0
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த கட்சி அதிகாரத்தை பெற்றாலும் அந்த உள்ளூராட்சி மன்றங்களை பாேஷித்து பாதுகாப்பது ஆளும் அரசாங்கத்தின் உரிமையாகும். ஆட்சியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு மாத காலத்துக்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மிகவும் உறுதியுடன் செயற்பட்டு வருகிறது.
என்றாலும் இந்த முறை தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை விட அளிக்கப்படாத வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நினைக்கிறோம்.
அதேபோன்று ஆளும் கட்சிக்கு வாக்களிக்காத அனைத்து வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், நாட்டுக்குள் பொருளாதார நெருக்கடி ஏற்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுக்கு வந்து, நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, பொருளதார நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்து, நாட்டை முன்னெடுத்துச் சென்றது ஐக்கிய தேசிய கட்சியாகும்.
அந்த விடயங்களை இலங்கை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பலரும் வெளியில் வந்து பல்வேறு கதைகளை சொல்லலாம். என்றாலும் ஒவ்வாெருவரும் இதன் உண்மை நிலையை நன்கு தெரிந்துள்ளார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.
அதேபோன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் கட்சியினால் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் தெரிவிப்பது போல் நாடொன்றை முன்னெடுத்துச்செல்ல முடியாது.
ஏனெனில் நாங்கள் 2025இல் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு சென்றபோது நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியாக தோல்வியடைந்தோம். அப்போது உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன்.
என்றாலும் உள்ளூராட்சி மன்றங்கள் எந்த கட்சிக்கு உரித்தாக இருந்தாலும், அதனை போஷிப்பது மற்றும் பொது மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் உரிமையாகும். அதன் பிரகாரம் ஆட்சியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படவேண்டி இருக்கிறது.
விசேடமாக இலங்கையின் 1948, 1977 காலப்பகுதிகளை எடுத்துக்கொண்டால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தின் கீழே இலங்கை ஒற்றையாட்சியாக, பலமான அரசாங்கமாக, ஆசியாவிலே பலமான அரசாங்கமாக, சர்வதேசத்தில பலமான அரசாங்கமாக, இலங்கை சுயாதீன அரசாக செயற்பட்டிருக்கிறது.
அதனால் ஒரு பக்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசியல் கட்சிகளை உருவாக்குகின்ற கட்சியாகும். அதனால் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் உறுதியாக முன்னுக்கு செல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.