பட மூலாதாரம், Getty Images
போட்டிகள்: 7
சராசரி: 44.85
ஸ்ட்ரைக் ரேட்: 200
அதிகபட்ச ஸ்கோர்: 75
பவுண்டரிகள்: 32
சிக்ஸர்கள்: 19
இது ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மாவின் சாதனையாகும்.
இறுதிப் போட்டியைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்குச் சிறந்த தொடக்கத்தை அளித்தார். இதன் காரணமாக, அவருக்கு ‘தொடரின் சிறந்த வீரர்’ விருது கிடைத்தது.
ஆனால், இன்று நாம் அவரைப் பற்றிப் பேசாமல், அவரது காரைப் பற்றிப் பேசுவோம்.
பரிசாக அவருக்கு ஒரு விலையுயர்ந்த கார் கிடைத்தது. துபையில் அந்தக் காருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால், அவரால் அந்தக் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது.
ஆனால் ஏன் ஓட்டமுடியாது?
ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முன், அது என்ன எஸ்.யு.வி (SUV) கார் என்று தெரிந்து கொள்வோம்.
ஆசிய கோப்பையின் தொடர் நாயகனுக்குக் கிடைத்த கார், ஹவால் ஹெச்9 (Haval H9) ஆகும். இதைச் சீனாவின் கிரேட் வால் மோட்டார் கம்பெனி தயாரித்துள்ளது.
சீனச் சந்தையில் இதன் விலை சுமார் 29,000 முதல் 33,000 டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய்.
ஆனால், அபிஷேக் ஷர்மாவால் இதை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம், இந்தக் கார் இடது கை டிரைவ் (Left Hand Drive) ஆக இருப்பதுதான்.
அதாவது, இந்தக் காரில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இது இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கான விதிமுறைகளுக்கு இணங்கவில்லை.
சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இது வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடு (Right Hand Steering Control – RHD) என்று அழைக்கப்படுகிறது.
பட மூலாதாரம், ANI
அபிஷேக் நாடு திரும்பியுள்ளார், ஆனால் பரிசு கார் இன்னும் வரவில்லை என்ற செய்தி வந்தபோது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர் என்கிறது நியூஸ் 24 செய்தி.
இப்போது கேள்வி என்னவென்றால், ஏன் சில நாடுகளில் வாகனங்கள் வலது பக்கம் செல்கின்றன, சில நாடுகளில் இடது பக்கம் செல்கின்றன?மேலும், வாகனங்களில் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்குமா அல்லது இடது பக்கத்தில் இருக்குமா என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
முதலில், இந்தச் சொற்கள் என்னவென்று புரிந்து கொள்வோம்.
இடது கை போக்குவரத்து (Left Hand Traffic – LHT) மற்றும் வலது கை போக்குவரத்து (Right Hand Traffic – RHT) ஆகியவை இரு திசை போக்குவரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள்.
அதாவது, இரண்டு திசைகளிலும் போக்குவரத்து ஓடும் சாலையில், இந்த இரண்டு விதிகளில் ஒன்று நிச்சயம் இருக்கும்.
இதில், வாகனங்கள் சாலையின் இடது அல்லது வலது பக்கத்தில் ஓடுகின்றன. இது போக்குவரத்து ஓட்டத்திற்கு மிகவும் அவசியம். இது ‘சாலையின் விதி’ (Rule of the Road) என்றும் அழைக்கப்படுகிறது.
வலது மற்றும் இடது கை டிரைவ் என்பது வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டீயரிங் சக்கரம் இருக்கும் நிலையை (Position) குறிக்கிறது.
உதாரணமாக, இந்தியாவைப் போல் இடது கை போக்குவரத்து (LHT) உள்ள நாடுகளில், வாகனங்கள் வலது பக்கத்தில் முந்திச் செல்கின்றன.
மறுபுறம், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஓடும் கார்கள் வலது கை டிரைவ் (RHD) ஆகும். அதாவது, அங்குள்ள கார்களில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். இது இந்தியாவிற்கு நேர் எதிரானது.
உலகில் ஒரே நேரத்தில் இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் கார்களை அனுமதிக்கக்கூடிய நாடு எதுவும் நிச்சயமாக இல்லை.
ஒரு நாட்டில் அனைத்துக் கார்களும் வலது கை டிரைவில் ஓடும்போது, ஒரு இடது கை டிரைவ் கார் குழப்பத்தை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்த விதி எங்கிருந்து வந்தது, எப்போது வந்தது?
முதலில், இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் எப்போது தொடங்கியது என்று தெரிந்து கொள்வோம்.
இதற்காக நாம் ரிவர்ஸ் கியரை போட்டு வரலாற்றுக்குச் செல்ல வேண்டும்.
வெவ்வேறு நாடுகளில் ஓட்டுநர் விதிகள் தீர்மானிக்கப்பட்ட தேதிகள் வேறுபட்டாலும், இந்த வரலாற்றில் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன.
;ஆஸ்க் கார்குரு’வின் (ask carguru) நிறுவனர் மற்றும் ஆசிரியர் அமித் காரே, “பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது, அவர்களுடன் அவர்களது கார்கள் மட்டுமல்ல, கார் ஓட்டும் விதிகளும் பல்வேறு நாடுகளை அடைந்தன” என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
“இதன் காரணமாக, பிரிட்டன் ஆட்சி செய்த பெரும்பாலான நாடுகளில் இன்றும் இடது கை போக்குவரத்து (LHT) உள்ளது. அதாவது, அங்கு வலது கை டிரைவ் (RHD) உள்ளது. இதன் பொருள், காரின் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இடதுபுறத்தில் இல்லை. ஹாங்காங், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தோனீசியா அல்லது பிரிட்டனில்கூட இதுதான் நிலை,” என காரே தெரிவித்தார்.
“பிரிட்டிஷார் இருந்திராத உலகின் பல நாடுகளில் வலது கை போக்குவரத்து (RHT) உள்ளது. அதாவது, காரின் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். அதாவது, இந்தியாவில் ஓடும் கார்களுடன் ஒப்பிடும்போது, சரியாக நேர் எதிர்ப்புறத்தில்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஸ்டீயரிங் கட்டுப்பாடு குறித்து விதிகள் என்ன சொல்கின்றன?
மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் அத்தியாயம் ஏழு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மோட்டார் வாகனமும் வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.
இதன் பிரிவு 120-இல், ‘குறிப்பிட்ட தன்மை கொண்ட’ இயந்திர அல்லது மின் சமிக்ஞை சாதனம் (Mechanical or Electrical Signalling Device) வேலை செய்யும் நிலையில் இருந்தால் தவிர, இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனத்தை பொது இடங்களில் இயக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனங்கள் ஓடவில்லையா?
பட மூலாதாரம், Getty Images
இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனம் தற்போது இந்தியச் சாலையில் ஓடவில்லை என்று கூறுவது தவறாக இருக்கலாம். ஏனெனில், இந்திய அரசு சில விதிவிலக்குகளுக்கு அனுமதி அளிக்கிறது.
ஒரு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனம் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக (R&D) இடது கை டிரைவ் யூனிட்டை இந்தியாவுக்குக் கொண்டு வர விரும்பினால், அதுகுறித்து அரசிடம் அனுமதி கேட்கலாம், அதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோவின் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்கள் ஓடுகின்றன. அமெரிக்க அதிபர் அல்லது வேறு எந்த உயர்நிலை தலைவரும் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களுடன் அவர்களது கார் பாதுகாப்பு வாகனங்களும் வருகின்றன. இந்தக் கார்கள் இடது கை டிரைவ் ஆகும்.
அத்தகைய சூழ்நிலையில், இந்தக் கார்கள் சாலைகளில் செல்லும் போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இது தவிர, சில பழங்காலக் (Vintage) கார்களும் உள்ளன, அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
அவற்றில் சில இடது கை டிரைவ் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. கடந்த காலத்தில், இத்தகைய பல கார்கள் இந்தியாவில் உள்ள பழைய அரச குடும்பத்தினரிடம் இருந்தன.
“இந்தியாவில் நீங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டு வாகனத்தை ஓட்ட முடியாது என்று அர்த்தமல்ல. நீங்கள் ஓட்டலாம், ஆனால் அதற்காக நீங்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது, நிரந்தரமாக அல்ல,” என்று காரே பிபிசி-யிடம் தெரிவித்தார்.
“இடது கை டிரைவ் கொண்ட சில பழைய கார்கள் இன்றும் இந்தியாவில் உள்ளன, ஆனால் அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் மட்டுமே வெளியே எடுக்கப்படுகின்றன அல்லது ஓட்டப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
காரேயின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) அல்லது மோரிஸ் (Morris) போன்ற கார்கள் அனைத்தும் வலது கை டிரைவ் ஆகும், இன்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்கள் அப்படித்தான் இருக்கின்றன.
மறுபுறம், அமெரிக்கா அல்லது ஜெர்மனியிலிருந்து வந்த கார்களின் ஸ்டீயரிங் கட்டுப்பாடு இடதுபுறத்தில் இருந்தது.
நிறுவனங்கள் ஒரே மாதிரியான கார்களைத் தயாரிக்கின்றனவா, இரண்டு வகைகளையும் தயாரிக்கின்றனவா?
பட மூலாதாரம், Getty Images
சர்வதேசச் சந்தையில் தங்கள் தயாரிப்புகளை கொண்டு சேர்க்க, உலகின் அனைத்துப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இடது கை டிரைவ் (LHD) மற்றும் வலது கை டிரைவ் (RHD) ஆகிய இரண்டு வகைக் கட்டமைப்புகளுடன் கார்களைத் தயாரிக்கின்றன.
போக்ஸ்வேகன் குழுமம், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களும், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற வட அமெரிக்க நிறுவனங்களும் இதில் அடங்கும்.
இப்போது ஹோண்டா, ஹூண்டாய், மாஸ்டா, டொயோட்டா, நிஸ்ஸான் போன்ற ஆசிய கார் நிறுவனங்களும் இரண்டு வகைகளில் கார்களைத் தயாரிக்கின்றன. இந்திய நிறுவனங்களும் இதைச் செய்கின்றன.
“கார் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைக்காக ஒரு காரை வடிவமைக்கும்போது, இரண்டு வகையான சந்தைகளிலும் கவனம் செலுத்துகின்றன. இதனால், அவர்கள் தங்கள் கார்களை வலது கை டிரைவ் மற்றும் இடது கை டிரைவ் என இரண்டு வகையான சந்தைகளுக்கும் வழங்க முடியும்” என்று அவர் கூறினார்.
அடுத்த முறை கார் ஓட்ட அமரும்போது, ஸ்டீயரிங் இருக்கும் இடத்தில் இல்லாமல், அருகில் உள்ள இருக்கைக்கு முன்னால் இருந்தால் எப்படி உணருவீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு