• Wed. May 21st, 2025

24×7 Live News

Apdin News

அநுர அரசாங்கமேனும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமா? – சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி

Byadmin

May 21, 2025


“இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என மறுத்து வந்திருப்பதுடன், அவை தொடர்பில் நம்பத் தகுந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தவறியிருக்கின்றன. இந்நிலையில் தற்போதைய அரசாங்கமேனும் கடந்தகால அரசாங்கங்களின் தோல்விகளைச் சீர்செய்து, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமா?.”

– இவ்வாறு சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கை இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் 16 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் பூர்த்தியாகும் மே 18 இல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்படல் சம்பவங்கள் உள்ளடங்கலாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான மிக மோசமான மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்னமும் நீதியையும், பொறுப்புக்கூறலையும் கோரி வருகின்றனர். இருப்பினும் அத்தகைய குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் மறுத்து வந்திருப்பதுடன், நம்பத் தகுந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தவறியிருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய புதிய அரசாங்கமேனும் கடந்தகால அரசாங்கங்களின் தோல்விகளைச் சீர்செய்து, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமா? அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினரின் நீதிக்கான கோரிக்கைக்குச் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்க வேண்டும்.” – என்றுள்ளது.

By admin