• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆவணங்கள் பறிமுதல் | DVAC raids former AIADMK minister Sevur Ramachandran house: Documents seized

Byadmin

May 17, 2025


ஆரணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது குடும்பத்தினர் கடந்த ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆரணியில் உள்ள சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். இவர், கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.

கடந்த 23-5-2016 முதல் 31-3-2021 வரையிலான கால கட்டத்தில் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 487 சேர்த்துள்ளது தெரியவந்தது. இது வருமானத்தைவிட 125% அதிகமாகும். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் மீது திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, ஆரணியில் உள்ள சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் ஆய்வாளர் அருள்பிரசாத் தலைமையிலும், அருகில் உள்ள அவரது மகன் சந்தோஷ்குமார் வீட்டில் ஆய்வாளர் மைதிலி தலைமையில் இன்று (மே 17) காலை 6.30 மணியளவில் சோதனை தொடங்கியது.

அதிமுகவினர் முற்றுகை: இந்த தகவலை அடுத்து சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டின் முன்பாக அதிமுகவினர் குவியத் தொடங்கினர். அவர்களுக்காக வீட்டின் அருகில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு திரண்ட அதிமுகவினர் திடீரென வீட்டின் முன்பாக முற்றுகையிட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் , தமிழக அரசு, முதல்வருக்கு எதிராக முழக்கமிட்டனர். சோதனை நடைபெற்ற நேரத்தில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டின் முன்பாக முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், ஜெயசுதா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்: இந்தச் சோதனை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதியை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுக்கு பயந்து பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுகவினர் வீடுகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறையை அனுப்பியுள்ளனர். இந்த ரெய்டுகளால் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,” என்று பதிவிட்டுள்ளார்.

ஆவணங்கள் பறிமுதல்: இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, “சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆரணியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் சந்தோஷ்குமார் தனியார் கெமிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார். சந்தோஷ்குமார் வீட்டில் நடத்திய சோதனையில் தங்க நகைகள் வாங்கியதற்கான ஆணவங்கள் இருந்தன. நகைகள் வங்கி லாக்கரில் இருந்ததால் அந்த லாக்கரின் சாவி பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 2018, 2019, 2020 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 20 சொத்து ஆவணங்கள், 10-க்கும் மேற்பட்ட வங்கி பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டில் இருந்த சுமார் 20 கிலோ வெள்ளி பொருட்களின் விவரங்களை பதிவு செய்து அவர்களிடமே ஒப்படைத்துவிட்டோம். சந்தோஷ்குமார் வீட்டில் 10 மணி நேரம் நடைபெற்றது. அதேபோல், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவரது மனைவி மணிமேகலை, மற்றொரு மகன் விஜயகுமார் இவரது மனைவி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் அரசியல் செயல்பாடுகளை கவனித்து வந்தவர் விஜயகுமார். அந்த வீட்டில் சோதனை தொடர்ந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.



By admin