படக்குறிப்பு, அனில் அம்பானி குழுமத்தின் சில நிறுவனங்கள் திவால்நிலை செயல்முறையை எதிர்கொள்கின்றனகட்டுரை தகவல்
ஒரு காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான வணிக சாம்ராஜ்யத்தின் உரிமையாளராக இருந்த அனில் அம்பானி இன்று பல்வேறு கவலைகளை எதிர்கொண்டிருக்கிறார். அவரது குழும நிறுவனங்கள் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்படுகிறது. 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, மிகப் பெரிய தொகை தொடர்பான விசாரணை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.
அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 5) அன்று டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) தலைமையகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அனில் அம்பானி குழுமத்தின் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கடன்களை போலி நிறுவனங்கள் (shell companies) மூலம் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
வங்கிக் கடன் மோசடி தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், அமலாக்கத் துறை அனில் அம்பானியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அனில் அம்பானி குழுமம் முற்றிலும் மறுத்துள்ளது. நிறுவனமும் அதன் அதிகாரிகளும் விசாரணை நிறுவனத்துடன் முழுமையாக ஒத்துழைப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய விரிவான சோதனைகளுக்குப் பிறகு, அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெறுகிறது.
ஜூலை 24 அன்று தொடங்கி, மும்பையில் 35க்கும் மேற்பட்ட இடங்கள், 50 நிறுவனங்கள் மற்றும் 25 தனிநபர்களிடம் மூன்று நாட்கள் சோதனை நடைபெற்றது.
அமலாக்கத் துறையின் விசாரணையில் அனில் அம்பானி குழும நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ரூ.17,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை போலி நிறுவனங்கள் மூலம் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2004 ஆம் ஆண்டு, ராணா கபூர் தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து யெஸ் வங்கியைத் தொடங்கினார்
யெஸ் வங்கியுடன் இணைந்து கூட்டுச் சதி செய்யப்பட்டதா?
இதைத் தவிர, 2017 மற்றும் 2019க்கு இடையில், அனில் அம்பானி குழும நிறுவனங்கள் யெஸ் வங்கியிடமிருந்து (YES Bank) சுமார் 3,000 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு ஈடாக, அனில் அம்பானி குழுமம் யெஸ் வங்கியின் நிறுவனருக்கு நிதிச் சலுகைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கடன் ஒப்புதல் கொடுப்பதற்கு முன்பே வங்கி நிறுவனருக்கு நேரடியாக பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெறுவதிலும் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் சந்தேகிக்கிறது.
CBI தாக்கல் செய்த குறைந்தது இரண்டு எஃப்.ஐ.ஆர்களை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தவிர, பல ஒழுங்குமுறை அமைப்புகளும் அனில் அம்பானி குழுமத்துக்கு எதிரான விசாரணை அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.
இந்த நிறுவனங்களில் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் செபி, தேசிய வீட்டுவசதி வங்கி, தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் (National Financial Reporting Authority) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை அடங்கும்.
பட மூலாதாரம், ADAG
அனில் அம்பானி குழுமம் சொல்வது என்ன?
சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, 2024ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், பிற நிறுவனங்களுக்கு நிதியை திருப்பிவிடுவதற்கு ‘சூத்திரதாரி’ அனில் அம்பானி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், தகுதியற்ற நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டாம் என ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) இயக்குநர்கள் குழு எச்சரித்ததாகவும் கூறியது.
RHFLஇன் கடன் ஒப்புதல் செயல்பாட்டில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் கொள்கை மீறல் மற்றும் முழுமையற்ற ஆவணங்கள் அடங்கும்.
முன்னதாக, அனில் அம்பானி குழுமத்தின் நிறுவனமான ரிலையன்ஸ் பவர், அமலாக்கத்துறை சோதனை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. நிறுவனமும் அதன் அனைத்து அதிகாரிகளும் அமலாக்கத்துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர், எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவோம். அமலாக்கத்துறையின் நடவடிக்கை, நிறுவனத்தின் தொழில்துறை செயல்பாடுகள், நிதி செயல்திறன், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று கூறப்பட்டுள்ளது.
“ரிலையன்ஸ் பவர் சுயாதீனமாக பட்டியலிடப்பட்ட நிறுவனம், அனில் அம்பானி இந்த நிறுவனத்தின் குழுவில் இல்லை. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பவருக்கு பொருளாதார ரீதியில் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2016 முதல் திவால்நிலை செயல்முறைக்கு உட்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அனில் அம்பானி குழுமம் பல துறைகளில் வணிகம் செய்கிறது, ஆனால் அனைத்து நிறுவனங்களும் கடனில் சிக்கியுள்ளன
விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
2019 ஜூன் மாதத்தில் இந்த விஷயம் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்தது, ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தைத் தணிக்கை செய்து கொண்டிருந்த PwC, அந்தப் பணியில் இருந்து விலகியது.
பின்னர் பல பரிவர்த்தனைகள் குறித்து கேள்விகளை எழுப்பிய PwC, சில பரிவர்த்தனைகள் கவனிக்கப்பட்டு சரி செய்யப்படாவிட்டால், அது நிறுவனத்தின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியது.
ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தை தணிக்கை செய்வதில் இருந்து விலகிய PwCவின் விலகல் கடிதம் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், ரிலையன்ஸ் கேபிடலின் நிதி குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
ஆனால் பின்னர் ஒரு பொது அறிக்கையை வெளியிட்ட அனில் அம்பானி குழுமம், தணிக்கை நிறுவனத்தின் இந்த ‘கவலையை’ முற்றிலுமாக நிராகரித்தது. மேலும், நிறுவனத்தின் புதிய தணிக்கையாளராக பதக் எச்டி & அசோசியேட்ஸ் இருப்பார் என்றும் அதன் பங்குதாரர்களுக்குத் தெரிவித்தது.
இந்தியாவின் நிதிச் சந்தைகளில் கொந்தளிப்பு உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில், IL&FS மற்றும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) போன்ற நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டன.
எகனாமிக் டைம்ஸ் வங்கி ஆசிரியர் சங்கீதா மேத்தா ஒரு பாட்காஸ்டில் பேசியபோது, இதுபோன்ற சூழலில் (2017 மற்றும் 2019 க்கு இடையிலான காலகட்டத்தில்) வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பிக்கை ஆட்டம் கண்டதாகக் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில், யெஸ் வங்கி ரிலையன்ஸ் கேபிட்டலுக்கு கடன் வழங்கியது.
யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் குடும்ப நிறுவனங்களில் ரிலையன்ஸ் கேபிடல் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் கேபிடலுக்கு கடன் வழங்கப்பட்டபோது, அது குறித்த தகவலை வங்கியின் இயக்குநர்கள் குழுவிடம் ராணா கபூர் தெரிவிக்கவில்லை.
பாங்க் ஆஃப் பரோடாவிலும் அனில் அம்பானி குழும நிறுவனங்கள் பெரும் தொகையை கடனாக பெற்றிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பிய பாங்க் ஆஃப் பரோடா, விசாரணைக்குஉத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் நிதி சார்ந்த தகவல்களை ஆராய்வதற்காக பரோடா வங்கி கிராண்ட் தோர்ன்டனை நியமித்தது. அதன் அறிக்கையில், அனில் அம்பானியின் குழு நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு, இந்த வழக்கு விசாரணையில் மத்திய அமைப்புகள் ஈடுபட்டன. அதன் தொடர்ச்சியாக, விசாரணை தற்போது அமலாக்கத்துறையில் அனில் அம்பானி ஆஜராகும் கட்டத்தை எட்டியுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தை எப்போது அமல்படுத்த முடியும்?
முறைகேடுகளைக் கண்டறியும் வங்கி, தடயவியல் தணிக்கையை நடத்துகிறது.
நிதி திசைதிருப்பல் அல்லது மோசடி பரிவர்த்தனைகளை இந்தத் தணிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
வங்கி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கடனை ‘மோசடி’ என்று அறிவிக்கிறது.
குற்றச் செயல்கள் வெளிப்படையாகத் தெரியும்போது அமலாக்க இயக்குநரகம் அல்லது சிபிஐ விசாரணை தொடங்குகிறது.
PMLA இன் பிரிவு 3இன் படி, ஒருவர் குற்றம் மூலம் வரும் வருமானம் தொடர்பான செயல்களில் தெரிந்தே ஈடுபட்டால், அவர் ‘பணமோசடி’ குற்றவாளி ஆவார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ADA குழுமத் தலைவர் அனில் அம்பானி ஒரே நேரத்தில் பல சட்டப் போராட்டங்களைச் சந்தித்து வருகிறார்
அனில் அம்பானி தொடர்பான வழக்கு இதில் எவ்வாறு பொருந்துகிறது?
ரிலையன்ஸ் ADA குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் வாங்கிய 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்தப் பணம் ஷெல் நிறுவனங்கள் மூலம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது, இங்கு PMLAஇன் பிரிவுகள் பொருந்தும்.
கடந்த காலங்களில் நடந்த பல உயர்நிலை மோசடிகள் இதேபோன்ற செயல்பாட்டைக் கொண்டிருந்தன:
திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL)- வாத்வான் (34,000 கோடி ரூபாய்): போலி வீட்டுக் கடன்கள் மற்றும் நிதி திசைதிருப்பல்
ஏபிஜி கப்பல் கட்டும் தளம் (22,842 கோடி ரூபாய்): உயர்த்தப்பட்ட சொத்து மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு நிதி பரிமாற்றங்கள்
ரோட்டோமேக் பென் (3,695 கோடி ரூபாய்): ஏற்றுமதி கடன்களை தவறாகப் பயன்படுத்துதல்
IL&FS: நிறுவனங்களுக்கு இடையேயான கடன்கள் மூலம் சொத்து மதிப்பை உயர்த்திக் காட்டுதல்