பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கல்வித் துறையை அகற்றும் பணியைத் தொடங்கும் நோக்கில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இது டிரம்பின் குடியரசு கட்சியின் நீண்டகால இலக்காக உள்ளது. கல்வித் துறையை முழுமையாக அகற்றுவது சாத்தியமில்லை. ஏனெனில் அத்தகைய முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.
டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு வந்த பிறகு, கல்வித் துறை தனது பணியாளர்களில் பாதி பேரை நீக்க திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளது.
1979ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த துறை, பொதுப் பள்ளிகளுக்கான நிதியுதவியை மேற்பார்வையிடுகிறது, மாணவர் கடன்களை நிர்வகிக்கிறது, மேலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவும் திட்டங்களை செயல்படுத்துகிறது.
இனம், பாலியல் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளை இளைஞர்களுக்குக் கற்பிப்பதாக கல்வித்துறை மீது டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்வித் துறையின் செயல்பாடுகள் யாவை?
பரவலாக இருக்கக்கூடிய ஒரு தவறான கருத்து என்னவென்றால், கல்வித் துறை அமெரிக்கப் பள்ளிகளை இயக்குகிறது மற்றும் பாடத்திட்டங்களை நிர்ணயிக்கிறது என்பதுதான். ஆனால் அந்த பொறுப்பு உண்மையில் மாகாணங்களுக்கும், உள்ளூர் கல்வி மாவட்டங்களுக்கும் சொந்தமானது.
கல்வித்துறை மாணவர் கடன் திட்டங்களை மேற்பார்வையிடுகிறது மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர உதவும் பெல் மானியங்களை நிர்வகிக்கிறது.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கும், வறுமையில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களுக்கும் கல்வித்துறை உதவுகிறது.
மேலும், மத்திய அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இனம் அல்லது பாலின அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்க உருவாக்கப்பட்ட சிவில் உரிமைச் சட்டங்களை கல்வித் துறை அமல்படுத்துகிறது.
கல்வித் துறையின் பட்ஜெட் என்ன, எத்தனை பேர் பணி புரிகிறார்கள்?
2024ம் நிதியாண்டில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 238 பில்லியன் டாலர் ஆகும். இது மொத்த மத்திய பட்ஜெட்டில் 2 சதவீதத்திற்கும் குறைவானது.
கல்வித் துறையில் சுமார் 4,400 பணியாளர்கள் உள்ளனர். டிரம்ப் நிர்வாகம் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தத் துறை தனது பணியாளர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் திட்டங்களை அறிவித்தது.
அமெரிக்கப் பள்ளிகளுக்கான பெரும்பாலான பொது நிதி, மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்கங்களிடமிருந்து வருகிறது.
கல்வித் தரவு முன்முயற்சி (Education Data Initiative) வெளியிட்ட மதிப்பீட்டின்படி, 2024-ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விக்காக மொத்தமாக 857 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவழித்துள்ளது. ஒரு மாணவருக்கு சராசரி செலவு 17,280 டாலர் ஆகும்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பால் கல்வித் துறையை நீக்க முடியுமா?
சுயமாக அவரால் கல்வித் துறையை நீக்க இயலாது.
டிரம்ப் அந்தத் துறையை அகற்ற நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதோடு மட்டுமல்லாது, செனட் சபையில் உள்ள 100 உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 60 பேரின் ஆதரவையும் பெற வேண்டியிருக்கும்.
செனட் சபையில் குடியரசுக் கட்சியினர் 53-47 என்ற பெரும்பான்மையுடன் இருக்கும் நிலையில், அந்த துறையை முற்றிலுமாக நீக்க குறைந்தது ஏழு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் டிரம்பின் முடிவுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஆனால், இந்த ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது..
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட, டிரம்ப் தேவையான ஆதரவைப் பெற போராடலாம்.
கடந்த ஆண்டு, கல்வித் துறையை நீக்குவதற்கான வாக்கெடுப்பு, மற்றொரு மசோதாவின் திருத்தமாக முன்மொழியப்பட்டது. அந்த வாக்கெடுப்பில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 60 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து அதற்கு எதிராக வாக்களித்தால், இந்தத் தீர்மானம் வெற்றி பெறவில்லை.
ஆனால், டிரம்ப் தனது திட்டத்தின்படி துறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
துறையை “அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்”, அதிகாரத்தை மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு மாற்றவும் கல்விச் செயலர் லிண்டா மக்மஹோனை டிரம்பின் நிர்வாக உத்தரவு அறிவுறுத்துகிறது.
“அமெரிக்க மக்கள் நம்பியிருக்கும் சேவைகள், திட்டங்கள் மற்றும் நலன்களை திறம்பட மற்றும் தடையின்றி வழங்குவதை” உறுதிசெய்யவும் அந்த நிர்வாக உத்தரவு அறிவுறுத்துகிறது.
மத்திய அரசு மானியங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்தும் மாணவர் கடன்கள் உள்ளிட்டவை மற்ற அரசுத்துறைகளுக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, இந்த உத்தரவில் தெளிவான விளக்கம் இல்லை.
இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமான சவால்களை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்படும் நிலையில், அதனை செயல்படுத்தும் காலம் அல்லது காலக்கெடு குறித்தும் இந்த உத்தரவு குறிப்பிடவில்லை.
சமீப வாரங்களில் டிரம்ப் பிற அரசுத் துறைகளைச் சுருக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானதா என்பது குறித்து கேள்விகள் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
மாணவர் கடன்கள் என்ன ஆகும்?
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன்களின் நிர்வாகம் , கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றது.
“கல்வித் [துறை] கடன்களை கையாள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, அது அவர்களின் வேலை இல்லை” என்று டிரம்ப் கூறினார்.
40 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் எடுக்கப்பட்ட, 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கல்விக் கடன்களை உள்ளடக்கிய இந்த நிர்வாகம், அமெரிக்காவின் கருவூலத் துறைக்கு மாற்றப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய கடன்கள் மற்றும் திட்டத்தின் எதிர்காலம் குறித்து நிர்வாக உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
“கல்வித் துறை ஒரு வங்கி அல்ல. ஆகையால், வங்கி சார்ந்த செயல்பாடுகளை, அமெரிக்க மாணவர்களுக்கு சிறப்பாக சேவை செய்யக்கூடிய மற்றொரு நிறுவனத்திற்குத் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, துறையின் கல்விக் கடன் திட்டம் வேறு ஒரு நிறுவனத்திற்குப் மாற்றப்படலாம் என்பதைக் குறிக்கிறது.
இறுதியில் என்ன நடந்தாலும், கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் கடன் செலவைக் குறைக்கவும், சில கடன்களை ரத்து செய்யவும் மேற்கொண்ட முயற்சிகளை, நீதிமன்ற தீர்ப்புகளும் டிரம்பின் கொள்கைகளும் மாற்றியமைத்துள்ளன.
குடியரசுக் கட்சியினர் ஏன் கல்வித்துறையை அகற்ற விரும்புகிறார்கள்?
கல்வித் துறையை அகற்றும் யோசனை, அது உருவாகிய காலம் முதல் குடியரசுக் கட்சி உறுப்பினர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
1980ம் ஆண்டின் அதிபர் பிரசாரத்தின்போது, கல்வித் துறையை அகற்ற வேண்டும் என்று ரொனால்ட் ரீகன் வலியுறுத்தினார்.
கல்விக் கொள்கையை மையப்படுத்துவதை வரலாற்று ரீதியாக குடியரசுக் கட்சியினர் எதிர்த்து வந்துள்ளனர். கல்வி தொடர்பான முடிவுகளை ஒவ்வொரு மாகாண மற்றும் உள்ளூர் அமைப்புகள் தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் நம்புகிறார்கள்.
மாணவர்களின் பெற்றோர், பள்ளிகளை தேர்தேடுப்பதை விரிவுப்படுத்த டிரம்பின் கூட்டாளிகள் விரும்புகின்றனர்.
இதனால், மாணவர்களும் அவர்களது குடும்பங்களும், பொதுப் பள்ளிகளுக்குப் பதிலாக தனியார் அல்லது மத அடிப்படையிலான பள்ளிகளைத் தேர்வுசெய்ய, பொதுப் பணத்தைப் பயன்படுத்த முடியும்.
பாலினம் மற்றும் இனம் சார்ந்த விவகாரங்களில் “விழிப்புணர்வு” அளிக்கும் அரசியல் சிந்தனைகள் என குடியரசு கட்சியினர் அழைக்கும் கருத்துக்களை கல்வித் துறை குழந்தைகளிடம் திணிப்பதாக டிரம்ப் கட்சியினர் சமீபத்தில் குற்றஞ்சாட்டினர்.
கல்வித் துறையின் செயல்பாடுகள் பிற துறைகளால் கையாளப்பட வேண்டும். உதாரணமாக, சிவில் உரிமை மீறல்களை கையாளுவது நீதித்துறையின் பொறுப்பு என்று குடியரசு கட்சியினர் வாதிடுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு