சென்னை: கள்ள ஓட்டுப் போட முயன்ற திமுகவைச் சேர்ந்த நபரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்.19 அன்று உள்ளாட்சி தேர்தலின்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் தாக்கினர். நரேஷ்குமாரை அரை நிர்வாணமாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டை போலீஸார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், “திமுக உறுப்பினரான நரேஷ்குமார் மீது ஏற்கெனவே 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், நரேஷ்குமாரை ஆயுதம் கொண்டு யாரும் தாக்கவில்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,” என வாதிட்டார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், “போலீஸாரின் விசாரணையில் மனுதாரரான ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதாரவாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு நரேஷ்குமாரை தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே தான் ஜெயக்குமார் உள்ளிட்ட 20 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக” தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரான ஜெயக்குமார் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். கீழமை நீதிமன்றத்தின் விசாரணையில் தான் குற்றச்சாட்டு உண்மையா, இல்லையா என்பது தெரியவரும். எனவே முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
அப்போது இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என ஜெயக்குமார் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.