மதுரை: “மரத்தை வெட்டி போடுங்கள், கல்லெடுத்து அடியுங்கள் என்று சொன்ன அன்புமணி ராமதாஸ், தற்போது படியுங்கள் என சொல்லும் பண்பு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் மே 31-ல் நடைபெறும் மதச்சார்பின்மை காப்போம் எனும் மக்கள் எழுச்சி பேரணி தொடர்பாக தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமானில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர்கள் காளிமுத்து, ரவிக்குமார், அரச முத்துப்பாண்டியன், சிந்தனை வளவன், தீபம் சுடர்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 33 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தொல்.திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியது: “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கொடும் காயத்துக்கு இடப்பட்ட மாமருந்து. இந்த தீர்ப்பு கூட்டுப் பாலியல் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
மத்திய பாஜக அரசு வக்பு வாரிய சட்டத் திருத்தம் உள்ளிட்ட இந்திய அரசியல் சட்டமைப்புகள் நீர்த்துப் போகும் வகையில் பல மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பரசியலை பரப்பியும், எதிரான சட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. மதச்சார்பின்மையை காக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 31-ல் திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணி நடைபெறுகிறது. இதில் மதவாதத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் பங்கெடுக்க அழைக்கிறேன்.
அண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசிய பிரதமர், அது எப்போது நடத்தப்படும் என தெளிவாக கூறவில்லை. பிஹார் தேர்தலுக்கான கண்துடைப்பு அறிவிப்பு எனத் தெரிகிறது. ஆனால், பாஜகவை சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
புதுக்கோட்டை வடகாடு கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் தொடர்பான வழக்கில் ஆதிதிராவிடருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தும், காவல் துறை வழிபட அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மோதல் பகையாக உருவாகி, பங்கெடுத்த தலித் மக்களை தாக்கியது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், அவர்கள் மீதே காவல் துறை நடவடிக்கை எடுத்ததும் வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக எனது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கும் காவல் துறை அனுமதி மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
மரத்தை வெட்டி போடுங்கள், கல்லெடுத்து அடியுங்கள் என்று சொன்ன அன்புமணி ராமதாஸ், தற்போது படியுங்கள் என சொல்லும் பண்பு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது. தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் மீதான ஓடுக்குமுறைகளுக்கு எதிராகத்தான் ‘அடங்க மறு, அத்துமீறு’ என நான் கூறியது உலகளாவிய தத்துவம்” என்று அவர் கூறினார்.