• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

அந்தோனி – திரைவிமர்சனம்

Byadmin

Mar 16, 2026


இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்குப் பிறகான மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் ‘அந்தோனி’. போரின் வலி, இழப்பு, புலம்பெயர்வு, மீண்டும் வாழ வேண்டும் என்ற மனிதர்களின் போராட்டம் ஆகியவற்றை அமைதியான கதையாக்கத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர்.

ஆழ்கடலில் மீன் பிடித்து வாழும் அந்தோனி, கடலை தாயைப் போல நேசிக்கும் மனிதன். ஒருநாள் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நளினியை காப்பாற்றுகிறார். அவர்களுக்குள் உருவாகும் உறவு குடும்பமாக மாறுகிறது. மகள் நிலா பிறந்த பிறகு வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருக்கும்போது, மனைவிக்கும் மகளுக்கும் உயிருக்கு ஆபத்தான நோய் இருப்பது தெரிய வருகிறது. அந்த உண்மையை உள்ளத்தில் புதைத்து வைத்து, குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒருவனின் மன வேதனையே படத்தின் மையமாகிறது.

நடிகர்கள்

அந்தோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கயல் வின்சென்ட், அதிகமான வசனங்களின்றி உணர்ச்சிகளை முகபாவனைகளில் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். மனைவி மீது அன்பு, மகள் மீது பாசம், உள்ளுக்குள் உடைந்து போகும் மனிதன் என்ற பல நிலைகளை அமைதியான நடிப்பில் காட்டியிருக்கிறார்.

நளினியாக நடித்திருக்கும் டிஜே பானு, மிக இயல்பான நடிப்பில் கதைக்கு உயிர் கொடுக்கிறார். மகளாக வரும் சிறுமி ஆஷனா, சின்ன சின்ன காட்சிகளிலேயே மனதில் நிற்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன் உள்ளிட்டவர்கள் கதைக்கு தேவையான அளவில் வந்து இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் பெரும்பாலும் உள்ளூர் மனிதர்களையே பயன்படுத்தியிருப்பது காட்சிகளுக்கு நம்பகத்தன்மை கொடுக்கிறது.

இயக்கம்

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் உணர்ச்சி அதிகரித்து கதையை பிடிப்பாக கொண்டு செல்கிறது. சில இடங்களில் காட்சிகள் நீளமாக இருப்பதும், வட்டார மொழி புரிய சிரமம் இருப்பதும் சிறிய குறையாக தெரிகிறது.

மொத்தத்தில், போருக்குப் பிறகு வாழ முயலும் மனிதர்களின் மனநிலையை அமைதியான உணர்ச்சி கதையாக சொல்லியிருக்கும் படமாக ‘அந்தோனி’ கவனம் ஈர்க்கிறது. பெரிய சம்பவங்கள் இல்லாமல், மனித உணர்வுகளை மட்டும் நம்பி நகரும் படமாக இது அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு

ரிஷி செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலமாக உள்ளது. இலங்கை கடற்கரை, கிராமங்கள், தெருக்கள், இயற்கை காட்சிகள் அனைத்தும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இசை

இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

By admin