• Fri. Feb 28th, 2025

24×7 Live News

Apdin News

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்” – எடப்பாடி பழனிசாமி தகவல் | AIADMK will participate in the all-party meeting says Edappadi palanisamy on delimitation

Byadmin

Feb 28, 2025


சேலம்: “சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பர்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக, புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ஆகியவை சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் இன்று (பிப்.28) ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தான முகாமை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்துப் பேசுகையில், “அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் தான் அதிகம் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், இந்த ரத்த தானம் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை” என்று பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பர். தமிழகத்தில் பல இடங்களில் கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆத்தூரில் நடந்த சம்பவம் ஊடகத்தில் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. எனவே, கள்ளச் சாராயம் விற்பனை, போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழக அரசு சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது, பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது. பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வேலியே பயிரை மேய்வது போல் ஒருசில ஆசிரியர்கள் செய்யும் தவறு, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆசிரியர்களை நம்பித் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆசிரியர்கள்தான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல் துறை சம்மன் ஒட்டியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “எதுவாக இருந்தாலும் காவல் துறையினர் சட்டப்படிதான் நடந்து கொள்ள வேண்டும். ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் அதிமுகவை அங்கீகரித்துள்ளனர். அதிமுக இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும்” என்று அவர் கூறினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதிகள் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் மக்களவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை’ என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தையும் அறிவித்துள்ளார். இதில் பங்கேற்குமாறு 45 கட்சிகளின் தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



By admin