0
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரான முன்னாள் இராணுவச் சிப்பாய் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், வசித்து வந்த கல்னேவ பகுதியில் உள்ள வீடு நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அங்கிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண் வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியைத் தேடுவதற்காகப் பிரதான சந்தேகநபரின் வீடு சோதனையிடப்பட்டபோதே இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரையிலும் குறித்த தொலைபேசி கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக பொலனறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.