• Wed. Apr 9th, 2025

24×7 Live News

Apdin News

அநுர, மோடியால் மஹவ – ஓமந்தை ரயில் வீதி திறப்பு!

Byadmin

Apr 7, 2025


மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அனுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமரும் இந்தத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமரால் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு ரயில் வீதி மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் செல்வதற்கான முதலாவது சமிக்ஞை காண்பிக்கப்பட்டது.

மஹவ – ஓமந்தை ரயில் வீதி நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பெறுமதி 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அதேபோல், 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஸ்தாபிக்கப்பட்ட மஹவ – அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு அன்பளிப்பாகக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வட மத்திய மாகாகண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

By admin