நாளை வெளியாகவிருக்கும் ‘அமரன்’ திரைப்படம் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் நாகராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ஜம்மு – காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தமிழ்நாட்டில் இருந்து அசோக் சக்ரா விருது பெற்ற நான்கு பேரில் ஒருவர்.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த ஒரு மோதலில் கொல்லப்பட்டார். இந்த மோதலில் இவருடன் மேலும் ஒரு ராணுவ வீரரும் மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
மேஜர் முகுந்த் வரதராஜன் இடம்பெற்றிருந்த இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபிள்சின் (Rashtriya Rifles) 44வது பிரிவு, 2014 ஆம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. 2012ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தப் பிரிவில் இணைந்திருந்த முகுந்த் வரதராஜன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், எதிர் ஊடுருவல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்ட தாக்குதலில் என்ன நடந்தது என்பதை விரிவாகவே விவரிக்கிறது, வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கான இணையதளமான ஹானர் பாயிண்ட்.
“ஏப்ரல் 25ஆம் தேதி சோபியான் மாவட்டத்தில் இருந்த காஸிபத்ரி கிராமத்தில் ஜெய்ஷ் – ஏ – முகமது இயக்கத்தின் கமாண்டரான அல்டாப் வானி உள்ளிட்ட சில தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. முகுந்த் வரதராஜன் தலைமையிலான அணி அவர்களை வளைத்துப் பிடித்து தாக்க முடிவுசெய்தது. தகவல் கிடைத்த 30 நிமிடத்திற்குள், சம்பந்தப்பட்ட இடத்தை முகுந்த் தலைமையிலான அணியினர் வந்தடைந்தனர். 24 மணி நேரத்திற்கு முன்பாக, இந்தத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருந்ததோடு, ஐந்து பேர் படுகாயமடைந்திருந்தனர்.” என்று ஹானர் பாயிண்ட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தீவிரவாதிகள் இருந்த வீட்டை முகுந்த் வரதராஜன் தலைமையிலான அணி முற்றுகையிட்டது. விரைவிலேயே இருதரப்பிலும் மோதல் வெடித்தது. அது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இந்த நடவடிக்கையின் போது முகுந்த் வரதராஜனுக்கு 2 இடங்களில் குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தன. விரைவிலேயே அவர் ஸ்ரீ நகரில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ஒரு ராணுவ மருத்துவ அதிகாரியின் கரங்களில் உயிரிழந்தார் மேஜர் முகுந்த்.” என்று அவர் உயிரிழந்த தருணத்தை ஹானர் பாயிண்ட் இணையதளம் விவரிக்கிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் மரணமடைந்தபோது அவருக்கு வயது வெறும் 31தான். ஏப்ரல் 12ஆம் தேதி முகுந்தின் பிறந்த நாளுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துச் சொன்ன நிலையில், இரு வாரங்களுக்குள் இப்படி ஒரு துயரச் செய்தியை அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருக்கவில்லை.
முகுந்த் வரதராஜனின் மரணம் குறித்த செய்தி சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் அவரது வீடு இருந்த கிழக்கு தாம்பரம் பகுதியே சோகத்தில் மூழ்கியது. அவரது வீட்டின் முன் பொதுமக்கள், உறவினர்கள், ஊடகத்தினர் குவிய ஆரம்பித்தனர். இத்தனை சோகத்தையும் தாண்டி, தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களை மிகுந்த அமைதியுடன் எதிர்கொண்டார் முகுந்த்தின் தந்தையான வரதராஜன்.
ஞாயிற்றுக்கிழமையன்று இரவு அவரது உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, ஆஃபீசர்ஸ் டிரைனிங் அகாடெமியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு திங்கட்கிழமையன்று, முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை ஆவடிக்கு அருகில் உள்ள பருத்திப்பட்டுதான் முகுந்த் வரதராஜனின் பூர்வீக ஊர். இங்கிருந்த ஆர். வரதராஜன் – கீதா தம்பதிக்கு 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிறந்தார் முகுந்த். இதற்குப் பிறகு, இவர்களது குடும்பம் தாம்பரத்திற்கு இடம்பெயர்ந்தது. வரதராஜன் ஒரு பொதுத் துறை வங்கியில் பணியாற்றிவந்தார்.
ஸ்ரீ சந்திரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்த முகுந்த், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இதழியலில் பட்டயப் படிப்பையும் முடித்தார். இதற்குப் பிறகு சென்னை ஆஃபீசர்ஸ் டிரைனிங் அகாடெமியில் இணைந்து, 2006 ஆம் ஆண்டில் லெப்டினென்டாக(Lieutenant) 22வது ராஜ்புத் ரெஜிமென்டில் இணைந்தார்.
மத்தியப் பிரதேசத்தின் மோவில் உள்ள காலாட்படை பள்ளியிலும் ஐக்கிய நாடுகள் சபையின் படையில் இந்தியாவின் சார்பாக இணைந்து லெபனானிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் ராஷ்ட்ரிய ரைஃபிள்சில் இணைக்கப்பட்டு, காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பணியாற்றிவந்தார் முகுந்த்.
2009 ஆம் ஆண்டில் இந்து ரெபக்கா வர்கீஸ் என்பவரைத் திருமணம் செய்தார் முகுந்த். அவர் மரணமடையும்போது, இவர்களது மகள் அஸ்ரேயவுக்கு 3 வயதே ஆகியிருந்தது.
இந்திய அரசு அவருக்கு அமைதிக் காலத்தில் வழங்கப்படும் உயரிய ராணுவ விருதான அசோக் சக்ரா விருதை அறிவித்தது. தமிழ்நாட்டில் இருந்து இந்த விருதைப் பெற்ற நான்காவது நபர் முகுந்த் வரதராஜன்.
இவருக்கு முன்பாக 1957 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செகண்ட் லெப்டினென்ட் பி.எம். ராமன், 2008ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் தினேஷ் ரகுராமன், 2010 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் ஸ்ரீராம் குமார் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மேஜர் முகுந்துடன் இதே மோதலில் கொல்லப்பட்ட விக்ரம் சிங்கிற்கு, மூன்றாவது உயரிய ராணுவ விருதான சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.