பட மூலாதாரம், X/Edappadi K Palaniswami
அ.தி.மு.கவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை கடுமையாக மறுத்திருக்கிறார் அவர். அ.தி.மு.க. கூட்டணியில் என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அ.தி.மு.கவிலும் தொடர்ந்து பல சலசலப்புகள் எழுந்துவந்த நிலையில், செப்டம்பர் 16-ஆம் தேதியன்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையில் நடக்கவிருந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 16-ஆம் ஆம் தேதி இரவில் உள்துறை அமைச்சரை அமித் ஷா சந்தித்துப் பேசிய பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அவர் அங்கே வந்த வாகனம் முன்பே சென்றுவிட்ட நிலையில், வேறொரு வாகனத்தில் உள்துறை அமைச்சரின் இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
உள்துறை அமைச்சரை முதலில் எடப்பாடி கே. பழனிசாமியும் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட எட்டுப் பேர் குழு முதலில் சந்தித்துப் பேசியது.
இதற்குப் பிறகு, பழனிசாமித் தவிர்த்த மற்ற அ.தி.மு.கவினர் விடைபெற்றுக்கொண்டு வெளியேறிவிட, உள்துறை அமைச்சரும் அவரும் சில நிமிடங்கள் தனியாகப் பேசினர்.
பட மூலாதாரம், X/Edappadi K Palaniswami
வெளியான யூகங்கள்
இதற்கு அடுத்த நாள் அவர் சென்னைக்குப் புறப்பட்டபோதும் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் யாரிடமும் பேசவில்லை. சென்னையில் வந்திறங்கிய அவர், அங்கிருந்தபடியே சேலத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்தச் சந்திப்பு குறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி, முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் காரணமாக, அமித் ஷா – எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது குறித்த யூகங்கள் வெளியாக ஆரம்பித்தன.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் மோசமடைந்திருப்பது குறித்தும் அதனை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கலாம் எனப் பேசப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அ.தி.மு.கவின் உள் விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என அமித் ஷா கூறியதாகவும் கே.ஏ. செங்கோட்டையுடனான சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு; அதற்கு மேல் அதற்கு எந்த முக்கியத்துவமும் தர வேண்டியதில்லை என அவர் தெரிவித்ததாகவும் பெயர் குறிப்பிடாத அ.தி.மு.க. நிர்வாகிகளை மேற்கோள்காட்டி வேறு சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இந்த நிலையில்தான் வியாழக்கிழமையன்று காலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி கே. பழனிசாமி. அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து அமித் ஷாவிடம் எதையும் பேசவில்லையெனத் திட்டவட்டமாக மறுத்தார் அவர்.
முதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
‘முகத்தைத் துடைக்கும் காட்சியை திட்டமிட்டு அவதூறு’
“முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் சென்னைக்கு வந்தபோதெல்லாம் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள். ஆளுங்கட்சியான பிறகு, யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்தார்கள்” என்று குறிப்பிட்டவர் தி.மு.க. கூட்டணியில் ஏற்படும் சலசலப்புகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியியிடுவதில்லை எனக் குற்றம்சாட்டினார்.
“சமீபத்தில் காங்கிரஸ் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கிரிஷ்சோடங்கர் பேசும்போது அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் 117 தொகுதிகளை இலக்காகக் கொண்டு காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டுமென என கூறியதாக செய்திகள் வந்துள்ளன. கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி பேசும்போது 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கூட்டணியில் பங்குபெறுகிறோம். சாறை அவர்கள் குடித்துவிடுகிறார்கள். சக்கைதான் கிடைக்கிறது எனப் பேசினார். இதைப்பற்றியெல்லாம் விவாத மேடைகளிலும் வரவில்லை, ஊடகங்களிலும் வரவில்லை” என்று குறிப்பிட்டார்.
பிறகு உள்துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரம் குறித்துபேச ஆரம்பித்தார் எடப்பாடி கே. பழனிசாமி.
“நான் உள்துறை அமைச்சரை சந்திக்கிறேன் என ஊடகங்களிடம் சொல்லிவிட்டுத்தான் சந்தித்தேன். என்னோடு கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் வந்தார்கள். நேரம் அதிகமானதால் என்னோடு வந்தவர்களிடம், நீங்கள் செல்லுங்கள், நான் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.”என்றார்.
மேலும், ”அமித் ஷாவைச் சந்திக்கும்போது அரசு வாகனத்தில்தான் சென்றோம். நான் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது முகத்தை கைக்குட்டையால் துடைத்தேன். இதனை வெளியிடுவது எந்த வகையில் தரமான செயல், இது எப்படி ஏற்புடைய செயலாக இருக்கும்? முகத்தைத் துடைக்கும் காட்சியை திட்டமிட்டு, அவதூறாக செய்தி வெளியிடுவது சரியல்ல. இதை ஏன் பெரிசு படுத்துகிறீர்கள்?” எனக் கேள்வியெழுப்பினார்.
பட மூலாதாரம், X/Edappadi K Palaniswami
டிடிவி தினகரன் பற்றி கூறியது என்ன?
மேலும், “உள்துறை அமைச்சரை சந்தித்தபோது தேசத்திற்காக பாடுபட்டவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடிதம் கொடுத்தோம். பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைந்த பிறகு, அதன் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். நானும் தெளிவுபடுத்திவிட்டேன். பத்திரிகையாளர்கள் எதற்காக இது குறித்து பேச வேண்டும்? உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி கிடைக்க எங்களை ஏன் பயன்படுத்த வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பிறகு, டிடிவி தினகரன் குறித்துப் பேசிய பழனிசாமி, தினகரனுக்கு உள்நோக்கம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“அ.தி.மு.கவைப் பொறுத்தவரை கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம். உள்துறை அமைச்சர் சென்னையில் ஐ.டி.சி. ஹோட்டலில் பேசும்போது பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைந்தது என்பதை அறிவித்தார். இதற்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை, தே.ஜ.கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்’ என்றார். இப்போது மாற்றிப் பேசுகிறார்.”
”டிடிவி தினகரன், 19.11.2011ல் ஜெ. ஜெயலலிதாவால் அ.தி.மு.கவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். அதற்குப் பிறகு, சென்னைக்கே வராமல் இருந்தவர், ஜெ. ஜெயலலிதா மறைந்தபோதுதான் இறுதிச் சடங்கிற்கு வந்தார். அவரெல்லாம் என்னைப் பற்றிப் பேசுகிறார். அவர் என்ன உள்நோக்கத்தோடு பேசுகிறார் என புரியவில்லை. முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா அளிக்க வேண்டுமென சொன்ன பிறகு இப்படிப்பட்ட கருத்தைச் சொல்கிறார்” என்றார்.
இதற்குப் பிறகு அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் பேசப்படவேயில்லையென குறிப்பிட்டார்.
“அ.தி.மு.கவின் பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, அதன் அடிப்படையில் சில பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தோம். கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கினோம்” என்று குறிப்பிட்டவரிடம், இவர்களைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டீர்கள், கூட்டணியிலாவது சேர்ப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர்.
“உட்கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விவகாரம். இதில் பகிரங்கமாக பேச முடியாது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
‘முழுமையாக வெளிப்படுத்தவில்லை’
அ.தி.மு.கவின் விவகாரங்களில் தலையிட வேண்டாமென அமித் ஷாவிடம் வலியுறுத்தினீர்களா எனக் கேட்டபோது, “நான் இல்லையென சொல்லிவிட்டேன். திரும்பத் திரும்ப கேட்காதீர்கள். யாரோ சொல்வதை இங்கே கேட்காதீர்கள்” என்றார்.
இந்த ஒட்டுமொத்த செய்தியாளர் சந்திப்பைப் பொறுத்தவரை, அமித் ஷாவிடம் அ.தி.மு.கவின் உள்விவகாரங்கள் குறித்துப் பேசவில்லை என்று குறிப்பிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவுமே எடப்பாடி கே. பழனிசாமி முயன்றார்.
ஆனால், எடப்பாடி கே. பழனிசாமி நடந்ததை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
“இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் அ.தி.மு.கவின் தரப்பு கருத்துகள்தான் நமக்குக் கிடைக்கின்றன. பா.ஜ.க. தரப்பு இது குறித்து என்ன கூறியது என்பது பற்றிய செய்திகள் வெளியாகவில்லை.” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.
மேலும், ”தேசிய ஊடகம் ஒன்றில், பிரிந்து சென்றவர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என உள்துறை அமைச்சர் சொன்னதாகவும் அதற்கு எடப்பாடி மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. ஊடகங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின்படி, அ.தி.மு.கவின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம், முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமியை முன்னிறுத்துவதிலும் தங்களுக்குப் பிரச்னை இல்லை; அதேபோல பா.ஜ.க. போட்டியிடும் இடங்களைப் பொறுத்தவரை எண்கள் முக்கியமல்ல, வெல்லக்கூடிய தொகுதிகளைத் தரவேண்டுமென குறிப்பிட்டதாகச் சொல்கிறார்கள்.”
”இவையெல்லாம் பேசப்பட்டனவா என்பதை எடப்பாடி கே. பழனிசாமிதான் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், அவர் இதுபற்றி எதுவுமே பேசப்படவில்லை என மறுத்துவிட்டார். இந்த நிலையில், இதற்கு மேல் அதைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் பா.ஜ.கவைவிட இழப்பதற்கு அ.தி.மு.கவிற்குத்தான் அதிகம் இருக்கிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.
அதிமுகவுக்கு பாதிப்பா?
தமிழ்நாட்டில் பா.ஜ.கவைப் பொறுத்தவரை கூட்டணி தொடர்பாக பெரிய நெருக்கடி ஏதும் இல்லை; அ.தி.மு.க. விஜய் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக கூட்டணி வைத்தார்கள். மேலும், அவர்களைப் பொறுத்தவரை தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் அவ்வளவுதான் என்கிறார் டி. ராமகிருஷ்ணன்.
“ஆனால், அ.தி.மு.கவுக்கு வேறு சில பிரச்னைகள் இருக்கின்றன. எடப்பாடி கே. பழனிசாமி தற்போது ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரைச் சேர்க்க மறுப்பதால், அவர்கள் ஒன்றிணைந்து பல தொகுதிகளில் அ.தி.மு.கவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம்.”
2021-ஆம் ஆண்டு தேர்தலில் 29 தொகுதிகளில் அ.தி.மு.கவின் தோல்விக்கு நாங்கள் காரணம் என்கிறார் டி.டி.வி. தினகரன் என கூறுகிறார் அவர்.
”அதேபோல, இப்போதும் செய்யலாம். 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. நிற்கும் தொகுதிகள் தவிர்த்து பிற தொகுதிகளில் ம.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தியது. தி.மு.க. ஆட்சி இழந்ததற்கு அதுமட்டுமே காரணமல்ல என்றாலும், பல தொகுதிகளில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழக்க அது காரணமாக அமைந்தது. அதே போன்ற நிலை இப்போதும் ஏற்படலாம். ஆகவே, இவர்களையெல்லாம் சேர்க்காமல் இருப்பதன் மூலம் தன்னைத்தானே பலவீனப்படுத்திக்கொள்கிறாரா எடப்பாடி என்பதுதான் இப்போது கேள்வி” என்கிறார் அவர்.
மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைப் பொறுத்தவரை சில விஷயங்களைத் தெளிவுபடுத்தவே எடப்பாடி கே. பழனிசாமி டெல்லி சென்றார் என்கிறார்.
“பிரிந்து சென்றவர்களைச் சேர்ப்பது குறித்து இந்த சந்திப்பில் எதுவுமே பேசவில்லை என்கிறார். ஆனால், பழனிசாமி எந்த சூழ்நிலையில் டெல்லி சென்றார் என்பதைப் பார்க்க வேண்டும். எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டுமென கே.ஏ. செங்கோட்டையன் குரல் கொடுத்தார். உடனடியாக அவர் அ.தி.மு.கவின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். இதற்குப் பிறகு டெல்லி சென்ற கே.ஏ. செங்கோட்டையன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். ” என்கிறார்.
இதனால், கே.ஏ. செங்கோட்டையனை முழுமையாக கட்சியிலிருந்து நீக்குவது குறித்து எடப்பாடி கே. பழனிசாமியால் முடிவெடுக்க முடியவில்லை என்கிறார் ப்ரியன்
”ஆகவே, செங்கோட்டையன் தனது டெல்லி சந்திப்புகளின்போது என்ன பேசினார் என்பதைத் தெளிவுபடுத்தவே எடப்பாடியும் டெல்லிக்குச் சென்றார். ஆனால், டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்தபோது இது குறித்தெல்லாம் பேசவில்லையில்லை என மறுக்கிறார். தாங்கள் என்ன பேசினோம் என்பதை அவர் வெளியில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், என்ன பேசப்பட்டது என ஊடகங்கள் யூகிப்பதைத் தவிர்க்க முடியாது” என்கிறார் ப்ரியன்.
விரைவிலேயே கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்தும் நீக்கப்படலாம் என்கிறார் டி. ராமகிருஷ்ணன்.
“ஆனால், அ.தி.மு.கவிலும் சரி, அக்கட்சிக் கூட்டணியிலும் சரி; குழப்பங்கள் இருக்கின்றன. அதனை சரிசெய்தாக வேண்டும். இந்தக் கூட்டணயில் இதுவரை வேறு யாரும் சேரவில்லை. மேற்கு மாவட்டங்களின் சில இடங்களில் பாரம்பரியமாக அ.தி.மு.கவுக்கு வாக்களித்துவந்த பலர், தி.மு.கவை நோக்கிச் செல்வதாக செய்திகள் வருகின்றன. இன்றைய சூழலில் கூடுதலாக சில கட்சிகள் இல்லாமல் அ.தி.மு.கவால் கணிசமாக வெல்ல முடியாது. அதனை அவர் உணர்ந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை” என்கிறார் அவர்.
ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்க்க முடியாது என்பதை எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் அவர்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? “தற்போதைய சூழலில் ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா, ஆகியோர் கட்சிக்குள் வர முடியாது என்பது தெளிவாகிவிட்டது. எடப்பாடியை முதலமைச்சராக முன்னிறுத்தும்வரை தானும் அந்தக் கூட்டணிக்குள் வரப்போவதில்லை என்பதை டிடிவி தினகரனும் தெளிவுபடுத்திவிட்டார். இவர்களுக்கு இனி பா.ஜ.கவும் உதவப்போவதில்லை. கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் அ.தி.மு.க. பக்கமே பா.ஜ.க. நிற்கும். ஆகவே, இனி பா.ஜ.கவை உதவிக்காக சார்ந்திராமல் என்ன செய்ய வேண்டும் என்பதை உடனடியாக முடிவெடுக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்” என்கிறார் ப்ரியன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.