“அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனைக் குறைத்து மதிப்பிட முடியாது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானங்களை ஏகமனதாக எடுத்துள்ளது. அதன்படி வடக்கு, கிழக்கில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும்.
இந்தத் தேர்தல் முக்கியமானதொரு தேர்தல். நாங்கள் ஒவ்வொரு தேர்தலையும் முக்கியமானதொரு தேர்தல் என்றே கூறி வந்துள்ளோம். உண்மை அதுதான். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வக் காலப்பகுதிகளில் வேறு வேறு நோக்கங்களுக்காக முக்கியமான தேர்தலாக இருக்கும். இம்முறை நாடு அநுர அலையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு தவிர ஏனைய மாவட்டங்களில் அநுர அலையில் எமது மக்களின் வாக்குகள் சிக்கியுள்ளன.
திருகோணமலையில், அம்பாறையில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம்தான் பெரும்பான்மை. எனினும், மக்கள் அநுர அலையில் சிக்கி ஜனாதிபதித் தேர்தலைக் காட்டிலும் நாடாளுன்றத் தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸவே வடக்கு, கிழக்கில் பெரும்பான்மை பெற்றார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நிலை மாறியது.
தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படிக் கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கின்றது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் கவனமாகக் கையாள வேண்டும். நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு இருக்க வேண்டும். நாம் வீட்டோடு எனச் செயற்பட வேண்டும்.
எமது உள்ளூர் அதிகாரங்களை நாம் விட முடியாது. எனவே, நாம் இந்தத் தேர்தலில் சிறப்பானவர்களை, செல்வாக்கு மிக்கவர்களை நிறுத்த வேண்டும். அதன் மூலமே அதிக வெற்றி வாய்ப்பைப் பெற முடியும். அவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை எமது மாவட்டக் கிளைகளுக்கு நாம் வழங்கியுள்ளோம்.
தேர்தல் முடிந்த பின் ஆட்சி அமைக்கின்றபோது ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் பேசி ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் பேச்சு நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில சபைகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடலாம் எனத் தீர்மானித்துள்ளோம்.
அந்தவகையில் வவுனியா வடக்கு, சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கான தமிழரசுக் கட்சியின் வாசல் திறந்தே உள்ளது.
வவுனியா வடக்கில் நாம் பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் பெரும்பான்மையினரிடம் அந்தப் பிரதேச சபை செல்லும் வாய்ப்புள்ளது. சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் எம்மிடம் பெரும்பான்மை இல்லை. ஆகவே, இணைந்து போட்டியிடலாம் எனத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.