0
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கல்வி, வேலை மற்றும் தொழில் நோக்கங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள், அங்கு நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். கிரீன் கார்டு என்பது ஒரு வெளிநாட்டவருக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமாக நிரந்தர குடியுரிமை வழங்கும் முக்கிய அனுமதியாகும்.
இதுவரை, அமெரிக்க குடியுரிமை பெற்ற நபரை திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு கிரீன் கார்டு பெறுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. எனினும், குடியுரிமை பெறுவதற்காக மட்டும் போலி அல்லது வசதிக்காக திருமணங்கள் நடைபெறுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் பின்னணியில், குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான அணுகுமுறையை பின்பற்றிவரும் அதிபர் டிரம்ப் நிர்வாகம், திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு வழங்கலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க குடிமகனை திருமணம் செய்துகொள்வது மட்டும் கிரீன் கார்டு கிடைப்பதற்கான உத்தரவாதமாக இருக்காது என அமெரிக்க குடிவரவு துறை தெளிவுபடுத்தியுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தற்போது, திருமணத்தின் உண்மைத்தன்மை குறித்து கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருமணம் குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே நடைபெற்றதா அல்லது உண்மையான குடும்ப வாழ்க்கை நடத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விரிவான விசாரணைகளை நடத்துவார்கள்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால், அந்த திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பம் சிக்கலுக்கு உள்ளாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலை, படிப்பு அல்லது வசதி காரணமாக தனித்தனியாக வசிப்பதாக கூறப்படும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் இணைந்து வாழ்வதே திருமணத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய ஆதாரமாக கருதப்படும் என்றும், அதுவே திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு பெறுவதற்கான அடிப்படை நிபந்தனையாகும் என்றும் குடிவரவு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.