• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

அநுர அரசின் கையாலாகத்தனம் விரைவில் வெளிப்படும்! – மனோ தெரிவிப்பு

Byadmin

May 4, 2025


“உழலை ஒழிக்கின்றோம் என நண்பர் அநுர கூறுவதை, நான் வரவேற்கின்றேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புதுப் புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் வர்த்தகம், தொழிற்றுறை கடுமையாகப் பாதிக்கபடும். வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும். பணப் புழக்கம் கணிசமாகக் குறையும். இந்தியப் பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, விசேட வர்த்தக சலுகைகளைக் கோரி பெற்று முன்னேறுவோம் என்றால், அதைச் செய்ய அநுர அரசுக்குப் பொருளாதார தூர நோக்கு இல்லை. ஆகவே, அடுத்த வருட முதல் காலாண்டில், பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதை எதிர்கொள்ள நாம் கூட்டாகத் தயாராகுவோம் .”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பு – மட்டக்குளியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மனோ கணேசன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த அரசு இலங்கை வரலாற்றில் மிகப் பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. ஆனாலும், ஆறே மாதங்களுக்குள் பொருளாதாரத் துறையில் திக்கு முக்காடி நிற்கின்றது. அரச செலவைக் குறைக்கின்றோம், உழலை ஒழிக்கின்றோம், ஊழல் செய்தவர்களை வழக்குப் போட்டு சிறையில் அடைக்கிறோம் என்ற நண்பர் அநுரவின் அரசு சொல்வதை நான் நூற்றுக்கு நூறு வரவேற்கின்றேன். இவை எனது கொள்கைகளும்தான்.

ஆனால், இதை மட்டும் சொல்லிச் சொல்லி, நாட்டை நடத்த முடியாது. நாள்தோறும் பொய்களை மாத்திரம் சொல்லி அரசை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும். ஆனால், அதைச் செய்ய அநுர அரசுக்குத் தூர நோக்கு இல்லை.

ஏற்றுமதியில் வீழ்ச்சி, வெளிநாட்டு மூலதனம் அறவே இன்மை, வேலை இழப்பு, பணப் புழக்கம் குறைவு என்பவற்றைத் தவிர்க்க இந்தியப் பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி விசேட வர்த்தக சலுகைகளைக் கோரி பெற்று முன்னேறுவோம் என்றால், அவை அரச செவிகளில் ஏறவில்லை.

2024 ஆம் வருடம் 5 விகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2025 ஆம் வருடத்தில் 3.5 விகிதமாகக் குறையலாம் என உலக வங்கி ஆரூடம் கூறியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் வரிக் கொள்கை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முதலீடுகள் வருவது நின்று போய், இன்று கணிசமான இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலகங்களை இந்தியாவை நோக்கிக் கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே, இவை எல்லாம் சேர்ந்து, அடுத்த வருட முதல் காலாண்டில், பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்நிலையில், இன்று நாம் இடம்பெறும் அரசியல் கூட்டணியை மேலும் விரிவுபடுத்தி ஊழல் இல்லாத, ஆனால், அனுபவம், ஆற்றல் கொண்ட மிகப்பெரிய அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். மக்கள் ஆணையுடன் வந்துள்ள அரசை வீழ்த்தும் நோக்கம் எமக்கு கிஞ்சித்தும் கிடையாது. ஆனால், எமக்கான தேசிய பொறுப்புகளை நாம் நிறைவேற்றத் தயங்க மாட்டோம்.

கொழும்பில் நாம் பலமாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில், கொழும்பு மாநகர சபை – தெஹிவளை மாநகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளின் அனைத்து வட்டாரங்களிலும் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களியுங்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தமையைத் தவிர்த்து, முகம் தெரியாத நபர்களுக்கு வாக்களித்தமையையும் நிவர்த்தி செய்து, இந்தத் தேர்தலில் அணிதிரண்டு வாக்களியுங்கள்.

இந்த முறை வாக்குச்சீட்டில் விருப்பு வாக்கு இலக்கங்கள் இல்லை. வேட்பாளர் பெயர்கள் இல்லை. கட்சிச் சின்னங்கள் மாத்திரமே இருக்கும். ஆகவே, சின்னங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.” – என்றார்.

By admin