளேயே அனுமதிக்கவில்லை. இதுவரை ஜெயலலிதா மட்டுமே நின்று அதிமுக தொண்டர்களிடம் கைகாட்டிய அதிமுக தலைமைக் கழக பால்கனியில் இப்போது பாஜகவின் பியூஷ் கோயலை நிறுத்தி கைகாட்ட வைத்ததுதான் எடப்பாடி பழனிசாமி செய்துள்ள மிகப்பெரிய சாதனை.” என்றார் ஆர்.எஸ்.பாரதி.
தொகுதி பங்கீடு – பாஜக கூறுவது என்ன?
ஆனால், தொகுதி பங்கீட்டில் அதிமுகவுக்கு பாஜக எந்தவொரு நிர்பந்தத்தையும் தரவில்லை என்கிறார், பாஜக விவசாய அணியின் மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜி.கே.நாகராஜ், ”2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நின்றபோது, 80 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்திருந்தது. அதன் அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் 80 சீட்டுகள் வேண்டுமென்று அண்ணாமலை கேட்டுக்கொண்டிருந்தார். அது முடியாதென்று 45 தொகுதிகளாவது வேண்டுமென்று அமித்ஷா பேசினார். அதை எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாததால்தான் பியூஷ் கோயலின் பயணம் 2 முறை தள்ளிப்போனது.” என்றார்.
”அமமுக கேட்ட தொகுதியை தரமுடியாது என்று அதிமுக கூறியபோது, அமித் ஷாவிடம் பேசுவதாக தினகரன் கூறிய போதும் தனது முடிவை எடப்பாடி பழனிசாமி மாற்றிக்கொள்ளவில்லை. அமித்ஷாவால் இங்கே வர இயலாத சூழலில்தான் அவர் டெல்லி சென்றார். அங்கேயும் தன் முடிவில் தெளிவாக இருந்தார். எத்தனை தொகுதிகளில் எந்தக் கட்சி நின்றால் ஜெயிக்க முடியுமென்பதை விளக்கினார். தினகரனும், அன்புமணியும் டெல்லி சென்றது தொகுதி பங்கீடு பேற்றி பேசுவதற்கில்லை. தேர்தல் வியூகம் பற்றிப் பேசவே” என்றார் நாகராஜ்.
பாஜகவுடன் இருந்தால்தான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியுமென்று எடப்பாடி பழனிசாமி நம்பியதால்தான், பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி சில கட்சிகளை அவர் இணைத்துக் கொண்டார் என்று கூறும் நாகராஜ், ஆனால் தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்தது அவர்தான் என்கிறார். இந்த விஷயத்தில் அதிமுகவுக்கு பாஜக எந்த நிர்ப்பந்தத்தையும் கொடுக்கவில்லை என்கிறார் ஜி.கே.நாகராஜ்.
பட மூலாதாரம், RSBharathiDMK/X
படக்குறிப்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
தொகுதி பங்கீடு பற்றி சென்னையில் பேசினாலும், டெல்லி சென்று பேசினாலும் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவே ஒப்பந்தமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக பார்க்க வேண்டுமென்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற இடங்களை விடவும் குறைவாக அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு சீட் ஒதுக்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது சாதுர்யத்தையும், அரசியல் அனுபவத்தையும் வெளிப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”பாமகவுக்கு 18 தொகுதிகள் என்பது இங்கேயே முடிவாகிவிட்டது. அமமுகவுக்கு மட்டுமே எவ்வளவு தொகுதி, என்ன சின்னம் என்பதை பாஜக பேசியதாகத் தெரிகிறது. 2019, 2021 தேர்தல்களில் நட்சத்திர ஓட்டலில்தான் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. இப்போது அதிமுக அலுவலகத்திற்கே அழைத்துவந்து டீலை முடித்திருப்பது எடப்பாடி பழனிசாமியின் முதல் சாதனை. அதை விட மூன்றாவது முறையாக மத்தியில் ஆளும்கட்சியாகவுள்ள, நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவீதம் வாக்குகள் வாங்கிய பாஜகவுக்கு காங்கிரசை விட ஒரு தொகுதி குறைவாக நிர்ணயித்தது பழனிசாமியின் ஆளுமையின் வெளிப்பாடு. பாஜக 40, 45 என்று கூறி வந்த நிலையில், 27 தொகுதிதான் என்று முடிவெடுத்தது மிகப்பெரிய விஷயம்தான்.” என்றார் குபேந்திரன்.
அதிமுக கூட்டணியில் ஜெயலலிதா போன்ற ஆளுமையுள்ள தலைவர் இல்லாத நிலையில், அங்கே பேச்சுவார்த்தையில் இழுபறி என்பது ஒரு பிரச்னையில்லை என்று கூறும் அவர், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக கடந்த பல ஆண்டுகளாக காப்பாற்றி வரும் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இவ்வளவு இழுபறியானது நல்லதல்ல என்கிறார் அவர்.
ஆனால் ஆர்.எஸ்.பாரதியோ, ”அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்தே கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள இடத்தில்தான் திமுக போட்டியிடுவது வழக்கம். இங்கே ஆரோக்கியமான அணுகுமுறை இருக்கிறது. ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.” என்றார்.
அதிமுக கூட்டணியில் எல்லாவற்றையும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுகதான் முடிவு செய்தது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் அழுத்தமாகக் கூறுகிறார். எந்தக் கட்சி எவ்வளவு சீட் கேட்டது என்பதும், ஆனால் எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பதும் எல்லோருக்கும் தெரியும், அதை ஊடகங்கள் மறைக்கின்றன என்றார்.
”பாஜக 20 கேட்டு அதிமுக 27 கொடுக்கவில்லை அல்லது 27 கேட்டு 27 ஐயும் கொடுக்கவில்லை. கூடுதலாகக் கேட்டு குறைவாகத்தான் தரப்பட்டுள்ளது என்றால் இதை யார் முடிவு செய்தது என்பதை யாராலும் யூகிக்க முடியும். தினகரனும், அன்புமணியும் தமிழகம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்த டெல்லி போயிருக்கலாம். ஆனால் தொகுதிகளை முடிவு செய்தது அதிமுகதான்.” என்றார் அவர்.
அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் பாஜக என்ன செய்யும்?
அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான அளவுக்கு வெற்றி கிடைக்காத பட்சத்தில் என்ன நடக்க வாய்ப்புள்ளது என்பது பற்றிய விவாதம் இப்போதே வலுக்கத் துவங்கியுள்ளன.
”அதிமுக 117க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றால் பாஜக என்ன செய்யும் என்பதை இப்போது கணிக்க முடியாது. இரு கட்சிக்கும் இடையில் திரைமறைவாக என்ன ஒப்பந்தம் போட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் பிற மாநிலங்களில் செய்ததை இங்கேயும் பாஜக செய்யும் என்பது நிச்சயம். ஏனெனில் அந்த கூட்டணியில் பல கட்சிகள், அதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.” என்றார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
ஆனால், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதை நாங்கள் திட்டவட்டமாக நம்புவதாகத் தெரிவித்தார் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன்.
”தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை வருவதற்கு வாய்ப்பேயில்லை. தமிழக மக்கள் தெளிவான முடிவைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இரட்டைத் தலைமை இருந்தபோதே, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை துணிச்சலாக எடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அது மட்டுமின்றி அதிமுகவில் ஏக்நாத் ஷிண்டேக்கள் யாருமில்லை.” என்றார் கோவை சத்யன்.
அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில், பாஜக நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பது பற்றி கருத்து தெரிவித்த பாஜக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஜி.கே.நாகராஜ், ”அப்படியொரு சூழல் வந்தால் அப்போது பாஜக மட்டுமே நடுநிலையுடன் இருந்து ஒரு ஆட்சியை அமைக்க உதவ முடியும். உதாரணமாக அதிமுக 80 தொகுதிகளில் வென்று, நாங்கள் உட்பட பிற கட்சிகள் 40–50 தொகுதிகளில் வென்றால் பாஜகவால் மட்டுமே ஆட்சியை அமைக்க உதவ முடியும். தவெக 30 இடங்களில் வென்றிருந்தால் அதையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து ஆட்சி அமைக்க உதவ முடியுமென்றால் அது பாஜகவால் மட்டுமே சாத்தியம்.” என்றார்.