பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது.
இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை.
வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
“நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட பேட்டியில் கூறினார். “இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆவணத்தை ரஷ்யா தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆவணம் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளை சிதைக்கக்கூடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஜேசன் க்ரோ, இந்த உத்தி “உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைக்கு பேரழிவு” என்று கூறினார்.