• Thu. Oct 24th, 2024

24×7 Live News

Apdin News

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை | ED raids former AIADMK minister Vaithilingam

Byadmin

Oct 24, 2024


சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.24) 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 6 இடங்களி இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

முன்னதாக நேற்று, சென்னையில் 9 இடங்கள், தஞ்சாவூரில் 4 இடங்கள் என நேற்று ஒரே நேரத்தில் 13 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவை தாண்டி நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று (அக்.24) 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வழக்கின் பின்னணி: தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆர்.வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான கட்டிடங்களை கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சமாக பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம், ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ், பாரத் கோல் கெமிக்கல் நிறுவனம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த செப்.19-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையே அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் நேற்று தொடங்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



By admin