பட மூலாதாரம், X/@AnuragxCricket
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த யூடியூபரும், தன்னைத்தானே ஃபேண்டஸி கிரிக்கெட் நிபுணர் என்று கூறிக்கொள்பவருமான அனுராக் திவேதியின் வேகமாக மாறிய வாழ்க்கை முறை இப்போது அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.
டிசம்பர் 17 அன்று, உன்னாவ் மாவட்டத்தின் நவாப்கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த நடவடிக்கையின் போது, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், யூடியூபரும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருமான அனுராக் திவேதியின் லக்னோ, உன்னாவ் மற்றும் டெல்லியில் உள்ள 10 இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத் தளங்களை விளம்பரப்படுத்துவதில் அனுராக் திவேதி முக்கியப் பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமலாக்கத்துறை கூறுகையில், “அனுராக் திவேதி பல்வேறு ஹவாலா மூலம் உருவாக்கப்பட்ட போலி கணக்குகளில் சட்டவிரோத சூதாட்ட செயலிகள் வாயிலாக வருமானம் ஈட்டியது தெரியவந்துள்ளது. அவர் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்காக விளம்பர வீடியோக்களை உருவாக்கி அவற்றை மற்றவர்களுக்குக் கொண்டு செல்கிறார், இதன் மூலம் சாமானிய மக்களை அந்தத் தளங்களில் சூதாடுவதற்கு அவர் ஊக்குவிக்கிறார்” என்று தெரிவித்தது.
“அவரது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளிலும் முறையான வணிகக் காரணங்கள் ஏதுமின்றி பெரும் தொகைகள் வைப்பு வைக்கப்பட்டுள்ளது.”
அமலாக்கத்துறையின் இந்தச் சோதனையில் லம்போகினி, மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் லக்னோவில் உள்ள பிராந்திய அலுவலக வளாகத்திற்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.
லக்னோ மற்றும் உன்னாவில் அனுராக் திவேதியுடன் தொடர்புடைய மொத்தம் ஒன்பது இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே சமயம், அனுராக் திவேதி டிசம்பர் 19 அன்று எக்ஸ் தளத்தில், “அடேங்கப்பா, என்னைப் பற்றி எனக்கே தெரியாத பல தகவல்கள் ஊடகங்களுக்கு இரண்டு நாட்களிலேயே தெரிந்துவிட்டன” என்று எழுதியுள்ளார்.
மேலும் அவர், “யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், யாருடைய பெயரை வேண்டுமானாலும் இணைக்கிறார்கள், எந்தத் தொகையை வேண்டுமானாலும் சொல்கிறார்கள் – அர்த்தமற்ற பேச்சுகள். அப்பாடா, இப்போதுதான் மக்கள் மீடியாவை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று புரிகிறது,” என எழுதியுள்ளார்.
அனுராக் திவேதி யார்?

அனுராக் திவேதி உன்னாவ் மாவட்டத்தின் நவாப்கஞ்ச் தாலுகாவைச் சேர்ந்தவர்.
26 வயதான அனுராக் 1999-ல் பிறந்தார். அவர் மெல்ல மெல்ல ஃபேண்டஸி கிரிக்கெட் (கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வைத்து கற்பனையான மெய்நிகர் அணியை உருவாக்கும் விளையாட்டு) குறித்து வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினார்.
அனுராக் திவேதியின் தந்தை கிராமத் தலைவராக இருந்துள்ளார் மற்றும் நவாப்கஞ்சில் அவருக்கு ஒரு கடையும் உள்ளது.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, அனுராக் முதலில் கிராமத்திலேயே வசித்து வந்தார்.
என்டர்டெய்னர்ஸ் கிரிக்கெட் லீக் சேனலில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றில், தான் 2017 முதல் யூடியூப்பில் வீடியோக்களை உருவாக்கத் தொடங்கியதாக அனுராக் தெரிவித்திருந்தார்.
தான் 2019-ல் ஃபேண்டஸி லீக் தளத்துடன் இணைந்ததாகவும், அந்த ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் தளத்தின் நிறுவனுருடன் சேர்ந்து ஒரு ‘உள்ளடக்கத்தை உருவாக்குபவராக ‘ மாறியதாகவும் தெரிவித்தார்.
அனுராக்கிற்கு யூடியூப்பில் சுமார் 70 லட்சம் சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 24 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களும் உள்ளனர்.
திருமணம் மற்றும் வாழ்க்கை முறை
இந்த ஆண்டு நவம்பர் 22 அன்று, அனுராக் லக்னோவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் துபையில் திருமணம் செய்துகொண்டார்.
தனது பிரம்மாண்டமான திருமணம் காரணமாக அனுராக் அதிக அளவு செய்திகளில் இடம்பிடித்தார்.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, அவர் கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நபர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட சுமார் 100 பேரை துபைக்கு அழைத்திருந்தார்.
விருந்தினர்களின் பயணம் மற்றும் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அனுராக் செய்திருந்தார்.
அனுராக் திவேதி என்டர்டெய்னர்ஸ் கிரிக்கெட் லீக்கிலும் இணைந்துள்ளார்.
அவர் லக்னோ லயன்ஸ் அணியில் உள்ளார்.
இது ஒரு ஃபிரான்சைஸ் அடிப்படையிலான கிரிக்கெட் தொடராகும், இதில் பிரபலமான சமூக ஊடக நட்சத்திரங்களால் வழிநடத்தப்படும் எட்டு அணிகள் உள்ளன.
இந்த லீக் விரைவான டென்னிஸ் பால் டி-10 (T-10) வடிவத்தில் விளையாடப்படுகிறது.
இந்த லீக்கில் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈசிஎல்-ன் ஒரு பாட்காஸ்டில் அனுராக் திவேதி தனது நிகர சொத்து மதிப்பு சுமார் 190 கோடி ரூபாயாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். தான் 2016 முதல் ஃபேண்டஸி கிரிக்கெட்டில் முதலீடு செய்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
சைக்கிளில் இருந்து சூப்பர் கார் வரையிலான பயணம்
பட மூலாதாரம், @AnuragxCricket
இதே பாட்காஸ்டின் போது, தான் ஒரு காலத்தில் டாடா மேஜிக் வாகனத்தில் பள்ளிக்குச் சென்றதாக அனுராக் தெரிவித்தார்.
இப்போது தன்னிடம் சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான லம்போகினி உருஸ் (Lamborghini Urus) கார் இருப்பதாக அவர் கூறினார்.
இந்த காரை மணிக்கு 288 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டியதாகவும் அனுராக் கூறியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு காலத்தில் சைக்கிளில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அனுராக் திவேதிக்கு எதிரான அமலாக்கத்துறையின் தற்போதைய விசாரணை மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதல் தகவல் அறிக்கையுடன் தொடர்புடையது.
ஜூன் 5, 2025 அன்று அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆன்லைன் சூதாட்ட கும்பல் ஒன்று பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கை ஏமாற்றுதல், மோசடி மற்றும் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பானது.
சிலிகுரியில் ஒரு ஆன்லைன் சூதாட்டக் குழு செயல்பட்டு வந்ததாகவும், அதைச் சில நபர்கள் இணைந்து நடத்தி வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திக்குறிப்பின்படி, இந்த வழக்கில் விஷால் பரத்வாஜ் மற்றும் சோனு குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியான செய்திக்குறிப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து 17 கிரெடிட் கார்டுகள் மற்றும் 1130 ‘மியூல் கணக்குகள்’ மீட்கப்பட்டு முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றில் சுமார் 10 கோடி ரூபாயும் உள்ளன.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சில நபர்கள் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத் தளங்களை விளம்பரப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நபர்கள் யூடியூப் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் விளம்பர வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வந்தனர். அதற்குப் பதிலாக அவர்களுக்குப் பெருந்தொகை கிடைத்தது.
அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, டெலிகிராம் சேனல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மக்கள் தொடர்பு கொள்ளப்பட்டனர்.
பின்னர் மக்களின் பணம் ‘மியூல் கணக்குகளில்’ டெபாசிட் செய்யப்பட்டது, அந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதன் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது, ஆனால் அதற்குப் பதிலாக அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது.
‘மியூல் கணக்குகள்’ என்பது உண்மையில் ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கும் ஆனால் அதில் அனைத்துப் பணப் பரிமாற்றங்களையும் மற்றவர்கள் செய்வார்கள்.
விசாரணையின் வரம்பு

விசாரணை முன்னேறிய போது அனுராக் திவேதியின் பெயர் வெளிவந்தது.
அனுராக் திவேதி ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் மூலம் பல கோடி ரூபாய் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் ஈட்டிய பணத்தைப் பல்வேறு வழிகளில் முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவரது அறிவிக்கப்பட்ட வருமானத்தை விட அவரது சொத்துக்கள் மிக அதிகமாக இருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.
இந்த வலைப்பின்னலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது,இதன் வரம்பு எவ்வளவு பெரியது என்பதைக் கண்டறிய ஏஜென்சி முயற்சிப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அனுராக் திவேதியின் துபை தொடர்பும் அமலாக்கத்துறை விசாரணையின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.
இதற்கு முன்பு முகமை பலமுறை அவருக்குச் சம்மன் அனுப்பியது ஆனால் அவர் ஆஜராகவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துபையில் பல அசையாச் சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும், சில காலமாக அங்கேயே வசித்து வருவதாகவும் ஏஜென்சி சந்தேகிக்கிறது.
துபையின் ஒரு சொகுசு கப்பலில் நடந்த அவரது பிரம்மாண்டமான திருமணமும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது.
இந்த நடவடிக்கையில் லக்னோ மண்டல அமலாக்கத்துறை குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
துபையில் நடத்தப்பட்ட திருமணங்கள், சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பின்னால் உள்ள பண ஆதாரங்கள் குறித்துத் தீவிர விசாரணை அவசியம் என்று ஏஜென்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமலாக்கத்துறை தற்போது அனுராக் திவேதியின் வருமானத்தின் உண்மையான மூலங்களை ஆராய்ந்து வருகிறது.
இருப்பினும், இந்த விஷயத்தில் அவரது குடும்பத்தினரின் கருத்தை அறிய முயன்றபோது அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அனுராக்கின் தந்தையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதே சமயம், அனுராக்கிற்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், அனுராக்கின் வருமானம் திடீரென அதிகரித்துள்ளது உண்மைதான், ஆனால் அவர் அனைத்து வரிகளையும் சரியான நேரத்தில் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு