பட மூலாதாரம், Getty Images
20 பந்துகளில் 68 ரன்கள், ஏழு பவுண்டரிகள், ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 340.
நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவின் அதிரடி பேட்டிங் இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் விவாதிக்கப்படுகிறது.
‘தி கேம் பிளான்’ என்ற யூடியூப் நிகழ்ச்சியில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல், “நான் போட்டியை பார்க்க ஆரம்பித்த உடனேயே அது முடிந்துவிட்டது” என்று கூறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அபிஷேக் சர்மாவை ஓர் அச்சமற்ற பேட்ஸ்மேன் மற்றும் தற்போதைய சகாப்தத்தின் ‘சிறந்த டி20’ வீரர் என்று அழைக்கின்றனர்.
அபிஷேக் சர்மா 36 சர்வதேச டி20 போட்டிகளில் 38.39 சராசரியுடன் 1267 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 195.22. இந்தக் காலகட்டத்தில், அவர் 86 சிக்ஸர்களையும் 119 பவுண்டரிகளையும் அடித்துள்ளார்.
தொடரின் மூன்றாவது டி20 போட்டியில், நியூசிலாந்து இந்தியாவுக்கு 154 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்தியா 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது.
அபிஷேக் சர்மாவைத் தவிர, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
அபிஷேக் சர்மா வெறும் 14 பந்துகளில் தனது அரைசதத்தை முடித்தார்.
யுவராஜ் சிங் டி20யில் வேகமான அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். டர்பனில் இங்கிலாந்துக்கு எதிரான 2007 டி20 உலகக் கோப்பையில் அவர் 12 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த அதே போட்டி இது.
அபிஷேக் சர்மா குறித்து நகைச்சுவையாக எக்ஸில் பதிவிட்ட யுவ்ராஜ் சிங், “ஆனாலும்12 பந்துகளில் 50 ரன்களை எட்ட முடியவில்லை. நன்றாக விளையாடினாய். தொடர்ந்து சிறப்பாக விளையாடு.” என கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
யுவராஜின் சாதனை பற்றி அபிஷேக் என்ன சொன்னார்?
அபிஷேக் சர்மா தனது ஆரம்ப நாட்களில் யுவராஜ் சிங்கிடம் பயிற்சி பெற்றார். கிரிக்கெட் உலகில் யுவராஜ் சிங், அபிஷேக்கின் ‘குரு’வாகக் கருதப்படுகிறார்.
போட்டிக்குப் பிறகு, யுவராஜ் சிங்கின் சாதனை பற்றி அபிஷேக் சர்மா பேசுகையில், “யாரும் அதைச் செய்வது மிகவும் கடினம். ஆனால் தெரியாது. இந்தத் தொடரிலும் அதற்கு அப்பாலும், பல பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் இது நடக்கலாம்.” என்றார்.
மேலும் பேசிய அபிஷேக் சர்மா, “கிரிக்கெட்டில் நான் கற்றுக்கொண்ட அனைத்தும், யுவராஜ் மற்றும் ரோஹித்திடம் கற்றுக்கொண்டேன். கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பு மகத்தானது.”
முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, “இந்த பேட்ஸ்மேன் தனது இன்னிங்ஸைத் திட்டமிடவில்லை என்று கூறுகிறார். ஆனாலும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அவர் தனது இன்னிங்ஸைத் திட்டமிட்டால், அவரால் சாதிக்க முடியாதது எதாவது இருக்குமா?” என்றார்.
நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான இயன் ஸ்மித், “இந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பயமும் இல்லை. நம்பமுடியாதது” என்று வர்ணனையின்போது கூறினார்.
பாகிஸ்தானிலிருந்து வந்த கருத்து என்ன?
பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ‘தி கேம் பிளான்’ நிகழ்ச்சியில் பேசுகையில், “யுவராஜ் சிங் மாஸ்டர், அபிஷேக் அவரது சீடர். இருவரும் அற்புதமானவர்கள். இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களின் எதிரிகள். அவரது நாட்களில், யுவி எந்த வேகப்பந்து வீச்சாளரின் தாளத்தையும் சீர்குலைப்பார், இப்போது அவரது சீடரும் அதையே செய்கிறார்.”
“அபிஷேக் மற்றும் இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்தால், ஒருநாள் இந்தியா 50 ஓவர் போட்டிகளில் 500 ரன்கள் அடிக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி, “அபிஷேக் போன்ற இந்த இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் அச்சமற்றவர்கள். அவர்கள் எந்த அழுத்தத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. டி20யில் அவர்களுடன் யாரும் போட்டியிட முடியாது. கிளீன் ஹிட்டிங் மூலம் அவர் பெரிய ஸ்கோரைப் பெறும் விதத்தைக் கருத்தில் கொண்டு, அவரை ஒரு மேஸ்ட்ரோ என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.
பாகிஸ்தானிலும் பிரபலம்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் அபிஷேக் சர்மா மிகவும் பிரபலமானவர். 2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் இவர்தான்.
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அபிஷேக் சர்மாவைப் பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர், அவர் தனது அதிரடி பேட்டிங்கால் ஒன்றரை ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் தனி அடையாளத்தை பெற்றுள்ளார்.
கூகுள் தேடல்களைப் பொறுத்தவரை, அவர் 2025 இல் பாபர் அசாம், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூஃப் போன்ற புகழ்பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை முந்தினார்.
2025 இல் அபிஷேக் சர்மா பல அதிரடியான இன்னிங்ஸ்களை விளையாடினார். அந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அவர் 40.75 சராசரியாகவும், 161 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 163 ரன்கள் எடுத்தார். இந்தியா தொடரை 2-1 என வென்றது.
அதே ஆண்டில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து, இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
பட மூலாதாரம், Getty Images
சேவாகின் ஆவேசம், யுவராஜின் நேர்த்தி
கிரிக்கெட் வல்லுநர்கள், சேவாக் ஆவேசத்தையும், யுவராஜ் சிங் நேர்த்தியையும் அபிஷேக்கின் விளையாட்டில் காண்கிறார்கள்.
ரஞ்சி டிராபிதான் அபிஷேக் சர்மா மற்றும் யுவராஜ் சிங்கை இணைத்தது. பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அபிஷேக் மற்றும் சுப்மன் கில்லுக்கு ரஞ்சி டிராபியில் வாய்ப்பு வழங்க விரும்பிய காலம் அது.
அதே சமயம், பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில், நோயிலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருந்த யுவராஜ் சிங், ரஞ்சி டிராபியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது யுவராஜ் சிங்கிடம் 19 வயதுக்குட்பட்ட அணியிலிருந்து இருவர் வருவதாகச் சொல்லப்பட்டது. ஒருவர் தொடக்க வீரர் என்றும், மற்றொருவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்லப்பட்டது.
2025 ஆசியக் கோப்பையில் அபிஷேக் சர்மாவின் அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு, பிபிசி நிருபர் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மாவிடம் பேசினார்.
“யுவராஜ் ஏற்கனவே பந்து வீச்சாளர்கள் இருந்ததால் தனக்கு ஒரு பேட்ஸ்மேன் தேவை என்று கூறினார். ‘இல்லை, இருவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்றார்கள் தேர்வாளர்கள். ஒரு போட்டியில், மூன்று அல்லது நான்கு வீரர்கள் சீக்கிரமே ஆட்டமிழந்தனர். யுவராஜ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அடுத்து அபிஷேக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது அபிஷேக் களமிறங்கி 100 ரன்கள் எடுத்தார்” என்று ராஜ் குமார் சர்மா நினைவு கூர்ந்தார்.
யுவராஜ் சிங்கிடம் பயிற்சி
‘தன்னுடன் பயிற்சி பெறுவீர்களா?’ என்று மைதானத்தில் அபிஷேக்கிடம் யுவராஜ் சிங் கேட்டதாக ராஜ்குமார் சர்மா கூறினார்.
”அதற்கு அபிஷேக், யுவராஜை தனது தெய்வமாகவும், தனது கடவுளாகவும் கருதுவதாகவும், அவரைப் பார்த்து விளையாடக் கற்றுக்கொண்டதாகவும் பதிலளித்தார்.”
அப்போதிருந்து யுவராஜ் சிங் அபிஷேக்கிற்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இன்று இருவரின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில், யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவிடம், “நீ இன்னும் மேம்படவில்லை. சிக்ஸர்களை மட்டும் அடிக்கிறாய், ஆனால் கிரவுண்ட் ஷாட்களையும் விளையாடு,” என்று அறிவுரை கூறுகிறார்.
“யுவராஜ்தான் என் மகனை முழுமையாகக் கவனித்து வருகிறார். என் மகனை வலிமையாக்கியுள்ளார். ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் பயிற்சி அளிக்கிறார் என்றால், அந்த வீரர் எவ்வளவு உயரம் செல்ல முடியும் என்று நினைத்துப் பாருங்கள். இது வெறும் தொடக்கம்தான்” என்று பெருமையுடன் கூறினார் ராஜ் குமார் சர்மா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு