படக்குறிப்பு, நமது மூளை எவ்வாறு தீவிரமான அன்பை/அழகை கையாளுகிறது என்பதற்கான ஒரு வெளிப்பாடுதான் இது.கட்டுரை தகவல்
எங்களது பூனைக்குட்டியைப் பார்த்தவுடன் என் மகனின் முகம் பிரகாசமாக மாறுகிறது, அவன் அந்த பூனைக்குட்டியை சற்று இறுக்கமாகவே அணைத்துக்கொள்கிறான். அவ்வளவு இறுக்கமாக அணைக்க வேண்டாம் என பலமுறை அவனிடம் சொன்னாலும், அந்த பஞ்சுபோன்ற உயிரினத்தைப் பார்த்ததும் அவ்வாறு செய்ய வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு எழுகிறது.
இது குறும்பு அல்ல, அதேசமயம் பூனைக்குட்டியைக் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அவனுக்கு இல்லை. இது ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடு.
என் மகனுக்கு 14 வயது, ஆனால் ஆவேசமாகக் கட்டிப்பிடிப்பது அல்லது அழகான விஷயங்களை இறுக்கமாக அணைப்பது/கையாள்வது என்ற தன்னிச்சையான தூண்டுதல் எல்லா வயதினரிடமும் பொதுவானது.
எனக்கு 30 மற்றும் 40 வயதுடைய சக ஊழியர்கள் உள்ளனர், அவர்களும் இதே உணர்வை ஒப்புக்கொள்கிறார்கள்.
“இளஞ்சிவப்பு நிறத்தில் குண்டான கன்னங்களுடன் ஒரு குழந்தையை நான் பார்க்கும்போதெல்லாம், அப்படியே கடிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று ஒருவர் கூறுகிறார்.
இன்னொருவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்தது. தனது மகனை “இறுக்கமாக கட்டிப்பிடிக்க வேண்டும் மற்றும் அவனது குண்டான கால்களைக் கடிக்க விரும்புவதாகவும்” அவர் கூறுகிறார்.
உளவியலாளர்கள் இதை ‘அழகான/அன்பான முறையில் ஆக்ரோஷப்படுவது’ (cute aggression) என்று விவரிக்கிறார்கள். மேலும் நமது மூளை எவ்வாறு தீவிரமான அன்பை/அழகை கையாளுகிறது என்பதற்கான ஒரு வெளிப்பாடுதான் இது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இது ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடு.
இது என்ன மாதிரியான உணர்வு?
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியலாளர் லிசா ஏ. வில்லியம்ஸ், “நம்மால் கையாள முடியாத அளவுக்கு அழகான ஒன்றோடு நாம் தொடர்பு கொள்ளும்போது உணரக்கூடிய அதிகப்படியான நேர்மறையான உணர்வுகளை சமாளிப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த ‘அழகான/அன்பான முறையில் ஆக்ரோஷப்படுவது’ உள்ளது.” என்று கூறுகிறார்.
இந்த வலுவான உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்பது தீங்கு விளைவிக்கக்கூடியது அல்ல.
மாறாக, அன்பு மற்றும் மகிழ்ச்சியின் அதீதமான உணர்ச்சிகளைச் சமாளிக்க உங்கள் மூளை எவ்வாறு உதவுகிறது என்பதுதான் இது.
குழந்தைகள், பூனைக்குட்டிகள் அல்லது அகன்ற கண்களைக் கொண்ட நாய்க்குட்டிகளைப் பார்க்கும்போது நாம் அடிக்கடி இதை உணர்கிறோம்.
“இது நமக்குப் பிடித்தமான ஒன்றை கொஞ்ச அல்லது கிள்ள விரும்பும் உணர்வாக வெளிப்படுகிறது, ஆனால் யாரையாவது காயப்படுத்தும் நோக்கத்துடன் அந்தத் தூண்டுதலைச் செயல்படுத்த எந்த விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று வில்லியம்ஸ் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த வலுவான உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்பது தீங்கு விளைவிக்கக்கூடியது அல்ல.
அழகான ஒன்றை ஆக்ரோஷமாக ‘கொஞ்ச’ நாம் ஏன் தூண்டப்படுகிறோம்?
மிகவும் அழகான ஒன்றுக்கு ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றுவது என்பது ஒரு முரண்பாடான நடத்தையாகும். இது உளவியலாளர்கள் இருவகை உணர்ச்சி வெளிப்பாடு (Dimorphous emotional expression) என்று குறிப்பிடுவதிலிருந்து உருவாகிறது. இது நமது வெளிப்புற உணர்ச்சிகள் நமது உள் உணர்வுகளுடன் ஒத்துப்போகாதபோது நிகழ்கிறது.
இது ஒரு விசித்திரமான ஆனால் முற்றிலும் இயல்பான எதிர்வினை. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், “வயது மற்றும் கலாசாரங்களைக் கடந்து பல தரப்பு மக்களால் இந்த உணர்வு பகிர்ந்து கொள்ளப்படுகிறது” என்று கூறுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நாய்க்குட்டிகள் மற்றும் பூனைக்குட்டிகளை பார்க்கும்போது கூட நாம் இந்த தீவிர உணர்ச்சியை உணரலாம்.
அழகான விஷயங்களைப் பார்க்கும்போது நம் மூளையில் என்ன நடக்கும்?
நாம் அழகான ஒன்றைப் பார்க்கும்போது, நமது மூளை டோபமைனை வெளியிடுகிறது, இது ஒரு ‘நல்லுணர்வு’ அல்லது வெகுமதிக்கான ஹார்மோன் ஆகும். சுவையான உணவு, அன்பு அல்லது இலக்குகளை அடைதல் போன்ற விஷயங்கள் மூலமாகவும் இது தூண்டப்படுகிறது.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் ‘அமிக்டலா’, அவ்வப்போது இந்த நேர்மறையான உணர்ச்சிகளால் அதிகமாகத் தூண்டப்படலாம்.
அமிக்டலா விரைவாக உங்களது உணர்ச்சிகளை நிறுத்துவதால், அவற்றை செயல்படுத்துவதிலிருந்து நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்.
இலங்கையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான முனைவர் காந்தி ஹெட்டிகோடா, “இந்த டோபமைன் அமைப்பு செயல்படுத்தப்படும்போது, நமக்கு இறுக்க அணைத்தல், கிள்ளுதல், கொஞ்சுதல் தேவை என்று உணர்கிறோம்” என்று கூறுகிறார்.
இருப்பினும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதியும் அதே நேரத்தில் செயலில் இருப்பதால், நம்மால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இது ஒரு விசித்திரமான ஆனால் முற்றிலும் இயல்பான எதிர்வினை.
இது ஆபத்தானதா?
‘இத்தகைய முறையில் அன்பைக் காட்டுவது, தீவிரமான உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கும், அதிகப்படியான நேர்மறை உணர்ச்சிகளை பாதுகாப்பான முறையில் நிர்வகிப்பதற்கும் ஒரு ஆரோக்கியமான வழியாகும்.’ என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மூளை எவ்வாறு முரண்பாடான உணர்ச்சிகளை ஒரே நேரத்தில் கையாள முடியும் என்பதை இது காட்டுகிறது.
உளவியலாளர்களின் கூற்றுப்படி, இது உணர்ச்சிகளை சிறப்பாக நிர்வகிப்பதற்கான ஒரு வழிமுறையாகும். இது தீவிரமான நேர்மறையான உணர்வுகளை பாதுகாப்பான, சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் செயலாக்க அனுமதிக்கிறது.
பொதுவாக தங்கள் உணர்ச்சித் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளவர்கள், பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
மனநல மருத்துவர் டாக்டர் கபில ரணசிங்க, “அழகு, கோபம் அல்லது ஆசை போன்ற எந்தவொரு வலுவான தூண்டுதலையும் கட்டுப்படுத்தத் தவறினால், அது பொருத்தமற்ற அல்லது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு வழிவகுக்கும்” என்று சுட்டிக்காட்டுகிறார்.
“ஒரு வலுவான தூண்டுதல் எழுந்தவுடன் அதற்கு எதிர்வினையாற்றுவது ஆபத்தானது. அதை நிர்வகிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.”
பெரும்பாலான மக்கள் (உளவியலாளர்களின் கூற்றுப்படி 50%- 60%) ‘அழகான/அன்பான முறையில் ஆக்ரோஷப்படுவது’ என்ற உணர்வை அனுபவிக்கிறார்கள் என்றாலும், கணிசமான எண்ணிக்கையிலான மக்களுக்கு அவ்வாறு இல்லை.
அதற்காக, அவர்களிடம் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தமில்லை.
‘அழகான/அன்பான முறையில் ஆக்ரோஷப்படுவது’ என்ற உணர்வை அனுபவிக்காதவர்களுக்கு, அத்தகைய உணர்ச்சிகள் தீவிரமாக எழவில்லையா அல்லது அவர்கள் வேறு ஏதேனும் வழிகளில் அதை வெளிப்படுத்துகிறார்களா என்பது உளவியலாளர்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை.