திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் சூடான திருநெல்வேலி அல்வா, வாழைக்காய் சிப்ஸ், முந்திரி பக்கோடா, மோதி லட்டு, ரோஸ் பிஸ்கட், பனீர் டிக்கா, பாதாம், பிஸ்தா, தேநீர், பாசிப்பயறு சுண்டல், வேர்க்கடலை சுண்டல், தட்டாம் பயறு சுண்டல் என 35 வகையான உணவு வகைகள் மற்றும் பானங்கள் இடம்பெற்றிருந்தன.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தனது வீட்டில் நயினார் நாகேந்திரன் அளித்த இரவு விருந்தில் 110 வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேசியபோது, திருடாதே ‘பாப்பா திருடாதே’ என்ற எம்ஜிஆர் திரைப்பட பாடல் மெட்டில், ‘மறக்காதே பூத்தினை மறக்காதே’ என்று பாடலை பாடியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் முதலமைச்சர் ‘ஸ்டாலின் அண்ணாச்சி, உங்களது வாக்குறுதி என்னாச்சி’ என்று கேள்வி கேட்கும் பாணியிலும் அவர் பேசினார்.
மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் அமித்ஷாவுக்கு தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. சமீபத்தில் மறைந்த பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் உருவப்படத்துக்கு மேடையில் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.