சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக எம்எல்ஏ.க்கள், இவ்வாறு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
ஏற்கனவே கடந்த வாரம் திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக்கே அதிமுக எம்எல்ஏ.க்கள் பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பல்வேறு மதுபான ஆலைகளிலும் அமலாக்கத் துறையினர் மார்ச் 6 முதல் 3 நாள்களுக்குச் சோதனை நடத்தினர். சோதனை அடிப்படையில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது.
இந்த முறைகேடுகள் 1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் என்றும், இதன் மூலம் கிடைத்த ஆதாயங்கள் 2002ஆம் ஆண்டின் கறுப்புப் பணத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றும் அமலாக்கத் துறை சுட்டிக்காட்டியது.
சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 முதல் 30 வரை வசூல் செய்தது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது போன்ற முறைகேடுகள்; கொள்முதல் எண்ணிக்கை, பணியிட மாற்றம், பார் உரிமங்கள், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், பாட்டில் கொள்முதல், போக்குவரத்து போன்றவற்றில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறை பட்டியலிட்டது.
இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும் டாஸ்மாக் அதிகாரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த சோதனையின் அடிப்படையில் அமலாக்கத் துறை மேல்நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தனர். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணையில் இருந்து இரு நீதிபதிகளும் விலகினர்.
அதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்தமுறை இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவி்ட்டு விசாரணையை வரும் ஏப்.8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். ஏப்.8 மற்றும் ஏப்.9 ஆகிய இரு தேதிகளில் இந்த வழக்கில் இறுதிவிசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் முறையீடு செய்தார். அந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் வரும் ஏப்.7 அன்று விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக எம்எல்ஏ.க்கள், ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
‘யார் அந்த சார்?’ கடந்த ஜனவரி மாதம், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கோரி அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்தது நினைவுகூரத்தக்கது.