பட மூலாதாரம், Getty Images
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அடுத்து கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில், மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான வர்த்தகப் போரில் கனடாவை வெற்றிபெறச் செய்யப் போவதாக மார்க் உறுதி அளித்துள்ளார்.
கனடாவின் மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் தலைவராக மார்க் கார்னி இருந்துள்ளார். லிபரல் கட்சியிலிருந்து அடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த மூன்று பேரை பின்னுக்குத்தள்ளி அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா மீது விதித்த வரிகளையும், அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடாவை மற்ற விரும்புவதாக கூறியதையும் பிரதமர் பதவிக்காக போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆற்றிய உரையில் மார்க் கார்னி கடுமையாக விமர்சித்தார்.
“ஹாக்கியைப் போலவே வர்த்தகத்திலும் கனடாதான் வெற்றி பெரும்”, என்று அவர் கூறினார்.
அடுத்து வரும் நாட்களில் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்பார் என்றும் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை இவர்தான் வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமராக தேர்வாகியுள்ள கார்னி, எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்ததில்லை.
கனடாவில் விலைவாசி உயர்ந்ததாலும் வீட்டு வசதி சார்ந்த பிரச்னைகளாலும் அந்நாட்டு மக்களிடையே ட்ரூடோ மீதான ஆதரவு சரிந்தது. இதன் விளைவாக பதவியில் இருந்து விலகும் படி ட்ரூடோவுக்கு கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்தது.
இதனால் கடந்த பத்தாண்டுகளாக கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம், லிபரல் கட்சியில் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணி தொடங்கியது.
கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த வாக்கெடுப்பில் தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டை வீழ்த்தி, மார்க் கார்னி 85.9% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் சுமார் 1,600 கட்சி ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கே கார்னிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் வாக்களித்ததாக லிபரல் கட்சி தெரிவித்திருந்தது.
கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசை வழிநடத்த இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டி தேர்தலை அறிவிப்பை வெளியிடலாம் அல்லது இந்த மாத இறுதியிலே எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளலாம்.
ட்ரூடோ பதவியில் இருந்து விலகியதிலிருந்து லிபரல் கட்சி பல்வேறு திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது. அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி மற்றும் நாடு இணைப்பு மிரட்டல்களால் கனடா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளில் பியர் போய்லெவ்ரா தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் கட்சியை விட 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது.
அதன் பிறகு லிபரல் கட்சி நல்ல முன்னேற்றம் கண்டது. சில கணக்கெடுப்புகளில் இரு கட்சிகளும் கிட்டதட்ட ஒரே மாதிரியான வாக்குகளை பெற்றிருந்தன.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக கனடா இருக்கிறது. இந்நிலையில் கனடா மீது டிரம்ப் விதித்த வரிகளை ”நியாமற்ற வரி” என மார்க் கார்னி கூறினார்
கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவின் 25% வரி அமலுக்கு வந்தது. ஆனால் சில தினங்களிலே ஏற்கனவே கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்த பொருட்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டது.
கனடாவின் பொருளாதாரத்தை சீர்க்குலைக்க டிரம்ப் முயற்சிப்பதாக ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதித்தது.
“கனடா பணியாளர்கள், குடும்பங்கள் மற்றும் தொழில்கள் மீது டிரம்ப் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் அவரை வெற்றியடைய விடமாட்டோம்”, என்று பிரதமராக தேர்வான பின்பு தனது வெற்றி உரையில் கார்னி தெரிவித்தார்.
”அமெரிக்கா எங்களுக்கு மரியாதை காட்டும் வரை” தனது அரசாங்கம் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளைத் தொடரும் என்று அவர் கூறினார்.
கனடாவின் பொருளாதாரம் பெரும்பான்மையாக அமெரிக்காவைச் சார்ந்தவையாக இருப்பதால், டிரம்பின் இறக்குமதி வரிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், கனடா பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் அபாயம் உள்ளது.
“இது கனடாவின் இருண்ட நாட்கள். இதற்கு காரணமாக இருந்த நாட்டை நாம் இனி நம்ப முடியாது,” என்றார் கார்னி.
“இந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீண்டு வருகிறோம், ஆனால் இதிலிருந்து கற்ற பாடங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. வரவிருக்கும் கடினமான நாட்களில் நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்”, என்றார் மார்க் கார்னி.
பட மூலாதாரம், Getty Images
கன்சர்வேட்டிவ் கட்சியைப் பற்றி பேசிய கார்னி, “பியர் போய்லெவ்ராவின் கொள்கைத் திட்டங்கள் நம்மை பிரித்து, நமது நாட்டை வேறொருவர் கைப்பற்ற வழிவகுக்கும்,” என்று தெரிவித்தார்.
“ஏனென்றால் அவர் டொனால்ட் டிரம்பை வணங்குபவர், அவரை எதிர்த்து நிர்ப்பவர் இல்லை”.
கார்னி மேடை ஏறும் முன்னர், 12 ஆண்டுகளாக லிபரல் கட்சியின் தலைவராக இருந்த ட்ரூடோ தனது அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருக்கமான உரையுடன் விடைபெற்றார்.
டிரம்பின் ஆட்சியில் கனடா ”இருப்பு சார்ந்த சவால்களை” எதிர்கொண்டதாக அவர் கூறினார்
கார்னே மற்றொரு ஜஸ்டின் ட்ரூடோவைப் போன்றவர் தானே தவிர ஒரு மாற்றத்திற்கான நபர் அல்ல என்று கன்சர்வேட்டிவ் கட்சியினர் குற்றம்சாட்டினார்.
தலைவரை மட்டும் மாற்றியமைத்து நான்காவது முறை ஆட்சி அமைக்க லிபரல் கட்சி முற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மெண்ட் எனப்படும் முதலீடு சார்ந்த நிறுவனத்தின் தலைமையகத்தை டொரோண்டோவிலிருந்து நியூயோர்க்கிற்கு மாற்றுவதில் தனது பங்கு தொடர்பாக பொய் கூறியதாக கார்னி மீது கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம்சாட்டியது.
நிறுவனத்தை இடமாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவை, தான் அந்த நிறுவனத்தின் போர்டில் இருந்து வெளியேறியப் பிறகு பங்குதாரர்கள் மேற்கொண்டார்கள் என்று கார்னி தெரிவித்திருந்த நிலையில் இடமாற்றம் தொடர்பான முடிவை கடந்த டிசம்பர் மாதமே அவர் பரிந்துரைத்தது தொடர்பான கடிதம் ஒன்று வெளிவந்தது.
நாடாளுமன்றத்தில் 120 இடங்களை கொண்டிருக்கும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, 33 இடங்களுடன் இருக்கும் பிளாக் குவபெக்வா, 24 இடங்களைக் கொண்ட நியூ டெமாக்ரட்ஸ் ஆகிய கட்சிகளை வரும் தேர்தலில் லிபரல் கட்சி எதிர்கொள்ள வேண்டும்.
கார்னியின் முக்கிய கொள்கைகள்
லிபரல் கட்சியை இடது சாரியாக மாற்றியமைத்த ட்ரூடோவிடம் இருந்து மாறுபட்டு, இவர் மையவாத கருத்துக்களைக் கொண்டவராக இருக்கின்றார்.
சமீப ஆண்டுகளில் பல அரசியல் தடங்கலை சந்தித்த எரிவாயு குழாய் திட்டங்களை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
வீட்டு வசதி மற்றும் மாசு ஏற்படுத்தாத எரிசக்தி திட்டங்களுக்கான முதலீடு திட்டங்கள் அதிகரிக்கப்படும், கனடாவின் மாகணங்களுக்குள் இருக்கும் தடைகளை நீக்கி தாராளமயமாக வர்த்தகம் செய்யவும், அமெரிக்காவிடம் இருந்து விலகி புதிய பொருளாதாரத்தை அமைக்கவும் வழிவகை செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ட்ரூடோவின் கீழ் 40% விரிவடைந்த மத்திய அரசாங்கத்தின் அளவை கட்டுப்படுத்தபோவதாக பிரதமர் பதவிக்கான போட்டியின்போது, கார்னி கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.