- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
பழங்காலத் தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளாகக் கருதப்படும் பெருவழிப் பாதைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள், தூரத்தைக் காட்டும் மைல் கற்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதியமான் பெருவழியில் இப்படி காணப்படும் கற்கள் என்ன சொல்கின்றன?
தற்போதுள்ள நெடுஞ்சாலைகளைப் போல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவும் பெரிய அளவில் மக்கள் பயன்படுத்துவதற்கான பாதைகளும் சாலைகளும் இருந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று அழைக்கப்பட்டன. தென்னிந்தியாவின் கிழக்கு – மேற்குப் பகுதிகளையும் முக்கிய நகரங்களையும் பட்டணங்களையும் இந்தப் பாதைகள் இணைத்தன.
‘வீர நாராயணன் பெருவழி’, ‘ஆதன் பெருவழி’, ‘சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி’, ‘சோழ மாதேவிப் பெருவழி’, ‘ராசமகேந்திரன் பெருவழி’, ‘ராஜகேசரிப் பெருவழி’, ‘மகதேசன் பெருவழி’, ‘அதியமான் பெருவழி’ என பல பெருவழிகள் தென்னிந்தியப் பகுதியில் இருந்திருக்கின்றன.
இதில் அதியமான் பெருவழி என்பது தர்மபுரி மாவட்டத்தில் பெருவழியாக இருந்தது. இந்தப் பெருவழித்தடத்தில் தற்காலத்திய மைல் கற்களோடு ஒப்பிடும் வகையில், கல்வெட்டுகளுடன் கூடிய மூன்று கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
அதியமான் பெருவழி காதக்கல்
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழக தொல்லியல் துறையினரால் அதியமான் கோட்டைக்கருகில் அதியமான் கோட்டை- பாலக்கோடு சாலையின் மேற்குப் பக்கம் பதிகால் பள்ளம் என்ற இடத்தில் இருந்த வயல் பகுதியில் அதியமான் பெருவழியைக் குறிப்பிடும் காதக்கல் கண்டெடுக்கப்பட்டது. அது தற்போது தருமபுரி அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குச் சில ஆண்டுகள் கழித்து தர்மபுரி பகுதியில் கெங்குசெட்டிப்பட்டி பகுதியில் அரமுத்தம்பட்டி என்ற ஊருக்கு அருகே ஒரு கிணற்றுக் கரையில் மேலும் ஒரு அதியமான் பெருவழி காதக்கல் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு அதியமான் பெருவழி காதக்கல் 2023ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த மூன்று அதியமான் பெரு வழிக்கற்களிலும் முறையே, “அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 29”, “அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 27”, “அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 21” என பொறிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணகிரி அருங்காட்சியத்தின் ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ், “இதில் இடம்பெற்றிருந்த எழுத்துகளை வைத்துப் பார்க்கும்போது, அந்தக் கல்வெட்டுகள் 12- 13ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவையாக இருக்கலாம். இந்தக் கல்வெட்டுகள் ஒவ்வொன்றிலும் எழுத்துகளுக்கு அடுத்தபடியாக, இரண்டு பெரிய குழிகளும் முறையே 9, 7, 1 என சிறிய குழிகளும் வெட்டப்பட்டிருந்தன.
அதாவது பத்து என்ற எண்ணைக் குறிக்க பெரிய குழியும் ஒன்று என்பதைக் குறிக்க சிறிய குழிகளும் வெட்டப்பட்டிருந்தன. எண்களுக்குப் பதிலாக இந்தக் குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அச்சிறிய குழிகளும் ஒரே வரிசையில் வெட்டப்படாமல், மூன்று வரிசைகளில் வெட்டப்பட்டிருந்தன. எளிதில் எண்ணக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்திருக்கலாம்” என்கிறார்.
இந்தக் கற்களில் ‘காதம்’ என்பதே தூரத்திற்கான அளவையாக பொறிக்கப்பட்டிருக்கிறது.
“இம்மூன்று காதக் கற்களிலும் வரிசையாக 29, 27, 21 என தூரம் குறைந்துகொண்டே வருவதால் ஒரு காத தூரம் என்பது எவ்வளவு என்பதை கணக்கிட முடியும். கிருஷ்ணகிரி மாவட்டம் பதிகால் பள்ளத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் முத்தம்பட்டியும் முத்தம்பட்டியிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் கொண்டப்ப நாயக்கன் பட்டியும் உள்ளதால் ஒரு காத தூரம் என்பது கிட்டத்தட்ட ஏழரை கிலோ மீட்டர் என்று கணக்கிடலாம்.” என்கிறார் கோவிந்தராஜ்.
கிருஷ்ணதேவராயர் கால தமிழ் கல்வெட்டு
கொண்டப்பநாயக்கன்பட்டி கல்வெட்டு நாவற்தாவளத்துக்கு 21 காதம் எனக் குறிப்பிடுவதால் இந்நாவற்தாவளம் அங்கிருந்து சுமார் 158 கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இதே தொலைவில் ‘நாவலந் பெருந்தெரு’ என்ற இடம் இருப்பதை கிருஷ்ணதேவராயர் கால (பொ.ஆ. 1517) சித்தூர் மாவட்டம் பூதலப்பட்டில் உள்ள சிவன் கோயில் தமிழ் கல்வெட்டு தெரிவிக்கிறது என்றார் கோவிந்தராஜ்.
“பூதலபட்டு அப்போது தொண்டை மண்டலத்து, பழுவூர் கோட்டத்தில் இருந்ததை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. நாவற்தாவளம் என்பது நாவல் மரங்கள் அடர்ந்த இடமாக இருந்ததாலும் வணிகர்கள் தங்கி வணிகம் செய்யும் இடமாகவும் இருந்ததாலும் அந்தப் பெயரைப் பெற்றிருக்கலாம். தகடூரில் இருந்து வணிகர்கள் பூதலப்பட்டிற்கு பயணம் செய்த இப்பெருவழி விடுகாதழகிய பெருமான் என்னும் அதியமான் காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்ததால் அதியமான் பெருவழி எனப்பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும்” என்று அவர் கூறினார்.
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில், தகடூர் பகுதியை ஆட்சி செய்த ராஜராஜ அதியமானே, விடுகாதழகிய பெருமான் என குறிப்பிடப்படுகிறார் என்றும், 13ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட நாவற்தாவளம் என்னும் இப்பெயரானது 16-ஆம் நூற்றாண்டில் நாவலந் பெருந்தெரு என சற்றே மாற்றமுற்றிருந்தாலும் அவ்விடம் அப்போதும் வணிகத் தளமாகவே இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது என்றும் கூறுகிறார் கோவிந்தராஜ்.
பயணிகளும் வணிகர்களும் தங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்ட தாவளம் என்ற தங்குமிடங்கள் தற்போது பல இடங்களில் ஊர்ப் பெயர்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
உதாரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதாளம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சிபுலத்தாவளம், இன்றைய கேரளப் பகுதியில் அமைந்துள்ள வேலந்தாவளம், வண்டித்தாவளம் ஆகிய ஊர்களைச் சுட்டலாம்.
கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை சாலையில் தாவளம் என்ற பெயரில் ஓரு சிற்றூர் அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் கோவிந்தராஜ்.
ஆறகழூர், மகதை பெருவழி யோசனைக்கல்
சேலம் மாவட்டம் , தலைவாசல் அருகே ஆறகளூர் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பு 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மைல்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
“வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட இந்தப் பகுதி மகதை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இவர் சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும் இருந்தவர். சோழர்களுக்கு மிக உறுதுணையாக இருந்து சிற்றரசராக மகதை மண்டலத்தை ஆட்சி புரிந்து வந்தவர்” என்று விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.
ஆறகளூர் கோட்டைக்கரை அருகே விளைநிலத்தில் வரப்பின் மீது 13-ஆம் நூற்றாண்டு வணிகக் கல்வெட்டு (ஆறகழூர் மகதை பெருவழி யோசனைக்கல்) ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த மைல்கல்லில்
‘ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும், புரவாரியாருக்கு’, என கல்வெட்டு தொடங்குகிறது.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய பேராசிரியர் ரமேஷ், “சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்துள்ள களப்பாளராயர் என்பவர் நிலங்களை நிர்வகித்து வந்துள்ளார். புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர். அப்போது வாழ்ந்த வணிகர்கள் அரசுக்கு வரி செலுத்துவதற்குப் பதிலாக வடக்கு வாயிலில் உள்ள உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனாருக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜைக்கும், திருப்பணிக்கும் அதனை பயன்படுத்த வேண்டும்” என்ற செய்தியை கல்வெட்டு தெரிவிப்பதாக கூறினார்.
இந்த யோசனைகல் கல்வெட்டின் இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் உள்ளது. ‘தாவளம்’ என்பது வணிகர்கள் தங்கி வியாபாரம் செய்யும் ஒரு பகுதியாகும் என்று சுட்டிக்காட்டினார் ரமேஷ்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆறகளூரில் 12-ஆம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிக வழிப் பாதை இருந்துள்ளதற்கு ஆதாரமாய் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலில் ஒரு மைல் கல் இருந்தது. அதில், ‘ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்’ என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரே அளவிலான 16 குழிகள் வெட்டப்பட்டுள்ளன.
ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்லில் உள்ள 16 குழிகள் ஆறகழூரிலிருந்து காஞ்சிபுரத்துக்குமிடையே உள்ள தொலைவை குறிக்கிறது. (இந்த குழிகள் பாமர மக்களும் சாலையின் தொலைவை அறிவதற்கான எண்ணின் மறு வடிவ குறியீடாகும்) இந்த மைல்கல் கல்வெட்டு தற்போது சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ளதாகத்” என்று தெரிவித்தார் பேராசிரியர் ரமேஷ்.
அக்காலத்தில் நெடுஞ்சாலைகள் பெருவழிகள் என்றே அழைக்கப்பட்டன என்றும் வணிகத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்பதை உணர்ந்த மன்னர்கள் பெருவழிகளில் வணிகர்கள் இரவிலும், பகல் நேரங்களிலும் தங்கி ஓய்வெடுத்து செல்லும் வகையில் சத்திரங்களையும், குளங்களையும் வெட்டி வைத்தனர் என்றும் பேராசிரியர் ரமேஷ் கூறினார்.
“அந்த பெருவழியில் முக்கிய நகரங்களின் தொலைவினை குறிப்பதற்காக இந்த கற்களை சாலையோரங்களில் நட்டு அதில் எண் வடிவிலும், எழுத்துரு வடிவிலும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விவரங்கள் பொறிக்கப்பட்டன” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு