பட மூலாதாரம், Edappadi K Palaniswami/X
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
‘2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்’ என்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இரு கட்சிகளும் இணைந்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைக்கப் போவதாகவும் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
‘பாஜகவுடன் மீண்டும் அ.தி.மு.க கூட்டணி சேருமா?’ எனப் பேசப்பட்டு வந்த நிலையில், கூட்டணி ஆட்சிக்கே எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? அமித் ஷா பேச்சுக்கு தி.மு.க, அ.தி.மு.க சொல்லும் பதில் என்ன?
களை கட்டும் தமிழக அரசியல் களம்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களை கட்டிவிட்டது. கடந்த மாதம் 25ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தைப் பார்ப்பதற்காகவே டெல்லி சென்றதாகக் கூறிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதே நாளில் சந்தித்துப் பேசினார்.
அப்போது அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து உறுதியான பதில் வராத நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ‘2026ஆம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று தமிழிலும் ஹிந்தியிலும் பதிவிட்டிருந்தார். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி அமையப் போவதாக அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
கூட்டணி ஆட்சி – அமித் ஷா அறிவிப்பு
பட மூலாதாரம், @annamalai_k/x
இந்த நிலையில், வெள்ளிக் கிழமையன்று (ஏப்ரல் 11) அ.தி.மு.க உடனான கூட்டணியை அமித் ஷா உறுதி செய்தார். அப்போதும், கூட்டணி ஆட்சி என்பதை மீண்டும் அவர் உறுதி செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து கூட்டணி ஆட்சியை அமைக்கும்” எனக் கூறினார்.
“சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமையுமா?” எனக் கேட்டபோது, ” கூட்டணி ஆட்சிதான் அமையப் போகிறது. அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும்” என அமித் ஷா கூறினார்.
“வெற்றி பெற்றால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஆவார்களா?” எனக் கேட்ட போது, “வெற்றி பெற்ற பிறகு கூறுகிறோம். தற்போது எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோதி தனது எக்ஸ் பக்கத்தில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள இதர கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாட்டைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்” எனக் கூறியுள்ளார்.
“தி.மு.க அரசை வீழ்த்துவது முக்கியமானது. அதை நமது கூட்டணி செய்து முடிக்கும்” எனவும் பிரதமர் மோதி குறிப்பிட்டிருந்தார்.
‘கூட்டணி ஆட்சி’ என்ற பா.ஜ.க-வின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா பேசியதை எடப்பாடி பழனிசாமியும் ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், கூட்டணி ஆட்சி தொடர்பான எந்தக் கருத்தையும் அவர் வெளியிடவில்லை.
கூட்டணி ஆட்சி – பா.ஜ.க மாடலா?
அமித் ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. “2014ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க செயல்படுத்தி வரும் மாடல் இது” எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ்.
“தேர்தல் முடிவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்தாலும் களத்தில் தங்களுடன் பணியாற்றிய கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பது என்ற முடிவை 2014ஆம் ஆண்டு பிரதமர் மோதி செயல்படுத்தினார்” என அவர் குறிப்பிட்டார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இது ஓர் ஆரோக்கியமான மாடல். இதைப் பேச்சுவார்த்தையின் போது எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க தலைமை புரிய வைத்திருக்கலாம். அதனால்தான் அவர் தலைமையில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறினார்” என்கிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. ஆனாலும், கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜனசேனா கட்சியின் பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவியை சந்திரபாபு நாயுடு கொடுத்ததை அவர் குறிப்பிட்டார்.
‘தமிழ்நாட்டில் சாத்தியமில்லை’ – ஆர்.எஸ். பாரதி
பட மூலாதாரம், MK Stalin/X
இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் பத்திரிகையாளர் கா.அய்யநாதன், “பா.ஜ.க-வின் அழுத்தத்துக்கு எடப்பாடி பழனிசாமி வளைந்து கொடுத்துவிட்டார். மகாராஷ்டிராவை போல ஆட்சியில் பங்கு எனக் கூறிவிட்டு பிறகு மாநிலக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளுவதுதான் பா.ஜ.க-வின் இலக்காக உள்ளது” எனக் கூறினார்.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார். “மகாராஷ்டிரா அரசியல் ஃபார்முலாவை தமிழ்நாடு அரசியலிலும் பின்பற்றுவதற்கு பா.ஜ.க முயல்கிறது. அதற்கு தமிழ்நாடு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்” என்றார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அமித் ஷா கூறியதை சுட்டிக்காட்டிய கா.அய்யநாதன், “கூட்டணி ஆட்சி என்பதை எடப்பாடி பழனிசாமிதான் அறிவித்திருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை அருகில் வைத்துக் கொண்டு அமித் ஷா அறிவித்துள்ளார். இதற்கு பா.ஜ.க கொடுத்த அழுத்தம்தான் காரணம்” எனக் குறிப்பிட்டார்.
ஆனால், “கூட்டணியில் சேர்வதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. இது இயல்பான கூட்டணி” என செய்தியாளர் சந்திப்பின் போது அமித் ஷா தெரிவித்திருந்தார்.
தி.மு.க.வுக்கு நிர்பந்தமா?
அதேநேரம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்படப் பல்வேறு கட்சிகள் கூட்டணி ஆட்சி என்பதை முன்னிறுத்திப் பேசி வருவதைக் குறிப்பிட்டுப் பேசும் கோலாகல ஸ்ரீனிவாஸ், “இது தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க-வுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தலாம்” எனக் கூறுகிறார்.
“சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது சிறிய கட்சிகளும் ஆட்சியில் பங்கு கேட்பதற்கான சூழல் உருவாகும். அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போது அவர்கள் சார்ந்த சமூகங்களுக்கும் பலன் கிடைக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியோ, “அதற்கு வாய்ப்பு இல்லை. பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க மாட்டார்கள். அவ்வாறான முடிவை அவர்கள் ஒருபோதும் எடுக்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, “கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாத ஒன்று. எங்களுக்கு அதில் முன் அனுபவம் உள்ளது” எனக் கூறி, 1980ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலைக் குறிப்பிட்டார்.
“அந்தத் தேர்தலில் தி.மு.க-வும் இ.காங்கிரஸும் (இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்) சரிபாதியாகத் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு போட்டியிட்டன. அந்த தேர்தலில் வென்றால் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற சூழல் இருந்தது. தி.மு.க-வுக்கு அனைத்து வெற்றி வாய்ப்புகளும் இருந்தும் தோல்வியே கிடைத்தது” எனவும் அவர் தெரிவித்தார்.
1980 தேர்தலில் என்ன நடந்தது?
கடந்த 1980ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க கூட்டணி வைத்தது. கூட்டணியில் இருந்த சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, எஞ்சியிருந்த தொகுதிகளில் திமுகவும், காங்கிரஸும் சரிபாதி இடங்களில் போட்டியிட்டன. இந்த கூட்டணி வென்றால் ‘யார் முதலமைச்சர்?’ என்ற கேள்வி எழுந்தபோது, ஒரு கட்டத்தில், ‘கருணாநிதியே முதலமைச்சர்’ என இந்திரா காந்தி அறிவித்தார்.
ஆனால், தேர்தல் முடிவில் தி.மு.க கூட்டணிக்கு 96 இடங்களே கிடைத்தன. தி.மு.க 38 இடங்களிலும் இ.காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றி பெற்றது.
“கூட்டணி ஆட்சி என்ற ஒன்றை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகளே உதாரணம்” என்று ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டார்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான வாக்குகளை தி.மு.க கூட்டணி பெறும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதைப் போல 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
‘கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இருக்காது’ – அ.தி.மு.க
பட மூலாதாரம், Edappadi K Palaniswami/X
ஆனால், இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வின் கருத்து வேறாக உள்ளது. “ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுவிட்டால் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது” எனக் கூறுகிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அறுதிப் பெரும்பான்மை பெறக்கூடிய அளவுக்கு அ.தி.மு.க-விடம் வாக்கு வங்கியும் உள் கட்டமைப்பும் உள்ளது. அதனால்தான் பா.ஜ.க பேச்சுவார்த்தையை நடத்துகிறது” எனக் குறிப்பிட்டார்.
கடந்த 1967 சட்டமன்றத் தேர்தலில் இருந்தே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற ஒன்று பேசப்பட்டு வருவதாகக் கூறிய காசிநாத பாரதி, “தேர்தல் முடிவில் கட்சிகள் பெறக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்து, இதைத் தலைமை முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.
‘அமித் ஷா அவ்வாறு கூறவில்லை’ – நாராயணன் திருப்பதி
“ஆனால், அ.தி.மு.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறும் என்றுதான் அமித் ஷா கூறினார். ஆனால், கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளதாகத் தவறான தகவல்களை ஊடகங்கள் வெளியிடுகின்றன” என பிபிசி தமிழிடம் கூறினார், தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு