0
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது
சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது
கொழும்பில் 22 வயது முகமது ருஸ்டி மார்ச் 25ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை சர்வதேச மன்னிப்புச்சபை பார்வையிட்டுள்ளது.
இலங்கையின் புதிய தலைமை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக அதன் அரசாங்கம் வாக்குறுயளித்துள்ள போதிலும்,அதிகாரிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்.
ருஸ்டியை தடுத்துவைப்பதற்கான உத்தரவில்,அவர்தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு,சமூகங்களிற்கு இடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது மற்றும் பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய தகவல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருஸ்டி கைதுசெய்யப்பட்டு இரண்டு வாரங்களான பின்னரும்,அவரை கைதுசெய்தமை அல்லது தொடர்ந்து தடுத்து வைத்துள்ளமை ஆகியவற்றை நியாயப்படுத்தக்கூடிய குற்றவியல் செயற்பாடுகள் எவற்றிற்குமான ஆதாரங்களை வெளியிடக்கூடிய நிலையில் இலங்கை அதிகாரிகள் இல்லை.
இலங்கை அதிகாரிகள் உடனடியாக ருஸ்டிக்கான நியாயமான நடைமுறைகளை உறுதி செய்யவேண்டும்,அவர் தனது குடும்பத்தவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு தடையற்ற அனுமதியை வழங்கவேண்டும்.
மேலும் அவர் சர்வதேச அளவில் குற்றம் என கருதக்கூடிய எவற்றிலாவது ஈடுபட்டார் என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யவேண்டும்.