சென்னை: அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டணி ஆட்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகிய இருவரும் எடுக்கும் முடிவே இறுதியானது. தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி, அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம். திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு. தமிழக மக்கள் நலன் கருதி, எல்லோரும் பாஜகவுடன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நயினார் நாகேந்திரன் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: ‘கோவை, திருப்பூர் பகுதிகளில் லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 30 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கலந்துபேசி நெசவு கூலி இறுதி செய்யப்படும்.
ஆனால், 2022 ஒப்பந்த கூலியை முழுமையாக வழங்காமல் குறைத்து வழங்குவதால், விசைத்தறியாளர்கள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்கட்டணம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான புதிய கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து பலமுறை முறையிட்டும் சரியான தீர்வு கிடைக்காததால், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காமல் இருப்பதால் அப்பகுதியின் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நியாயமான கூலி உயர்வை உறுதி செய்து விசைத்தறியாளர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.