அன்பின் அநுர…!
எப்போதுதான் என்னிடம்
எனது வீடு இருந்தது?
எப்போதுதான் என்னிடம்
எனது முற்றம் இருந்தது?
எப்போதுதான் என்னிடம்
நம் எல்லோருக்குமான…
பொங்கல் இருந்தது?
நீயோ…
பொங்கல் உண்ண வருகிறாய்
உன் பரிவாரத்தோடு…
இனிப்பான பொங்கல் உண்ண…
உயிர் குடிக்கும்
கசப்பான ஆயுதங்களோடு
நீயோ வருகிறாய்…!
பொங்கலை
நான் ஆக்கிப் படைக்கும்
எனது முற்றமோ…
இன்னமும் உன்னிடம்!
அதுவும்…
உனது முட்கம்பி வேலிக்குள்…!
தர மறுக்கும் நீயோ…
இப்போதும் அதை வைத்திருக்கிறாய்!
அதை உன்னுடையது என்கிறாய்!
உனது முட்கம்பி வேலிக்குள்…
நீயே முகாமிட்டு இருக்கிறாய்…!
ஆனால்….
பொங்கல் ஆக்கும் நானோ….
முட்கம்பிகளுக்கு வெளியே
மிக அருகில் அல்ல…
சுமார்…..
நீண்டு தொலையும்
ஒரு நாற்பது ஆண்டுகாலத் தூரத்தில்
இருகிறேன்….
புரிவாயா….?
நீ கை நீட்டினாலும்….
உனது கைகளுக்கு
என் பொங்கல்
எட்டாத தூரத்தில்…
வந்தே சேராது…!
நான் தர முயன்றாலும்
ஊழிகள் நூறு கழிந்த பின்பும்
உன் கைகளுக்கு
வரவும் விடமாட்டேன்…!
ஏனெனில்…
நீயோ…
ஆட்சிக்கு வரும் முன்னர்
என் முற்றத்தைக் காட்டினாய்!
ஆட்சிக்கு வந்த பின்னர்
முள்வேலி கட்டினாய்!
நீயோ இப்போதும் வருகிறாய்!
பொங்கல் உண்ண என…
மோசமாக…
மிக மோசமாக…
மிகமிக மோசமாக….
சிறுதுளி வெட்கமும் இல்லாது!
உனக்கோ…
மரத்துப் போன நாக்கு இருக்கிறது…!
அதைக்கொண்டு
நீ எப்படித்தான் சுவைப்பாய்?
செவிகொள்!
எனக்கோ…
நாவாகவும் ருசியாகவும்
எனது முற்றமே இருக்கிறது!
எப்போதும் சுவையாக
அது மாத்திரமே இருக்கிறது!
அதுவும் நினைவில் என்பதை
நீ செவிகொள்…!
-செ. சுதர்சன்
The post அநுரவுக்குப் பொங்கல் வாழ்த்துக் கவிதையா? | செ. சுதர்சன் appeared first on Vanakkam London.