பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான் தான் தலைவர் என, ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் மாறி மாறி கூறிவருகின்றனர்.
“இனி பாமகவின் தலைவர் நான் தான்,” என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
மறுபுறம், கட்சியின் தலைவராக முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதாகவும், அதனால் நான் தான் கட்சியின் தலைவராக செயல்படுவேன் என்றும் பதில் அறிக்கை விடுத்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், கட்சிக்குள் ராமதாஸ்-அன்புமணி இடையே நடக்கும் சண்டை, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
“உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி யார்?” என, 2000களின் முற்பகுதியில் பாமகவின் கட்சி அரசியலுக்குள் நுழைந்த அன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “நிச்சயமாக, அப்பா தான். குறிப்பாக அப்பாவின் வெளிப்படையான பேச்சும், பொது மக்களுடன் நேருக்கு நேராக பேசிப் பழகும் விதமும்” என பதிலளித்திருப்பார் அன்புமணி ராமதாஸ்.
அப்படி அன்புமணி குறிப்பிடுவது போன்று கட்சி மேடையிலேயே தன் விருப்பம் அல்லாத ஒன்றை ராமதாஸ் வெளிப்படையாக அறிவித்ததுதான் பாமகவில் தற்போது நடக்கும் பிரச்னையின் மையப்புள்ளியாக இருக்கிறது.
பட மூலாதாரம், HANDOUT
பிரச்னையின் ஆரம்பம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டானூரில் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தன்னுடைய மகன்வழி பேரனான முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார் ராமதாஸ்.
“அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்” என அப்போது கூறியிருந்தார் ராமதாஸ்.
சற்றும் யோசிக்காமல் உடனடியாக, “யாருக்கு? எனக்கா?” என கேட்டு அந்த மேடையிலேயே முகுந்தன் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. அதற்கு ராமதாஸும் கோபமாக எதிர்வினையாற்றினார். “கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லையென்றால் கட்சியிலேயே நீடிக்க முடியாது” என கூறினார் ராமதாஸ்.
இதையடுத்து, அன்புமணி “பனையூரில் அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறேன். அங்கு தொண்டர்கள் என்னை சந்திக்கலாம்” எனக் கூறிவிட்டு, தனது செல்போன் எண்ணையும் மேடையில் அறிவித்தார்.
அதற்கு சில தினங்கள் கழித்து “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை, கட்சி பிரச்னைகளை பேசி சரிசெய்துவிட்டோம்” என ராமதாஸ் தெரிவித்தார்.
பட மூலாதாரம், HANDOUT
கட்சியின் தலைவர் யார்?
இந்நிலையில், பாமகவுக்குள் மீண்டும் ஒரு சிக்கல் உருவெடுத்துள்ளது.
“இனி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நானே”, என்று திடீரென தைலாபுரம் தோட்டத்தில் ஏப். 10 அன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார்.
மேலும் தற்போது தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
“தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இது அக்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
”பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு”’ என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார், பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா.
பட மூலாதாரம், GK mani twitter page
பாமகவின் சுற்றுச்சூழல் அமைப்பான ‘பசுமைத் தாயகம்’ அமைப்பை கவனித்து வந்த அன்புமணி, 2000களின் ஆரம்பத்தில் தான் கட்சி அரசியலுக்குள் வருகிறார். 2004ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து, மாநிலங்களவை உறுப்பினராகி பின், மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதார அமைச்சரானார் அன்புமணி.
பின், 2014-ல் பாஜக கூட்டணியில் பங்கேற்று, தருமபுரி மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பியானார். ஆனால், 2019-ல் அதே தொகுதியிலிருந்து தோல்வியடைந்தார். இதனிடையே, 2016 சட்டமன்ற தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ எனும் பரப்புரையுடன் பாமக தனித்துப் போட்டியிட்டது. அதில், பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் அன்புமணி.
கட்சி அரசியலுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் 2022-ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணியை தேர்வானார். இந்த நிலையில், பாமகவுக்கு யார் தலைவர் என்ற சிக்கல் எழுந்துள்ளது.
“நான் தான் தலைவர்” என ராமதாஸ் கூறி இரு தினங்கள் கழித்து அன்புமணி கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “2022 ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.
கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என கூறியுள்ளார்.
பணிகளில் தலையீடு?
பாமகவில் நடக்கும் இந்த பிரச்னை தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “வன்னியர் சங்கமாக தொடங்கி, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடுக்காக போராடி, மத்திய அமைச்சர் பதவி வரை பெற்று, கட்சியை இந்த நிலைக்கு உயர்த்தியதற்கு ராமதாஸின் பெரும் உழைப்புதான் காரணம், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ராமதாஸின் வயது மூப்பு மற்றும் நவீனமாகி வரும் அரசியல் போக்குக்கு மத்தியில் தலைவரான அன்புமணிக்கு முழு சுதந்திரம் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய முடிவுகளில் ராமதாஸ் மாற்றங்களை செய்துவரும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்” என்கிறார் ப்ரியன்.
அன்புமணியின் சகோதரி மகனான முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்ததால் ஏற்பட்ட சலசலப்பு சற்று அடங்கியிருந்ததாகவே அதையடுத்து வந்த நிகழ்வுகள் காட்டினாலும், மீண்டும் கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ப்ரியன்.
ராமதாஸ்-அன்புமணி இருவருக்கும் இடையே முகுந்தனின் நியமனம் தொடர்பாக எழுந்த மோதலை தொடர்ந்து, கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பாக சமய சமுதாய நல்லிணக்க மாநாடு, பாமக சார்பாக உழவர்கள் கூட்டமும் பெரியளவில் நடைபெற்றதாக குறிப்பிடுகிறார் அவர்.
வரும் மே 11-ம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளதையும் 2026 சட்டமன்ற தேர்தலையும் சுட்டிக்காட்டி, “இந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது” என, நேற்று அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“வெகுகாலம் நீடிக்காது”
அன்புமணி எதிர்ப்பால் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.
“இந்த மாநாட்டில் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் மீண்டும் முன்னிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்துக்குள்ளேயே பொறுப்புகள் இருப்பதை அன்புமணி விரும்பவில்லை.
ஆனால், ராமதாஸ் தரப்பு அவருக்கு எதிர்கேள்வியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி நின்றதை முன்வைக்கிறது. கட்சிப்பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தன் மனைவியை தருமபுரி தொகுதியில் போட்டியிட வைத்ததாக அன்புமணி கூறலாம், அப்படியானால் இளைஞரணி பதவியை தன் மகனுக்கு தரவேண்டும் என அவருடைய மகள் கூறியிருக்கலாம். இப்பிரச்னை அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல” என விளக்குகிறார் ப்ரியன்.
இப்படி ஒரு குடும்பச் சண்டையாகவே தற்போதைய பிரச்னையை பார்ப்பதாகவும் அதிக காலம் இந்த பிரச்னை நீடிக்கும் என தான் கருதவில்லை என்றும் கூறுகிறார் ப்ரியன்.
கூட்டணிக்கான பேச்சுவார்த்தையிலும் பாமக மிக வெளிப்படையாக இருப்பதாகவே தெரிகிறது என்றும் தெரிவித்தார் அவர். பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கும் பாமக பேசலாம் என்றும், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் வரை அக்கூட்டணியில் பாமகவால் இணைய முடியாது என்றும் கூறினார்.
கட்சி உடைவதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பின்னாலேயே இருப்பதாக கூறுகிறார் அவர்.
“தொண்டர்கள் அன்புமணி தலைமையை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர், ஆலோசனை தரும் இடத்தில் மட்டும் ராமதாஸ் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்” என்கிறார் ப்ரியன்.
“கட்சிக்குள் பிரச்னை இல்லை”
இந்த நெருக்கடியான சூழலில், இன்று (ஏப். 13) தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் ராமதாஸும், சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில் அன்புமணி ராமதாஸும் நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனர். பனையூரில் அன்புமணியை முகுந்தன் பரசுராமன் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, “ராமதாஸிடம் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறோம், அவரும் கேட்டிருக்கிறார். ராமதாஸையும் அன்புமணியையும் பாமக மாநாட்டில் ஒன்றாக பார்ப்பீர்கள். தேர்தலில் இருவரும் இணைந்து செயல்படுவோம். விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறினார், பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி.
பாமகவில் தற்போது நடக்கும் பிரச்னை குறித்து பாமக பொருளாளர் திலகபாமா பிபிசி தமிழிடம் பேசுகையில், “மாநாடு தொடர்பான வேலைகளில் தற்போது இருக்கிறேன். எங்களை பொறுத்தவரைக்கும் மக்கள் பணியாற்றுவதற்கான வேலைகள் இருக்கின்றன.” என்றார்.
ராமதாஸ்-அன்புமணி இடையே நிலவும் பிரச்னை குறித்து கேட்டபோது, “அது உங்களுக்குதான் (ஊடகங்கள்) பிரச்னை. நாங்கள் மக்கள் பணியாற்றிதான் அதை நிறுத்த முடியும். தலைவரும் அன்புமணியும் எதிர்பார்ப்பது மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான். அதைத்தான் செய்கிறோம், பிரச்னை ஒன்றுமில்லை” என கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு