• Thu. Oct 17th, 2024

24×7 Live News

Apdin News

அனுபவசாலிகளை நாடாளுமன்றம் அனுப்புங்கள்! – ரணில் வேண்டுகோள்

Byadmin

Oct 17, 2024


இலங்கை தொடர்ந்தும் சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் அனுபவம் உள்ளவர்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் இணைந்து செயற்பட்டவர்கள் நாட்டை முன்னேற்றுவதற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.

பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதைத் தெரிந்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது இன்றியமையாதது. அவர்கள்  எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அரசில் அங்கம் வகிப்பவராக இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இல்லாமல், நாட்டின் இலக்குகளை அடையத் தவறவிடுவார்கள்.

அனுபவம் வாய்ந்த எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலம் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தேசத்தின் மீட்சியை உறுதி செய்வதற்கும் சரியான திறன்களைக் கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் குழுக்களின் பிரதிநிதிகளின் பரந்த ஆதரவுடன் ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எனது  தலைமைத்துவத்தை முன்னிலைப்படுத்திய இந்தக் கூட்டணி தொடர்ந்தும் வலுவாக இருக்கும்.

என்னுடன் பணியாற்றிய எம்.பி.க்கள் மற்றும் ஐ.தே.க. நிர்வாகிகளில் ஒரு பகுதியினர் இப்போது ‘புதிய ஜனநாயக முன்னணி’யின் கீழ் இந்தத் தேர்தலில் இணைந்து கொண்டுள்ளனர். அவர்களின் அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன், இந்தப் புதிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தின் வெற்றியை உறுதி செய்வார்கள்.

இந்த முக்கியமான காலக்கட்டத்தில் தேசத்தை வழிநடத்தும் நிபுணத்துவம் கொண்ட வேட்பாளர்களுக்கு தமது பெறுமதியான வாக்களிக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

The post அனுபவசாலிகளை நாடாளுமன்றம் அனுப்புங்கள்! – ரணில் வேண்டுகோள் appeared first on Vanakkam London.

By admin