பட மூலாதாரம், Getty Images
இந்தாண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள அமிர்கான் முத்தாகி இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியை துபையில் சந்தித்தார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு பொறுப்பேற்ற பிறகு இருநாடுகள் இடையே நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை இது ஆகும்.
ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தபோது அமிர்கான் முத்தாகி கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து மே மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முத்தாகி இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. தற்போது 5 மாதங்களுக்குப் பிறகு இருவரும் டெல்லியில் சந்திக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
முத்தாகிக்கு வெளியுறவு அமைச்சருக்கான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள சர்தார் படேல் காவல், பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதி பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவிப் பேராசிரியர் வினய் கௌடா, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு போன்ற தலைப்புகளில் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.
காலப்போக்கில் தனது அரசியல் பயணத்தையும், தனது பாணியையும் மாற்றிக்கொண்ட மூத்த தாலிபன் தலைவர்களில் ஒருவர் அமிர் கான் முத்தாகி என அவர் கூறுகிறார்.
ஒரு காலத்தில் தாலிபனின் சித்தாந்தங்களை பறைசாற்றி வந்தவர் முத்தாகி. ஆனால் இன்று அவர் சர்வதேச உரையாடல், ராஜதந்திரம் மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்பின் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் அமைப்பின் முகமாக மாறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.
யார் இந்த அமிர்கான் முத்தாகி?
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் வெளியுறவு அமைச்சகத்தின்படி , அமிர் கான் முத்தாகி மார்ச் 7, 1970 அன்று ஆப்கானிஸ்தானின் சர்குன் கிராமத்தில் பிறந்தார்.
இந்த கிராமம் ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் நாட் அலி என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது.
முதலில் இந்த கிராமத்தில் உள்ள மசூதியில் தனது ஆரம்ப கல்வியை பயின்றார்.
ஆனால் 1978 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்தது. கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக, அப்போதைய சோவியத் யூனியன் தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. பின்னர் 9 வயதில், முத்தாகி பாகிஸ்தானுக்கு வந்தார்.
இங்கு ஆப்கன் அகதிகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு பள்ளிகளில் மதம் மற்றும் பாரம்பரிய அறிவியலைப் பயின்றார்.
தொடக்கத்தில் ஹெல்மண்டில் கம்யூனிச ஆட்சிக்கு எதிரான முஜாஹிதீன்கள் அல்லது இஸ்லாமிய போராளிகளின் ஜிஹாத்தில் முத்தாகி தீவிரமாக இருந்தார்.
1979 முதல் 1989 வரை சோவியத் ராணுவத்திற்கும் முஜாஹிதீன்களுக்கும் இடையிலான போர் நீடித்தது. சோவியத் ராணுவம் கடைசியில் பின்வாங்கியது.
பட மூலாதாரம், Getty Images
சோவியத் யூனியன் தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றபோது, அங்கு தாலிபன்கள் தோன்றினர்.
முஜாஹிதீன்களின் பல்வேறு பிரிவுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த நேரம் அது.
ஆப்கன் முஜாஹிதீன் அல்லது இஸ்லாமிய போராளிகள் குழு, அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புகளின் ஆதரவுடன் தாலிபனைத் தொடங்கியதாக வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் வலைத்தளம் குறிப்பிடுகிறது.
பாகிஸ்தான் மதரஸாக்களில் படிக்கும் பஷ்டூன் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர்களும் இந்தக் குழுவில் இணைந்தனர்.
பஷ்தோ மொழியில், மாணவர்கள் தாலிபன்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
நாட்டில் முஜாஹிதீன்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே 4 ஆண்டுகளாக நடந்த மோதல்கள், இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து குற்றங்கள், ஊழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் மத்தியில் தாலிபன்கள் பொதுமக்களின் ஆதரவைப் பெறத் தொடங்கினர்.
தாலிபன் அரசின் முதல் கலாசாரத்துறை அமைச்சர்
பட மூலாதாரம், Getty Images
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றத் தொடங்கினர்.
1994ஆம் ஆண்டு அவரது துருப்புகள் கந்தஹாரை அடைந்தனர். பின் 1996ல் ஆப்கன் தலைநகர் காபுலை கைப்பற்றினர்.
அதே ஆண்டில் முல்லா முகமது ஓமர் தலைமையில் ஆப்கானிஸ்தான் ஓர் இஸ்லாமிய எமிரேட் ஆக அறிவிக்கப்பட்டது.
இந்த தாலிபன் இயக்கத்தில் முத்தாகி முக்கிய பங்கு வகித்தார்.
1994ல் தாலிபன் கந்தஹாரை கைப்பற்றிய பிறகு, இவர் அங்கிருந்த வானொலி நிலையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
தாலிபன் உயர்மட்ட குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
1995ஆம் ஆண்டில் கந்தஹாரின் தகவல் மற்றும் கலாசாரத் துறையின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
தாலிபன்கள் காபுலைக் கைப்பற்றிய ஓர் ஆண்டில் இவர் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளராகவும், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டின் தகவல் மற்றும் கலாசாரத்துறையின் செயல் அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
2000ஆம் ஆண்டில் கல்வி அமைச்சரானார். அதே ஆண்டு அக்டோபரில் 9/11 தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது, டிசம்பர் முதல் வாரத்தில் தாலிபனின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
தாலிபன் தலைவர்கள் சிலர் அகதிகளாக பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர், சிலர் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் தங்கி போரை தொடர்ந்தனர்.
தோஹா ஒப்பந்தத்தில் முத்தாகியின் பங்கு
பட மூலாதாரம், Getty Images
“2001 முதல் 2021 வரை இரு தசாப்தங்களாக தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் போராட்டக் குழுவாக செயல்பட்டனர். இந்த காலகட்டத்தில் முத்தாகி தாலிபன்களுக்காக சில உத்திகளை வகுத்து நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் அவர் உயர் அதிகாரிகளில் முக்கிய நபராக சேர்ந்து கத்தாரில் உள்ள தாலிபனின் அரசியல் குழுவில் ஒரு பகுதியாக ஆனார்.” என நியூயார்க் டைம்ஸ் முத்தாகி பற்றி குறிப்பிட்டுள்ளது.
மேலும் “தாலிபனின் அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் ஆணையத்திற்கு முத்தாகி தலைமை தாங்கினார். இது ஆப்கன் ராணுவம் மற்றும் காவல்துறையினரை அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ளவும் அவர்களின் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் தூண்டியது” என்றுது.
2018ஆம் ஆண்டில் தலிபான்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தோஹாவில் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறுவதாக உறுதியளித்தது. மேலும் தாலிபன்கள் அமெரிக்க படைகள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.
தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தைகள் முல்லா அப்துல் கானி பரதார் தலைமையில் நடைபெற்றது, இந்த பேச்சுவார்த்தையில் முத்தாகி முக்கிய பிரதிநிதியாக இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
“2021ஆம் ஆண்டு தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக முத்தாகி நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து, அவர் ஐக்கிய நாடுகள் சபை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பிராந்திய கூட்டங்கள், இரான், சீனா, துருக்கி மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் என பல்வேறு சர்வதேச மன்றங்களில் தாலிபன் ஆட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்” என வினய் கவுட் தெரிவித்தார்.
“முத்தாகி ஒரு நல்ல பேச்சாளர் என்றும், அவரது கருத்துக்களை மற்றவர்களை நம்ப வைப்பதே அவரது கலை” என பிபிசி உலக சேவையின் மல்டிமீடியா எடிட்டரும், லண்டனில் உள்ள சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் இணை உறுப்பினருமான தாவூத் அஸாமி கூறுகிறார்.
தடை செய்யப்பட்ட முத்தாகி
2001 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அமிர் கான் முத்தாகியை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.
அப்போது அவர் தாலிபன் அரசின் கல்வி அமைச்சராக இருந்தார். மேலும் தாலிபன்கள் அல்-கொய்தாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
முத்தாகி உட்பட அனைத்து உயர்மட்ட தாலிபன் தலைவர்களும் ஐ.நா.வின் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
முத்தாகிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தற்போது 3 தடைகள் விதித்துள்ளது.
அவை அவர் எந்த நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக பயணிக்க முடியாது. அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன மேலும் அவருக்கு எந்த ஆயுதங்களோ அல்லது ராணுவ உபகரணங்களோ வழங்கப்படாது என்பதே ஆகும்.
இருப்பினும், இந்தியாவுக்கு வருகை தர முத்தாகிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் குழு பயண விலக்கு அளித்துள்ளது.
இந்திய பயணம் குறித்து எழும் கேள்விகள்:
பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், முத்தாகியின் இந்திய பயணம் மற்றும் அவருக்கு இங்கு கிடைக்கும் விருந்தோம்பல் குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
உதாரணமாக, ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் ஹபீப் கான் தனது எக்ஸ் தளத்தில், “அன்புள்ள இந்தியா, தாலிபன் அதிகாரிக்கு விருந்தோம்பல் அளிப்பது, ஆப்கனுக்கு செய்யும் துரோகம். மேலும் பள்ளியிலிருந்து தடை செய்யப்பட்ட சிறுமிகளின் முகத்தில் அறைவதற்கு சமம். பயங்கரவாதம் மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு ஆட்சியைப் புகழ்ந்து பேச வேண்டாம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
தாலிபனின் முதல் பதவிக்காலத்தின் தொடக்கத்தில் தாலிபன்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மற்றும் கலாச்சார துஷ்பிரயோகங்கள் பற்றிய பல குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின.
இரண்டாவது ஆட்சியிலும் நிலைமை அப்படியே உள்ளது. பெண்கள் பள்ளி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் எழுதிய புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு