• Sun. Oct 20th, 2024

24×7 Live News

Apdin News

அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது | low pressure area is forming over Andaman Sea tomorrow

Byadmin

Oct 20, 2024


சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அந்தமான் கடல்பகுதியில் 5.8 கிமீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்கக் கடலின் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21-ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்துசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 20, 21, 24-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 25-ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (அக். 20) தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (அக்.21) கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும்

புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கலசப்பாக்கத்தில் 17 செ.மீ. மழை: நேற்று காலை 8.30 மணி வரையிலான24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் 17 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி 10 செ.மீ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி 8செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம். திருச்சி மாவட்டம் துவாக்குடி 7 செ.மீ. என மழை பதிவாகியுள்ளது.



By admin