• Tue. Oct 1st, 2024

24×7 Live News

Apdin News

அநுரவுடன் நாம் இணைந்து பணியாற்றுவோம்! – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு  

Byadmin

Oct 1, 2024


“இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து நாம் பணியாற்றுவோம். இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும்.”

– இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கட்சிகளுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைப் பெரிய விமானங்களும் தரையிறங்கக்கூடிய வகையில் விஸ்தரிப்பதற்கு இந்தியா ஆதரவளிக்கும். இதேபோன்று, மன்னார் – இராமேஸ்வரம் படகு சேவையை விரைவாகத் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.” – என்றும் இந்தியத் தூதுவர் குறிப்பிட்டார்.

இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், “தற்போதைய அரசு அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவே கடந்த காலங்களில் செயற்பட்டது. அத்துடன், அவர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தைத் தொடர்ச்சியாக எதிர்த்து வருபவர்கள். எனவே, அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – என்று வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர், “நீங்கள் இதனை எல்லோரும் இணைந்து ஒற்றுமையாகக் கோரவில்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலைப்பாட்டைச் சொல்கிறீர்கள்.” – என்று கூறினார்.

அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், “13ஐ நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு நாம் இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் ஒற்றுமையாகக் கோரியுள்ளோம். ஒரேயொரு (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தரப்பு மட்டுமே அதில் கையொப்பமிடவில்லை.” – என்று கூறினர்.

அத்துடன், “மாகாண சபைகளுக்கான தேர்தலையேனும் உடனடியாக
நடத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்.” – என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர்  பங்கேற்றிருந்தனர்.

The post அநுரவுடன் நாம் இணைந்து பணியாற்றுவோம்! – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு   appeared first on Vanakkam London.

By admin